வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட இதுதான் வழி! முதல்வருக்கு, ராமதாஸ் கோரிக்கை | 'This is the only way to punish Aggressor' - Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (31/01/2017)

கடைசி தொடர்பு:14:31 (31/01/2017)

வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட இதுதான் வழி! முதல்வருக்கு, ராமதாஸ் கோரிக்கை

வன்முறைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை எனக்  கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் தண்டிக்கப்பட வேண்டுமானால், அதற்கு சி.பி.ஐ. விசாரணைதான் ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்.

இந்தியாவிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டமும், கல்வியும் வழங்கப்படாத நிலையில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தப்படக் கூடாது; அவ்வாறு நடத்துவது சமூக அநீதியாகவே அமையும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். நுழைவுத்தேர்வுக்கு எதிராக கடந்த 2006-ம் ஆண்டே தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதால், அந்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் உயிரூட்டலாம் அல்லது அதேபோன்ற புதிய சட்டத்தை இயற்றலாம் என  பா.ம.க. கூறிவந்தது. அந்த வகையில், இந்த சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. அதேநேரத்தில் இச்சட்டம் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுகொண்டது என்பதால், இதற்கு பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலையும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்த இயலும். எனவே, அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

சட்டப்பேரவையில், சென்னை வன்முறை குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் சேதமடைந்த மீன் சந்தைக்குப்  பதிலாக, தொடக்கத்தில்  தற்காலிக சந்தையும்  பின்னர் நிரந்தர சந்தையும் அமைக்கப்படும்; சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன்.

வன்முறைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும். தமிழ்நாட்டு வரலாற்றில் காவல்துறை அத்துமீறல்கள் தொடர்பாக இதுவரை ஏராளமான விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எந்த விசாரணையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததோ, தவறு செய்த காவலர்கள் தண்டிக்கப்பட்டதோ இல்லை. இத்தகைய சூழலில்,  அத்துமீறிய காவலர்களும், வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளும் தண்டிக்கப்பட வேண்டுமானால் அதற்கு சி.பி.ஐ. விசாரணைதான் ஒரே வழியாகும். சென்னை வன்முறைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சட்டப்போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும்; வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க