புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியைச் சேர்ந்த பெண்கள் நூறு வேலை வாய்ப்புத் திட்டத்தில், கல்லாலங்குடி நாயக்கர் குடியிருப்பில் சாலை ஓரத்திலிருக்கும் வரத்து வாரியை வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, மண்ணுக்குள் இருந்து ஒரு முடிச்சு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த முடிச்சினை அவிழ்த்துப் பார்த்தபோது, அதில் 10 காசுகள், 44 குண்டுமணிகள் உட்பட 80 கிராம் உலோக ஆபரணங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, அதனை எடுத்த பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மலர் பழனிச்சாமியிடம் அதை ஒப்படைத்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனைப் பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ மற்றும் தாசில்தாருக்குத் தகவல் கொடுத்தார். தொடர்ந்து, அந்த ஆபரணங்களை கிராம மக்கள் சிலருடன் சேர்ந்து ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகியிடம், ஊராட்சி மன்றத் தலைவர் ஒப்படைத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட தாசில்தார், அவற்றை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில், காப்பாட்சியரின் வசம் ஒப்படைத்திருக்கிறார். தங்களுக்குக் கிடைத்த புதையலைக் கிராம மக்கள் மற்றும் பெண்கள் பத்திரமாக அரசிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
இதுபற்றி, ஆபரணங்களைக் கண்டெடுத்த பெண்களிடம் கேட்டோம். ``எங்க பகுதியில இருக்க வரத்து வாரியை வெட்டிக்கிட்டு இருந்தோம். அப்ப முடிச்சி மாதிரி ஒண்ணு தட்டுப்பட்டுச்சு. பில்லி, சூனியம் வச்ச பொட்டலமா இருக்குமோன்னு மொதல்ல பயந்தோம். உடனே பணித்தளப் பொறுப்பாளர்கிட்டயும், தலைவர்கிட்டயும் தகவல் சொன்னோம். அப்புறம் அவங்க எல்லாரும் வந்து பார்த்தாங்க. எல்லாரோட முன்னிலையிலயும் பிரிச்சிப் பார்த்தப்போதான், தாலியில கோர்க்கிற 44 குண்டு மணிகள், 10 காசுகள் அதுல இருந்துச்சு. அந்தக் காசுல 22 கேரட் கோல்டு 1996னு அச்சிடப்பட்டிருந்துச்சு. உடனே, அதை தாசில்தார்கிட்ட ஒப்படைச்சிட்டோம்" என்றனர்.

இதுபற்றி தாசில்தார் செந்தில் நாயகியிடம் கேட்டபோது, ``கிராம மக்கள் 79 கிராம் ஆபரணங்களை ஒப்படைத்தனர். அதனை, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைத்திருக்கிறோம். பார்ப்பதற்கு தங்க ஆபரணங்கள் மாதிரிதான் தெரிகிறது. ஆனாலும், தங்க ஆபரண அணிகலன்களா,செம்பு அல்லது வேறு உலோகத்திலான அணிகலன்களா என்பது குறித்து அவர்களின் ஆய்வு முடிவிலேயே தெரியவரும்" என்றார்.