Published:Updated:

`792 பேர் மருத்துவமனையில் அனுமதி; பெண் குழந்தை உயிரிழப்பு!’ -வேலூரை மிரட்டும் டெங்கு

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிரமாகப் பரவிவரும் காய்ச்சலுக்கு, நான்கு வயதே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

நட்சத்திரா
நட்சத்திரா

வேலூரை அடுத்த பள்ளிகொண்டா வெட்டுவாணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், ஐட்ரஸ் என்கிற சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேனிகா ராணி. இவர்களது நான்கு வயது மகள் நட்சத்திரா, அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்துவந்தாள். கடந்த 15 நாள்களுக்கு முன்பு நட்சத்திராவுக்கு திடீரெனக் காய்ச்சலடித்தது. 

டெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஓர் அலெர்ட் #DoubtOfCommonMan

பதறிப்போன பெற்றோர், குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவரிடம் குழந்தையை தூக்கிச்சென்று பரிசோதித்தனர். வைரஸ் காய்ச்சல் என்று கூறி ஊசிபோட்டு மருந்து, மாத்திரை கொடுத்த அந்த மருத்துவர், மேல் சிகிச்சைக்காக உடனே வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், ஸ்ரீநாராயணி தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள், சி.எம்.சி தனியார் மருத்துவமனையைப் பரிந்துரைத்தனர். ஒரு வாரத்துக்கு முன்பு சி.எம்.சி-யில் அனுமதிக்கப்பட்ட நட்சத்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 

உறவினர்கள்
உறவினர்கள்

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நட்சத்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இன்று காலை குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்குப் பிறகு வெட்டுவாணம் அம்பேத்கர் நகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுபற்றி, குழந்தையின் குடும்பத்தினர் கூறுகையில், ``நட்சத்திராவுக்கு காய்ச்சல் நெருப்பாய் கொதித்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் குறையாததால் சி.எம்.சி-யில் அனுமதித்தோம். கடந்த மூன்று நாள்களாகக் குழந்தையை எங்க கண்ணுல காட்டாமல் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். 15 பாட்டில் ரத்தம் கேட்டாங்க. 

கண்ணீர் அஞ்சலி பேனர்
கண்ணீர் அஞ்சலி பேனர்

சொந்தக்காரங்க பல பேர் ரத்தம் கொடுத்தும், நேற்றிரவு திடீரென எங்களையெல்லாம் விட்டுவிட்டு குழந்தை போயிட்டா. டெங்கு காய்ச்சலால்தான் பாப்பா இறந்ததா டாக்டர்கள் சொன்னாங்க’’ என்றனர் மீள முடியாத துயரத்துடன். வேலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியிருக்கிறார்.