வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (29/01/2017)

கடைசி தொடர்பு:08:57 (29/01/2017)

அதிகாரவர்க்கத்தின் துஷ்பிரயோகம்... மெரினாவில் போராட்டங்களுக்குத் தடை!

மெரினா

காளையை, தலைவனாகவைத்துத் தொடங்கப்பட்ட போராட்டம்... தமிழகம் முழுவதுமுள்ள மாணவர் - இளைஞர்களைப் போராட்டக் களத்தில் இறக்கியது. லட்சோபலட்ச மாணவர்களும், இளைஞர்களும் இதில் குடும்பத்தோடு கூடி, மாபெரும் கடல் புரட்சியை மெரினா கடற்கரையில் சாத்தியமாக்கினர்.இந்நிலையில் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட  பகுதிகளில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

கலவரமாகிய அறவழிப் போராட்டம்!

கூட்டம் கூட்டமாக இருந்தாலும், ஆளுக்கொரு கோரிக்கையை முன்னிறுத்தி கோஷம் எழுப்பினாலும் ஆறு நாட்கள் எந்தவித அசம்பாவிதமும், குழப்பமும் இல்லாமல் போக்குவரத்து, கழிப்பறை வசதிகள், உணவு, தண்ணீர் என அனைத்து விஷயங்களையும் போராட்டக்காரர்களே முன்னிருந்து மிக அழகாகக் கையாண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தனர். எல்லாம் கைகூடி வர வேண்டிய நிலையில், ஏழாவது நாளிலும் மெரினா புரட்சி தொடர்ந்தது. ஆனால், அதிகாரவர்க்கம் அறவழிப் போராட்டத்தைக் கலவரமும் வன்முறையுமாக மாற்றியது.  

குறிவைக்கப்பட்ட குப்பங்கள்!

உலகமே வியந்து பார்த்த மெரினா புரட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவும் அவ்வப்போது உணவும், தண்ணீரும் கொடுத்ததற்காகவே மெரினா கடற்கரையை ஒட்டிய குப்பங்களைக் குறிவைத்து போலீஸார் தாக்கினர். நடுக்குப்பத்தில் இருந்த பெரும்பாலான குடிசைகளையும், அவர்களது வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். ஆனால், கலவரம் நடந்த அன்று... அனைத்தையும் மாணவர்களும், குப்பத்து மக்களுமே செய்ததுபோலவே சித்தரித்தனர். ஆனால் பின்னர், குடிசைகளுக்கும் வாகனங்களுக்கும் போலீஸாரே தீவைக்கும் வீடியோ ஆதாரங்கள் வெளிவர ஆரம்பித்தன. 

இதுதான் திட்டம்!

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அறவழிப் போராட்டமாக இருக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு, இப்படியொரு மாபெரும் போராட்டம் பெரிய தலைமை ஏதுமின்றித் தன்னெழுச்சியில் மக்களே களம் இறங்கியது... அரசையும் அதிகாரவர்க்கத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், போராட்டத்தில் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளும் முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ‘சின்னம்மா முதல் மோடி வரை’ அனைவரும் கிழி... கிழி... என கிழிக்கப்பட்டனர். இதனால், மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்பது மிகத்தெளிவாகவே தெரிந்தது. 

‘இது நல்லதுக்கில்லையே’ என்று அரசு மற்றும் அதிகாரவர்க்கம் நினைத்ததுதான்... அறவழிப் போராட்டத்தை வன்முறை, கலவரம், தீவிரவாதம், விஷமிகள் என்று திசைதிரும்பக் காரணமானது. அவர்களது ஒரே நோக்கம் இனியொரு போராட்டம் நடக்கவே கூடாது. அதற்கு இந்த வன்முறையும் கலவரமும் காரணமாகத் தேவைப்பட்டது. 

இறுதியில் அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது!

சென்னை மெரினா கடற்கரையில் இனி போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் எந்த அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ போராட்டங்கள் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரின் முக்கியச் சாலைகளிலும் பேரணிகள் நடத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவும் வந்துவிட்டது. மேலும், இளைஞர்களை இணைக்கும் சமூக வலைதளங்களில் போராட்டங்கள் குறித்தோ, வேறு வதந்திகளையோ பரப்புவோர் மீதும், அவற்றைப் பார்த்துவிட்டு போராட்டங்களுக்கு வருவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தெரிவித்தவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் அவர்கள்தான்.

மெரினா போராட்டம் வன்முறையில் முடிந்ததைவைத்து, இனி போராட்டங்களே நடத்த முடியாத அளவுக்கு தடைகளை உருவாக்கிவிட்டது அதிகாரவர்க்கம். யார், கலவரமும் வன்முறையும் செய்தார்கள் என்பதைக் கத்தி சொல்லவே ஒரு போராட்டம் தேவை. ஆனால், அதற்கெல்லம் இனி வாய்ப்பே இல்லை. இந்த நிலையிலும் இந்தியா சுதந்திர நாடு, குடியரசு நாடு மற்றும் ஜனநாயக நாடு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா?

- ஜெ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்