வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (30/01/2017)

கடைசி தொடர்பு:19:02 (30/01/2017)

'மாணவர்கள் போராட்டம் எங்களுக்கான பாடம்...' - முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி

பாலபாரதி

ஞ்சாவூர் பாரத் கல்வி நிறுவனத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு பாலபாரதி அளித்த பதில்களும்.

மக்கள் பிரச்னைகளை அவ்வப்போது தீர்த்து வைத்திருந்தால் போராட்டத்தின் நீட்சி இல்லாமல் போய் இருக்குமோ?  அடக்கி ஆளப்பட்ட மனநிலையே போராட்டத்துக்கு காரணமாக இருக்குமா?

நிச்சயமாக. அரசியல் கட்சிகளை நம்பி, வெறுத்து போன இளைய தலைமுறை தான் மெரினாவில் கூடியது. ‘சட்டசபைக்கு எங்கள் தொகுதி சார்பாக, நாங்கள் ஓட்டுப்போட்ட ஒரு எம்.எல்.ஏ. போகிறார். ஆனால் அவர் எங்கள் பிரச்னைகள் குறித்து அங்கு பேசவில்லை, விவாதிக்கவில்லை’ என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால், சட்டசபையில் ஒருவர் நினைத்தவுடன் உரை நிகழ்த்திவிடவோ, குறை கூறிவிடவோ முடியாது என்பதுதான் நிதர்சனம். சபாநாயகர் எப்போது நேரம் ஒதுக்குகிறாரோ அப்போது தான் நாங்கள் பேச இயலும். நீங்கள் கேட்கலாம் பிற நேரங்களில் எதிர்த்து கருத்து கூறினால் என்ன என்று. ஆனால், சபாநாயகர் எப்போது எங்கள் பெயரை உபயோகிக்கிறாரோ அப்போது தான் எங்கள் முன் உள்ள மைக் ஆன் செய்யப்படும்.

பிற நேரங்களில் பேசினால் பக்கத்தில் இருப்பவர்கள் காதுக்கு கூட கேட்காது. எங்களுக்கான நேரம் வரும் போது, சரியாக 15 நிமிடங்களுக்குள் பேசிவிடுங்கள் என்பார்கள். நாங்களும் தொடங்குவோம். ‘இந்த மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் சீரமைப்பு தேவை’ என்ற குற்றச்சாட்டை கூறியவுடன் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பேசத் துவங்கிவிடுவார். அடுத்த கேள்விக்கு போவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்பார்கள். இப்போது சொல்லுங்கள் எங்கள் மீது என்ன தவறு?.

சட்டமன்றத்தில் எதன் அடிப்படையில் சட்டசபையில் பேசுவதற்கான அவகாசம் அளிக்கப்படும்?

அவகாசம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கும். ஆனால், முன்னுரிமை என்பது வித்தியாசப்படும். முதலில் ஆளுங்கட்சியினர் தான் பேசுவர். அடுத்ததாக தான் எதிர்கட்சியினர் அனுமதிக்கப்படுவார்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம், சட்டசபையில் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவர் ஆளுங்கட்சியினை குறையோ குற்றமோ கூறக்கூடாது. ஆனால், அவர்களை புகழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அறிமுகப்படுத்தலாம். இவையெல்லாம் இன்றளவும் இருக்கும் சட்டசபை ஜனநாயகம். என் தொகுதிக்கு திரும்பிவரும்போது யார் யாரோ நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திரும்பியுள்ளதாக குறை சொல்வார்கள். அதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் அவர்களுக்கு உள்ளே நடப்பது தெரிய சாத்தியமில்லை தான். ஆனால், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்னிடம் வந்து என்னையே குறை சொல்லுவார், பொதுமேடைகளில் விமர்சிப்பார். அது ஒரு அரசியல் பிரமுகராய் தனிப்பட்ட முறையில் எனக்கு வேதனை அளிக்கும்.

தலைவன் இல்லா போராட்டத்தை எப்படி வழிநடத்துவது? மீண்டும் ஒரு அமைப்பு வருவது ஒரு பழைய அரசியலின் நீட்சியாகி விடாதா?

“தலைவனில்லாத போராட்டம் என்பது ஏதோ ஒரு வகையில் இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பின்மையை தந்துள்ளது என்றாலும், இதனை நாம் குறையாக கூறிவிட முடியாது. தலைவன் இல்லாதது தான் மிக முக்கியமான் ப்ளஸ் பாய்ன்ட்.  இந்த பக்குவம் கல்லூரி நாட்களிலேயே ஒருவருக்கு வந்துவிடும். எந்த கல்லூரியிலும் தலைவன் என ஒருவன் இருக்க மாட்டான். அந்த பழக்கம்தான் இன்று அவர்களை தன்னிச்சையாக, உறுதியாக, கண்ணியமாக போராடவைத்துள்ளது.

இதுபோன்று தலைவன் இல்லாமல் போராடும் நேரங்களில் தங்கள் போராட்டம் குறித்த முடிவெடுக்க ஆலோசனைக் குழு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். எவ்வித அரசியல் சார்புமின்றி அந்த ஆலோசனைக்குழுவை அவர்களே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களால் ஒரு கருத்தை ஒருமித்ததாக ஏற்றுக்கொள்ள இயலும். அதுபோன்ற நேரத்தில் எங்கு போராட்டத்தை கைவிடவேண்டும் என்ற குழப்ப மனநிலை உருவாகாது.

இந்த மாணவர் அமைப்பு ஒரு அரசியல் கட்சி ஆகுமா? என்ற கேள்விக்கு நம்மிடம் தெளிவான பதில் இல்லை. அது மாணவர்கள் கையில்தான் உள்ளது. ஒரு தலைவன் உள்ள அரசியல் அமைப்பாக இது மாறும்போது, அரசின் ஊடுறுவல் இருக்கும் என்பது எங்கள் தலைமுறையினரின் கருத்து. ஏனெனில், நாங்கள் பார்த்து வளர்ந்த அரசியல் சமூகம் அப்படித்தான் அமைந்திருந்தது. இந்த கருத்து தவறாகும் வாய்ப்பும் உள்ளது.

இப்போராட்டத்தின் வெற்றியாக நீங்கள் எதை சொல்வீர்கள்?

ரொம்ப சிம்பிளான விஷயம் அது. பெண் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுக்கும் போது, 30 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டால் அவ்ளோ பெரிய கூட்டத்தை கூட்டிய மகிழ்ச்சியில் அன்றைக்கு நன்றாக தூங்குவோம். 100.150 பேரெல்லாம் கலந்துகொண்டால் அது ஒரு மாபெரும் புரட்சி. காசு கொடுக்காமல், பிரியாணி போடாமல் கூட்டம் கூட்டுவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.போவார் வருவோரெல்லாம் கூடிய கூட்டத்தை ஏளனம் செய்வார்கள். ஆனால், இந்த அறவழி போராட்டத்தில் அது போன்ற சிக்கல் எதுவும் நிகழவில்லை. மாணவர்கள் திரண்டு வந்திருந்தனர். அந்த வகையில் மாணவ சமுதாயம் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

நாங்கள் போராட்டம் நடத்தும்போது, டீக்கடை பெஞ்சில் இருந்து கிண்டல் செய்தவர்கள் அதிகம். ஆனால் மாணவர்கள் போராட்டத்தின் போது, டீக்கடைக்காரரும், ஹோட்டல்காரர்களும் இவர்களுக்கு உணவு அளித்து, வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து உறுதுணையாக இருந்தனர். இந்த நம்பிக்கை தான் மாணவர்கள் போராட்டத்தின் வெற்றி. மாணவர்களுக்கு புரிதல் இல்லை. ஆண், பெண் நட்பு பற்றிய தெளிவு இல்லை என்பார்கள். ஆனால் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்த போராட்டம் உணர வைத்தது. இப்படி பல தளங்களில் இந்த போராட்டத்தின் வெற்றியை உணர முடிகிறது. என்னை பொறுத்தவரை சாதாரண எளிய மனிதர்களை உள்ளே இழுத்து, ஆண், பெண் சமத்துவத்துக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் எடுத்துக்காட்டாய் விளங்கியது இந்த போராட்டம் தான்.

போராட்டத்தில் நின்றவர்களை இந்த அளவிற்கு ஆச்சர்யமாய் பார்ப்பதற்கு காரணம் என்ன?

“இவர்களுக்கெல்லாம் பொறுப்பே இல்லை, ஃபேஸ்புக்கில் நேரத்தை கடத்துகின்றனர், என்னவாக போகிறதோ இவர்களின் வருங்காலம் என குறை சொன்னவர்கள் எங்கள் தலைமுறையினர். ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாகவே நடந்தது.  யாரைப் பார்த்து காலத்தின் அருமை தெரியாதவர்கள் என கூறினோமோ அவர்கள் தான் இன்று எங்கள் சந்ததியை காப்பாற்ற போராடுகிறார்கள். யாரையெல்லாம் பொறுப்பற்றவர்கள் என திட்டித்தீர்த்தோமோ அவர்கள் தான் இரவில் பெண்களை பத்திரப்படுத்துகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று, போராட்டக் களங்களிலிருந்த மனித ஒற்றுமை. இத்தனை வருடங்களாய் சாதி அரசியல் நடந்து வந்த ஒரு நாட்டில் அறங்கேறிய இவையெல்லாம் சாதிகளின் மேல் விழுந்த அடிகள். இதுபோன்ற சில விஷயங்கள் தான் எங்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. நாங்கள் போக தயங்கும் ஒரு புதுவழி அரசியல் பாதையை, அரசியல் அதிகம் தெரியாத சமூகம் என நாங்கள் நினைத்தவர்கள் உருவாக்கியுள்ளனர். நாங்கள் இவர்களை கூர்ந்து கவனிக்கிறோம். இவர்களிடமிருந்து கற்கிறோம். உண்மையில் எங்களுக்கு இது அதிசய நிகழ்வல்ல. எங்களுக்கு இது ஒரு பாடம்.

-ஜெ.நிவேதா,

 

(மாணவப் பத்திரிகையாளர்)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க