‘அப்பா... அறிவாலயம் வர்றீங்களாப்பா...?’ - கருணாநிதியிடம் கலங்கிய ஸ்டாலின்

'தலைமைக் கழகத்துக்கு ஜெயலலிதா வந்தால் செய்தி; அறிவாலயத்துக்கு கருணாநிதி வராவிட்டால்தான் செய்தி' எனச் சொல்வார்கள். கடந்த மூன்று மாதங்களாக அறிவாலயத்தின் பக்கம் தி.மு.க தலைவர் எட்டிப் பார்க்கவில்லை. 'அறிவாலயத்துக்கு வழக்கம்போல, தலைவர் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்ன சூழலில் இருந்தாரோ, அதே உடல் பாதிப்புடன்தான் இருக்கிறார்' என வேதனைப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை வராத நாட்களே இல்லை எனும் அளவுக்கு இந்திய அரசியலின் ஒவ்வொரு நகர்வுக்கும் அவரிடம் இருந்து பதில் வரும். பத்திரிகையாளர்களை சந்திக்காத நாட்களில், கேள்வி-பதில் பாணியில் செய்தி அறிக்கை தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்தளவுக்கு தன்னுடைய கருத்துகள் நாள்தோறும் இடம்பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் கருணாநிதி. உடல் முழுவதும் மீசெல்ஸ் எனப்படும் தட்டம்மை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். 'அவரைச் சந்திக்க யாரும் வர வேண்டாம்' என அறிவாலயத்தில் இருந்து அறிக்கை வெளியானது. தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் அவரை சந்திக்க முயற்சித்தபோதும், தடை விதிக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழு, பொங்கல் விழா என எதிலும் தலைகாட்ட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கருணாநிதியின் உடல்நிலை பற்றி கனிமொழியிடம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்குப் பதில் கொடுத்த கனிமொழி, 'பூரண நலம் பெற்று விரைவில் அரசியல் பணிகளை மேற்கொள்வார்' என நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

'அறிவாலயத்துக்கு எப்போது வருவார் கருணாநிதி?' என தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "தலைவர் இன்னும் தீவிர ஓய்வில்தான் இருக்கிறார். ட்ரக்கியாஸ்டமி குழாய்கள் இன்னும் அகற்றப்படவில்லை. சுவாசத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. இயற்கை சுவாசத்தில்தான் இருக்கிறார். தொண்டையில் மாட்டப்பட்ட குழாய்களை எடுக்க, ரீ ஆப்ரேட் செய்ய வேண்டும். அதை முழுமையாக அகற்றினால்தான் அவரால் பேச முடியும். ஸ்பீச் தெரபி கொடுப்பதற்கான வேலைகள் எதுவும் தொடங்கவில்லை. அவருக்குத் தேவையானதை சைகை மூலமே கேட்கிறார். செல்வியும் நித்யாவும்தான் அவரைக் கவனித்து வருகின்றனர்.

வயதான காலத்தில் வரக் கூடிய பாதிப்புகளுடன்தான் இருக்கிறார். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர், திடீரென்று படுத்த படுக்கையாக மாறிப் போனதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது உடலில் இருந்த கொப்புளங்கள் ஆறிவிட்டன. பழைய நினைவுகளை இழந்துவிட்டார். அவரைக் குளிப்பாட்டுவது முதல் உணவு சாப்பிட வைப்பது வரையில் உதவியாளர் துணையுடன்தான் செயல்படுத்தப்படுகிறது. எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. தலைவரைச் சந்திக்க கோபாலபுரம் வரும் ஸ்டாலின். அவரிடம், 'அப்பா...அறிவாலயம் வர்றீங்களாப்பா...? அங்கு வந்துட்டுப் போனால், உங்க உடம்பு நல்ல நிலைக்கு வந்துரும்' என கலங்கிய கண்களோடு அழைக்கிறார். 'வேண்டாம்' என சைகையால் காட்டுகிறார் கருணாநிதி. சில நேரங்களில் எந்தப் பதிலும் சொல்வதில்லை. மீண்டும் பழையபடி அறிவாலயத்துக்கு வந்து சிறப்பாகச் செயல்படுவார் என மன ஆறுதலுக்காக பேசிக் கொள்கிறோம். அந்த நாளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!’’ என விவரித்தவர், 

"நாள்தோறும் கோபாலபுரத்துக்குத் தலைவரை சந்திக்க வருகிறார் ஸ்டாலின். அவருக்குப் புரிகிறதோ இல்லையோ தினம்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் தி.மு.க கொடுத்த பதிலடிகளைப் பற்றியும் விரிவாக அவரிடம் பேசுகிறார். அப்படிக் கேட்கும்போது, அவர் முகத்தில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா எனவும் ஸ்டாலின் கவனிக்கிறார். தந்தையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்காக, மிகுந்த சிரமப்படுகிறார். குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது முதல் மாடியில் உள்ள கருணாநிதியிடம் பேசுவதற்காகச் செல்கின்றனர். அவ்வாறு பேசும்போது, பழைய நினைவுகளை உணர்ந்து கொள்வார் என நம்புகின்றனர். சில நேரங்களில் முரசொலியைப் படித்துக் காண்பிக்கிறார்கள்!’’ என்றார் கவலை தொனிக்கும் முகத்தோடு.

அரை நூற்றாண்டு கால இந்திய அரசியலின் போக்கையே மாற்றிக் காட்டிய கருணாநிதி, 100 நாட்களுக்கும் மேலாக கோபாலபுரத்தில் முடங்கிக் கிடப்பதை வேதனையோடு கடந்து செல்கின்றனர் உடன்பிறப்புகள். 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!