ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டத்தில் முதல்வரை ஏமாற்றிய உளவுத்துறை! | Did Intelligence Department cheat CM OPS on Jallikattu Protests

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (30/01/2017)

கடைசி தொடர்பு:13:23 (01/02/2017)

ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டத்தில் முதல்வரை ஏமாற்றிய உளவுத்துறை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் போராட்டக்குழுவினர் பங்கேற்றதாக உளவுப்பிரிவு போலீஸார் அரசுக்கு கொடுத்த ரிப்போர்ட் பொய் என்பது தெரியவந்துள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து 7 நாட்கள் போராடினர். இந்த போராட்டத்துக்கு தலைமையே இல்லாததுதான் உலக அளவில் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த போராட்டம் குறித்து மாநில உளவுப்பிரிவு போலீஸார், அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்தனர் . அதில், ''மாணவர்கள் என்ற போர்வையில் போராட்டக்களத்தில் சில தீவிரவாத அமைப்புகள் புகுந்துள்ளன. அவர்கள்தான் தேச இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர்'' என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சான்றாக சில புகைப்படங்கள், வீடியோக்களை உளவுப்பிரிவு போலீஸார் கொடுத்தனர். அதில்,  பின்லேடன் படம் வரையப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் படமும் இருக்கிறது. தற்போது அந்தப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்ற பூதம் கிளம்பி உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசும் போது, பின்லேடன் புகைப்படம் குறித்தும், ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் வன்முறையாளர்கள் புகுந்து விட்டது தொடர்பாகவும் பேசினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன. 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "அமைதி, அறவழியில் இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தது. ஆனால் போராட்டத்தை கொச்சைப்படுத்தவே தீவிரவாத அமைப்பு, கலவரக்காரர்கள் என்று போலீஸார் சொல்கின்றனர். உண்மையில் உளவுப்பிரிவு போலீஸார், அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு அதை நன்கு ஆராய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெரினா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லியிருப்பது வேதனைக்குரியது. இந்தளவுக்கு ஒரு உளவுப்பிரிவு போலீஸார் செயல்பட்டால் நாட்டில் எந்தளவுக்கு சட்டம், ஒழுங்கு இருக்கும். ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் வேலையைத்தான் ஒரு சில போலீஸார் செய்கின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் செய்த செயல் சமூகவலைத்தளத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், இந்த போராட்டத்தால் அரசுக்கு அவமானம் என்று கருதிய போலீஸார், இன்னும் மக்களை துன்புறுத்தி வருகின்றனர். உளவுப்பிரிவு போலீஸார் கொடுத்த அறிக்கையை உண்மை என்று தமிழக அரசு நம்பியது வேதனைக்குரியது. அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் வாசித்தது அதைவிட கொடுமையானது" என்றனர். 

 இதுகுறித்து பேசிய உளவுப்பிரிவு போலீஸ் உயரதிகாரி, "மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் முதல் மூன்று நாட்கள், உணர்வுபூர்வமாகவே நடந்தது. நான்காவது நாள், போராட்டத்தின் பாதை திசைமாறியது. சமூக விரோத கும்பல்களும், சில தீவிரவாத அமைப்புகளும் போராட்ட கும்பலுடன் சேர்ந்தது. இவர்கள்தான் பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை விமர்சித்தனர். மேலும் குடியரசு தினத்தை கறுப்பு தினமாகவும், தேசியக் கொடியை எரிப்போம் என்றும் பேசினர். அதையெல்லாம் ஆதாரத்துடன் அரசுக்கு சமர்ப்பித்தோம். பின்லேடன் படம்  வரையப்பட்ட இரு சக்கர வாகனத்தின் போட்டோ பழையது என்று சொல்கின்றனர். அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றார். 

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா.ஜே.அப்துல்ரஹீம் கூறுகையில், "கடந்த டிசம்பர்  2-ம் தேதி பி.ஜே.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் கட்சியினர் பின்லேடன் படம்  வரையப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த புகைப்படத்தை தற்போது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக போலீஸார் சொல்கின்றனர். போலீஸார் கொடுத்த அறிக்கையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபையில் வாசித்துள்ளார். மேலும் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்ததோடு, மெரினா போராட்டக்குழுவினரை விமர்சித்து இருந்தார். இதற்கு உடனடியாக நான் பதிலடி கொடுத்தேன்" என்றார்.

- எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்