வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (28/01/2017)

கடைசி தொடர்பு:18:36 (28/01/2017)

'போராட்டத்துக்கு அனுமதியும், பின்னர் தாக்குதலும்.. ' பின்னணி காரணம் சொல்லும் திருமாவளவன் !

திருமாவளவன்

கோவை : "அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்னைக்காக ஆட்சியாளர்கள் இந்த போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க இந்த போராட்டத்தை மாநில அரசு பயன்படுத்திக்கொண்டது. பின்னர் போராட்டத்துக்கு திரண்டவர்களை வன்முறை கொண்டு கலைத்தால்தான், மீண்டும் இதே போல் வரமாட்டார்கள் என்று வன்முறையை ஏவி விட்டிருக்கிறார்கள்," என கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார்.

ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி அமைதி வழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் சென்னை, மதுரை, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய திருமாவளவன், "காவல்துறை மிக மோசமான வன்ம ஆட்டத்தை நடத்தியுள்ளது. ஆட்சியாளர்கள் ஒரு கூட்டத்தை எப்படி கலைப்பார்கள் என்று நாம் பலமுறை பார்த்துவிட்டோம். ஆனால் இது மக்கள் மீது நடந்த கொடூரமான வன்முறை தாக்குதல்.

திருமாவளவன் போராட்டம்

தேச துரோகிகள் எனச்சொல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போரட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், மாணவர்களும் அரசியல் கட்சியினர் வருவதை விரும்பவில்லை. இதை மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் நாங்கள் வரவேற்றோம். மிக கட்டுப்பாடுடன் போராட்டம் நடந்தது.

போலீஸார் கூறுவதைப் போல, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருந்திருந்தால் முதல் நாளே இந்த பிரச்னைகள் வந்திருக்க வேண்டுமே? போராட்டத்தில் எழுச்சி மிகுந்த முழக்கங்களை மாணவர்கள் எழுப்பிய போதும் போராட்டம் மிக அமைதியாக நடந்தது. போராட்டத்தின் இலக்கு மத்திய, மாநில அரசுகள் தான். அவர்களுக்கு எதிராகத்தான் போராட்டம் நடந்தது.

அவசரச்சட்டம் பாதுகாப்பானது தானா என்பதை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எந்த இடத்திலும் சட்டவிரோதமாக கூடியதாக வழக்கு பதியவில்லை. அப்படியிருக்க ஏழாம் நாள் ஏன் அவசர வன்முறையில் போலீஸார் ஈடுபட்டனர். தமிழக அரசு திட்டமிட்டே இந்த போராட்டத்தை அனுமதித்தது. அவர்களின் உட்கட்சி பிரச்னைக்காக போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். ஆளுங்கட்சி குழுப்பம், புதிய கட்சி உதயம், சி.பி.ஐ கொடுத்த அழுத்தம் போன்றவை தான் இதற்கு காரணம். இதை வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க இந்த போராட்டத்தை மாநில அரசு பயன்படுத்திக்கொண்டது. காமராஜர் சாலையை குடியரசு தின விழாவிற்கு தயார் படுத்தவே, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

போராட்டம்

போராட்டக்காரர்களுக்கு அவசர சட்டத்தை தெளிவு படித்திருந்தாலே போதும். போராடியவர்கள் கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால், போராட்டத்துக்கு திரண்டவர்கள் வன்முறை கொண்டு கலைத்தால்தான், மீண்டும் இதே போல் வரமாட்டார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால் தான் இந்த வன்முறை. போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லக்கூடாது என போலீஸார் நினைத்தனர். அதனால் நடந்தது தான் இந்த வன்முறை தாக்குதல்.

போராட்டக்காரர்கள் யாரும் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்தபின்னரே தற்காத்துக்கொள்ள சில இளைஞர்கள் கற்களை கொண்டு விசினர். இதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் சமூக விரோதிகள், தேச விரோதிகள் எல்லாம் காவல்துறையினர் தான் என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.

தோழர் என்று சொன்னால் தொலைபேசி துண்டித்து விடுங்கள் என்று இங்க போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லி இருக்கிறார். தோழர் என்ற சொல் சமத்துவத்தை குறிக்கும் சொல். ஆண் - பெண், ஏழை - பணக்காரன், ஜாதி - மதம் என எந்த வித்தியாசமுமின்றி இருக்கும் பொதுவான சொல் தான் தோழர். இதன் அர்த்தம், அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இங்கு வந்திருக்கும் அனைவரும் தோழர் என்று சீருடை அணிந்து வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் இனிமேல் இதை பெரியதாக பிரகடனப்படுத்த வேண்டும்.

போலீஸாரின் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை, இழப்பீடு வழங்குவதோடு, கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பபெற வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

- தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்