‘பேரழகிகள், பெருங்கருணை கொண்டவர்கள்...’ திருநங்கைகள் குறித்து நடிகை கவுசல்யா

திருநங்கை அழகிப்போட்டி


சேலம் : "இங்கு இருக்கும் திருநங்கைகள் பேரழகிகளாகவும், கருணையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை நாம் எந்த தருணத்திலும் உதாசீனப்படுத்தக் கூடாது," என திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் நடிகை கவுசல்யா பேசினார்.

சேலம் திருநங்கைகள் நலச்சங்கத்தின் சார்ப்பாக மிஸ் சேலம் அழகி போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு, சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது. திருநங்கைகள் பங்கேற்ற அழகிப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறமை வாய்ந்த, சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

விழாவில் நடிகை கவுசல்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் சாதாரண நிகழ்ச்சியாக நினைத்து தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பின்னர்தான் அவர்கள் இந்த நிகழ்வு எத்தனை முக்கியத்துவம் பெற்றது என்பதை உணர முடிகிறது. இந்த அழகிகளை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இங்கு இருக்கும் திருநங்கைகள் பேரழகிகளாகவும், பெருங் கருணை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை நாம் எந்த தருணத்திலும் உதாசீனப்படுத்தக் கூடாது. அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,’’ என்றார்.

திருநங்கை அழகிப்போட்டி

தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் 14 திருநங்கைகள் கலந்துக் கொண்டனர். 5 சுற்றுகளாக நடைப்பெற்ற போட்டியின் இறுதியாக முதல் பரிசை கேத்ரீனாவும், இரண்டாம் பரிசை சங்கவிஸ்ரீயும், மூன்றாம் பரிசை பிரகதியும் பெற்றனர்.

இறுதியாக பேசிய திருநங்கைகள் நலச்சங்கத்தின் செயலாளர் கோபிகா, "இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக நடத்தி வருகிறோம். கடந்த வருடம் நடிகை அம்பிகா கலந்து கொண்டார். இந்த வருடம் நடிகை கவுசல்யா கலந்துக் கொண்டிருக்கிறார். எங்கள் மீது பற்றும், பாசமும் கொண்ட கவுசல்யா கலந்துக் கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது," என்றார்.

சேலத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி... படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

- வீ.கே.ரமேஷ்,

படங்கள்: எம். விஜயகுமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!