''சசிகலாவைச் சந்தித்தது பற்றியெல்லாம் சொல்ல முடியாது!'' - கொதித்த ஜல்லிக்கட்டு விழாக் குழு | Jallikattu ban lift association members met AIADMK secretary sasikala and chief minister panneerselvam

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (31/01/2017)

கடைசி தொடர்பு:11:05 (01/02/2017)

''சசிகலாவைச் சந்தித்தது பற்றியெல்லாம் சொல்ல முடியாது!'' - கொதித்த ஜல்லிக்கட்டு விழாக் குழு


ல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, மதுரை அலங்காநல்லூரில் கடந்த 16 -ம் தேதி போராட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 17- ம் தேதி சென்னை மெரினாவில் கூடிய சில இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சமூக வலைதளங்கள் மூலம் இந்த இளைஞர்கள் விடுத்த அழைப்புகள் தமிழகம் முழுக்கப் புரட்சித் தீயாகப் பரவியது. சாதி, மத பேதமின்றி 'தமிழன்' என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே ஒலிக்கும் எழுச்சிப் போராட்டமாக  மாறியது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசிவிட்டு  'அவசரச் சட்டம்  அமல்படுத்தப்படும்' என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல், 'நிரந்தர சட்டம் வேண்டும்' என்று  தொடர்ந்து முழங்கினர். இளைஞர்களின் இந்தப் போராட்டம் வெற்றி  முகட்டைத் தொட்டுக் கொண்டிருந்த கடந்த 23 -ம் தேதி போராட்டக்  களத்துக்குள் புகுந்த போலீசார், அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.

சுந்தரராஜன் தலைமையிலான ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர்

ஆனால், போராட்டக்காரர்கள், '4 மணி நேரம் அனுமதி கொடுங்கள். சில நடைமுறைகளை முடித்துவிட்டு கலைந்து செல்கிறோம்' என்றனர். இதைக் ஏற்க மறுத்த போலீசார் போராட்டக்காரர்களை  கண்மூடித்தனமாக தாக்கினர். போலீசாரின் இந்தத் தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பலத்தக் காயம் அடைந்தனர். போலீசாரின்  தாக்குதலில் இருந்து  இளைஞர்களைக் காப்பாற்ற  மீனவ மக்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள் என்பதற்காக, அவர்களுடைய  வாழ்வாதாரங்களை அழித்ததோடு, வீடு புகுந்து பெண்களையும்  தாக்கியது போலீஸ். இது குறித்த வெளிப்படையான வீடியோக்களை அனைவருமே பார்த்தோம். இந்த நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில்  ஜல்லிக்கட்டு  நடத்துவதற்கான அறிவிப்பை (30 .1.2017) திங்கட்கிழமை விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் திடீரென்று, 'பிப்ரவரி 1-ம் தேதி  ஜல்லிக்கட்டு நடக்கப்போவதில்லை' என்று அறிவித்தனர். இப்படி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது  விழாக்குழுவினர் மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து  தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்துப் பேசினர். முதல்வரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த விழாக்குழுவினர், "வரும் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். பாலமேட்டில், பிப்ரவரி 9-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்'' என்றனர்.

யாரைக் கொண்டாட வேண்டும்?

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி பல ஆண்டுகளாக  போராட்டம் நடைபெற்று  வந்தாலும் அவசரச் சட்டம் அரங்கேறுவதற்கு மெரினாவில் இளைஞர்கள் எழுப்பிய எழுச்சிக் குரல்தான் முதன்மையானக் காரணம் என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் உரிமைதாரர்கள் அவர்கள்தான் என்று நாம் கொண்டாட வேண்டும். அப்படி இருக்கையில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு காரணமாக இருந்தவர் சசிகலா என்று ஒரு நிறுவனம் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதியிருந்தார். அவருடைய அந்த செயல்பாடு நல்லது என்றாலும் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு அவர் மட்டுமே காரணம் என்று  அ.தி.மு.க நிர்வாகிகள்  சொல்லி வருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகிகளின் கோஷத்துக்குப் பலம் சேர்ப்பது போன்று   ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரும் சசிகலாவை சந்தித்துள்ளனர்.   

சசிகலாவை ஏன் சந்தித்தார்கள்?

இந்த சந்திப்பு குறித்து விழாக்குழுவைச் சேர்ந்த சுந்தராஜனிடம் பேசியபோது, ''அழைப்பு கொடுக்கப் போகவில்லை. சசிகலா அவர்களை சந்தித்தது குறித்து  நாங்கள் எதற்கு உங்களிடம் தெரிவிக்கவேண்டும்? அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கேட்காதீர்கள்'' என்று  கொதித்தார்.

''முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளீர்களே.... அது குறித்து?''

"முதல்வரை விழாவுக்கு வரச்சொல்லி அழைத்தோம். எங்களது  அழைப்பை ஏற்று வருவதாகக் கூறியுள்ளார். வழக்கமான விழா ஏற்பாடுகளை மட்டும் செய்யுமாறு  கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு காரணமாக இருந்த மாணவர்களுக்கு இந்த நேரத்தில் எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இது குறித்து விழாக்குழுவைச் சேர்ந்த மற்றொருவரான சுந்தர ராகவனிடம் பேசியபோது, "மெரினா போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்கி நடத்தவில்லை என்பதால் யாரைப் பார்த்து அழைப்பது என்பது தெரியவில்லை .பொதுவாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் நடைபெற  உள்ள  ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று செய்தியாளர்கள்  சந்திப்பில் அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார். 

மெரினா போராட்டத்தில் பங்கேற்ற  மாணவர்களிடம் பேசியபோது, ''விழாக்குழுவினர்  முதலமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு நல்ல விஷயம். அதே நேரத்தில், இந்தப் போராட்டத்தில் சில விஷயங்களை முன்னெடுத்து செய்தவர் நடிகர் லாரன்ஸ். அவரையும்  இளைஞர்கள்  சிலரையும் கூடவே அழைத்து சென்றிருக்கலாம். விழாக்குழுவினரை குறை சொல்ல முடியாது. காரணம் இந்தப் போராட்டத்தில் தலைமை இல்லை என்பதால் யாரை அழைப்பது என்று  யோசித்திருப்பார்கள்" என்றனர்.

- கே. புவனேஸ்வரி


டிரெண்டிங் @ விகடன்