'தோழர்' என்ற வார்த்தையின் வரலாறும் தெரியாது 'தோழமை'யை அறிந்திருக்க மனித நேயமும் கிடையாது - நல்லகண்ணு ஆவேசம்

நல்லகண்ணு

தேனி : "தோழர் என்று சொல்லிக்கொண்டாலே துரோகி என்பதை போல புதிய அவதூறுகளை போலீஸார் கிளப்புகிறார்கள். அவர்களுக்கு தோழர் என்ற வார்த்தையின் வரலாறும் தெரியாது. தோழமை குறித்து தெரிந்திருக்க மனித நேயமும் இல்லை," என தேனியில் நல்லகண்ணு தெரிவித்தார்.

தேனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியதாவது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மிகப்பெரிய அறப்போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு ஒரு குறியீடாக இருந்தது. அதோடு காவிரி நீர் பிரச்னை, விவசாய பாதிப்பு, வறட்சி, தமிழக அரசுக்கு உள்ள பாதிப்பு, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளை குவிமையமாக வைத்து இந்த போராட்டம் நடந்தது. நாடே அதிசயிக்கும் வகையில், மிக அமைதியாக நடந்தது போராட்டம். எந்த சலசலப்பும் இல்லை. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாய் நடந்தது இந்த போராட்டம்.

நல்லகண்ணு

ஒரு வாரம் மிக அமைதியாக, எழுச்சியாக நடந்த போராட்டத்தை, நாடே வேதனைப்படும் அளவுக்கு அடக்குமுறையை கட்டவிழ்த்து போலீஸ் வேட்டையாடி இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. அரசு முறையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துப்பேசி, என்ன நடக்கிறது? என்ன செய்யப்போகிறோம் என்பதை எல்லாம் சொல்லி, நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என முறையாக பேசித்தீர்த்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் நாடே வேதனைப்படும் அளவுக்கு இப்படி வன்முறையை கட்டவிழ்த்துள்ளது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் மட்டுமல்லாமல்  எல்லா மாவட்டங்களிலும் காவல்துறை எல்லை மீறி இருக்கிறது.  கடைசியில் மாணவர்கள், இளைஞர்கள் மீது பழி போட்டிருக்கிறார்கள்.  இதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் ஈடுபடவில்லை. ஆனால் போராட்டத்தில் மக்கள் அரசியல் பேசப்பட்டது. அதை காரணம் காட்டி செய்த இந்த கொடுமை சரித்திரத்தில் கண்டிருக்க முடியாத நிகழ்வு.

மனித தன்மையோடு போலீஸ் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் நடக்கவில்லை. தாக்குதல் நடத்திய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன யுகத்தில் எது நடந்தாலும் அதை மறைக்க முடியாது. போலீஸார் நடத்திய தாக்குதல் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது, கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களை அடித்து தாக்கி இருக்கிறார்கள். கேட்டால், தீவிரவாத அமைப்பினர் போராட்டக்காரர்களோடு ஊடுருவி நாசப்படுத்தி விட்டார்கள் என்கிறார்கள். இது தொடர்பாக நீதிபதியை கொண்டு விசாரித்து உண்மை அறிய வேண்டும்.

நல்லகண்ணு

தோழர் என்று சொல்லிக்கொண்டாலே துரோகி என்பதை போல புதிய அவதூறுகளை போலீஸார் கிளப்புகிறார்கள். அவர்களுக்கு வரலாறும் தெரியாது. மனித நேயமும் இல்லை.  அதிகார வெறி கொண்டவர்கள் போலீஸாக இருக்கிறார்கள். 'தோழர் என சொல்லி அழைப்பவர்கள் சொல்வதை கேட்க கூடாது. அவர்களை அனுமதிக்கக் கூடாது' என காவல்துறை உயர் அதிகாரி சொல்கிறார். அந்தளவு அதிகார வெறியும், ஆணவமும் ஏற்பட்டுள்ளது.  இது வரலாறு புரியாத தன்மை. இவர்கள் எப்படி மாணவர்களை அடக்கியிருப்பார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

தோழமை என்ற சொல் கம்பராமாயணம், தேவரத்தில் இருக்கிறது. தோழர் என்ற பெருமை உள்ள வார்த்தை உலகத்தில் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தை துரோகமான வார்த்தை என சொல்கிறார்கள் எனச்சொன்னால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது.

இவ்வாறு நல்லகண்ணு தெரிவித்தார்.

- வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!