“யாரைக் கேட்டு பேட்டி கொடுத்தார்..?” எகிறிய ஸ்டாலின்... சைலண்ட் ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவை

சென்னை போலீஸுக்கு இது போதாத காலம்போல... மெரினா ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் காவல் துறை காட்டிய கரிசனத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள். ஆனால், கடந்த 23-ம் தேதி அதே காவலர்கள், காட்டிய கோரமுகத்தைக் கண்டு, ‘‘காட்டுமிராண்டிகளாக தமிழக போலீஸ் நடந்த்கொண்டது’’ என்று வசைபாடினார்கள். போலீஸார், வீடுகளுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்த போதுதான், சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கலவர பூமியாகச் சென்னை காட்சியளித்துக் கொண்டிருந்தபோது ‘‘அமைதிப் பூங்காவாகத் தமிழகம் உள்ளது’’ என்று சிலாகித்துக்கொண்டிருந்தார் கவர்னர். 

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதல் குறித்தும், அவர்களே வாகனங்களுக்கும் குடிசைகளுக்கும் தீவைத்த விவகாரங்கள் குறித்தும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம், ‘‘மாணவர்கள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து ‘தனி தமிழ்நாடு’ கோரிக்கையை எழுப்பினார்கள். தேசியக் கொடியை அவமதித்தும், குடியரசு தினத்தைக் கறுப்புத் தினமாக அறிவித்து... பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கிலும் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன. அந்தப் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை பதாகைகளில் பயன்படுத்தினார்கள். போலீஸார் கலைந்துபோகச் சொன்னதும், அவர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால்... சிறிய அளவில் குறைந்த பிரயேகத்தை போலீஸார் மேற்கொண்டனர்’’ என்று நீண்ட நெடிய விளக்கம் கொடுத்தார். முதல்வர் சட்டசபையில் விளக்கம் கொடுத்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு... சென்னை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியரசு தினத்தில் பிரச்னை செய்ய இருந்ததாக ஒன்றும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஸ்டாலின்துணை ஆணையர் பேட்டியும், அவரின் கருத்தும் இன்றைய சட்டசபைக் கூட்டத்தொடரில் விஸ்வரூபம் எடுத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘‘முதல்வர், ‘குடியரசு தினத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள்’ என்று கூறியிருந்தார். ஆனால், காவல் துறை துணை ஆணையாளர், ‘அப்படி... அவர்கள் திட்டமிட்டதாகத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார். இதில் எந்தக் கருத்து உண்மை? ஒரு காவல் துறை ஆணையர, யாரைக் கேட்டுத் தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுத்தார்; யாரிடம் அனுமதி வாங்கினார்; அவர் கூறிய கருத்து, யாருடையது... காவல் துறை உடையோடு அவர் பேட்டி கொடுக்கலாமா’’ என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். அதற்குப் பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி முதல்வருக்கு ஏற்பட்டது. 

இதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்., ‘‘காவல் துறை அதிகாரி பேட்டி குறித்து முழு விவரங்களும் எனக்குத் தெரியவில்லை. நான் முழுமையாக அவருடைய கருத்தைப் பார்க்கவில்லை. முழு விவரங்கள் கிடைத்தபிறகு இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சொல்லிச் சமாளித்தார். இந்த விவகாரத்தால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘‘தனியார் தொலைக்காட்சிக்குத் துணை ஆணையர், மேல் அதிகாரிகள் அனுமதிபெற்றுத்தான் பேட்டி கொடுத்துள்ளார்’’ என்கிறார்கள், காவல் துறை வட்டாரத்தில். 

இப்படியே... எத்தனை நாட்களுக்குத்தான் சமாளிக்கப்போகிறார் ஓ.பி.எஸ்.?

- அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!