'எலிக்கறி' தின்று விவசாயிகள் போராட்டம்

திருச்சி : வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயில் இறந்த எலிகளை கவ்வியபடி  திருச்சியில் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 4 பெண்கள் அரைநிர்வாணமாகவும், இறந்த எலிகளையும் வாயில் கடித்தபடியும் இன்று போராட்டம் நடத்தினர்.  கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து தபால் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.

ஏற்கெனவே பாம்புக் கறி சாப்பிடும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில், ஊர்வலமாக வந்த விவசாயிகள் கையில் இறந்த பாம்புகள் இருந்தன. ஆனால், அவர்கள் பாம்புகளைக் கடிக்காமல் எலியைக் கடித்துப் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். "தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பலியான விவசாயிகளுக்கும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். வறட்சியை பார்வையிட தமிழகம் வந்த மத்திய ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் விவசாயிகளுக்கு திருப்தி இல்லை. விவசாயிகள் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகள் உடனே  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு முன்பாக  சென்னை தலைமைச் செயலகம் முன்பு, வரும் 7-ம் தேதி பாம்புக் கறி திண்ணும்  போராட்டம் நடத்த உள்ளோம்," என்றார்.

 

 

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி, ஏற்கெனவே கடந்த மாதம் விவசாயிகள் எலிக் கறி உண்ணும் போராட்டத்தை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் அதே வடிவில் போராட்டத்தை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்/வீடியோ : தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!