‘இளைஞர்களா இவர்கள்... என் போர்ப் படை தளபதிகள்..!’ மீண்டும் அரசியலில் தமிழருவி மணியன் #VikatanExclusive

"அரசியலை விட்டே விலகிச்செல்கிறேன், இனி அரசியல் பேசமாட்டேன்" என்று அறிவித்து, கடந்த 2016 ஜுன் மாதம்முதல் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியே இருந்த அரசியல் விமர்சகரும், காந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தமிழருவி மணியன்,  மீண்டும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ஏன் இந்த திடீர் மன மாற்றம், அவரிடமே கேட்டோம்.

 "தமிழகத்தை, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு திராவிட கட்சிகள் ஆட்சிசெய்து வருகின்றன. இந்தக் கட்சிகள், காந்தியம் வளர்ந்தெடுத்த பொதுவாழ்க்கைப் பண்புகள் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டன. தலைவர்கள், தங்களை ஊழல்மயமாக மாற்றிக்  கொண்டபோதும், ஒட்டுமொத்த தமிழகத்தின் வாக்காளர்களையும் ஊழலுக்கு உட்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தனர். எனவே, ஊழல்மயமாகிப்போன ஒரு சமுதாயத்தை ஒற்றை மனிதனாக இருந்து திருத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஊடகங்களும் இதுபோன்ற தவறான மனிதர்களைக் காட்டுவதிலேயே தங்களது நேரத்தையும் செலவழிக்கின்றன. மிகச் சரியாக சிந்திக்கக்கூடிய, மிக நேர்மையாகப் பொதுவாழ்வை நடத்தக்கூடிய மனிதர்கள் எப்போதுமே எளிமையானவர்களாகவும், ஏழ்மையில் உள்ள மனிதர்களாகவும்தான் இருப்பார்கள்.

ஆனால், எளிமையும், ஏழ்மையும் இன்று பொதுமக்களாலும் போற்றப்படுவது இல்லை. ஊடகங்களாலும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தச் சூழல் எனக்குத் தந்த வலி, வேதனை, விரக்தி அவற்றின் விளைவாகத்தான், 48 ஆண்டுகளாக என் இளமை முழுவதும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்கிற மனநிலைக்கு உட்பட்டுத்தான், 'போதும் இந்தப் பொதுவாழ்வு' என்று முடிவெடுத்தேன். எஞ்சியிருக்கிற வாழ்வில் நல்ல நூல்களை வாசிப்பது, நல்லனவற்றை மக்களிடம் சென்று பேசுவது, நல்ல புத்தகங்களை எழுதுவது என எனக்குள்ளாகவே ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கி, அந்த வட்டத்துக்குள்ளாகவே நான் என் இறுதிக் காலம் வரை இருப்பது என்று முடிவெடுத்தேன்.

ஆனால், சமீபத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு வியக்கத் தக்க புரட்சியை, மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து உருவாக்கியது எனக்கு மிகப்பெரிய வியப்பைத் தந்தது. இளைஞர்கள், பொதுவாகவே சமூக அக்கறை இல்லாமலேயே பாழ்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்ற வருத்தம் எனக்கு நீண்ட காலமாக இருந்தது. காரணம், 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகக் கலந்துகொண்ட மாணவர்களில் நானும் ஒருவன். 1965-க்கு பிறகு, தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் தலைதூக்கியபோது, குறிப்பாக ஈழத்தில் நம்முடைய இனம் அழிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடக்கூடிய சூழல் வந்த நிலையிலும், அது குறித்தெல்லாம் பெரிதாக இளைஞர்களும் மாணவர்களும் கவலைப்பட்டு வீதிக்கு வந்து நின்று, கடுமையாகப் போர்க் குரல்கொடுத்து, மிகப் பெரிய போராட்டக் களத்தை அமைத்திருந்தால், நிச்சயமாக அன்றைக்குத் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு, மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அந்த நெருக்கடியின் விளைவாகக் கலைஞர் கருணாநிதி, (அவருடைய கூட்டணிதான், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தது. அதனால், காங்கிரஸ் ஆட்சிக்கே நிர்ப்பந்தத்தைக் கொடுத்து) ஈழத்தில் போரையே நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை.

காவிரிப் பிரச்னையைப் பொறுத்தவரையில், உச்ச நீதிமன்றம் தண்ணீரைத் தரவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நடக்காவிடில், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்படவேண்டிய பொறுப்பில் இருக்கிற ஒரு மாநில அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி நடக்கிற நிலையில், அந்த ஆட்சியையே கலைப்பதற்கான வாய்ப்பும், வசதியும் இருக்கிறது. ஆனாலும்கூட, அது குறித்து கவலைப்படாமல், காவிரிப் பிரச்னையில் தமிழினத்துக்குத் துரோகம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கையில், கர்நாடக அரசு பகிரங்கமாக ஈடுபட்டது.

தமிழருவி மணியன்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவே ஒரு சட்டத்தை, கேரள அரசாங்கம் சட்டமன்றத்தில் தீட்டியது. இப்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மிக முக்கிய அங்கமாக இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக்கூட மதிக்காமல், இரண்டு மாநில அரசுகள் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறபோது, தமிழகத்தின் நீர் ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறபோது, தமிழகத்தின் விவசாயம் முற்றிலுமாகச் சிதைக்கப்படுகிறபோது, இவற்றையெல்லாம் இளைஞர்கள் பார்த்துக்கொண்டு மௌனப் பார்வையாளர்களாக இருந்ததும், சினிமா நட்சத்திரங்களுக்கு கோஷம் இடுவதும், அவர்களைத் தலைவர்களாகப் பாவிப்பதும், அவர்களுக்குப் பால் அபிஷேகம் முதல், பீர் பாட்டில்களால் அபிஷேகம் செய்வதுமாக கீழ் இறங்கிவிட்டார்களே என்கிற பெரும் வருத்தம் எனக்கு இருந்தது.

ஆனால், இளைஞர்களும் மாணவர்களும் முற்றாக அப்படி ஒன்றும் சிதைந்து சீர் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய, சமூகம் சார்ந்த அக்கறையும்  ஆர்வமும், லட்சியப் பிடிப்பும் அவர்களது அடிமனதில் ஈரத்தோடு இன்னமும் இருக்கிறது என்பதை, அவர்கள் இப்போது வெளிப்படுத்தியுள்ளனர். இதை அவர்கள் வெளிப்படுத்திய விதம் இருக்கிறதே, அது என்னை மிகப் பெரிய அளவுக்குப் பாதித்தது. அவர்கள் திரண்டு எழுந்து, போராட்டத்தை முழுக்க முழுக்க காந்தியத்தின் அடிப்படையில் அறவழியில் நடத்தி, அகிலத்தையே வியக்கச் செய்தார்கள். நான் மீண்டும் பொதுப் பணியில் இறங்குவதற்கு இது ஊக்கம் தந்தது. இந்த நேரம்தான் பக்குவப்பட்ட நேரமாக நினைக்கிறேன். இந்த இளைஞர்கள், இந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஒரு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழலையே உருவாக்கி வரலாறு படைத்துவிட்டார்கள். அப்படியென்றால், இவர்களால் இந்த தமிழத்தில் ஊழல் அற்ற ஒரு நிர்வாகத்தை ஏன் உருவாக்க முடியாது. மதுவற்ற மாநிலத்தை ஏன் இவர்களால் கொண்டு வர முடியாது?

காந்திய மக்கள் இயக்கத்தை நான் தொடங்கியதும், அதை நடத்தியதும் இரண்டு லட்சியத்தை மையமாக வைத்துதான். ஊழலற்ற நிர்வாகம், மதுவற்ற மாநிலம் என இந்த இரண்டு லட்சியப் பயணத்தை நோக்கித்தான் எங்கள் இயக்கம் செயல்படுகிறது. ஆனால், அதற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற வருத்தத்திலேயே, நான் பொதுவாழ்வில் இருந்து விடுபட்டு, விலகிநின்றேன். இப்போது இந்தப் போராட்டத்தின் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கின்ற புத்துணர்வு, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனனைவரும் ஒன்று திரண்டு, ஊழல்வாதிகளுக்கு எதிராகக் கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டால், நிச்சயம் ஊழல் அற்ற நிர்வாகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மதுவுக்கு ஏதிராக இவர்கள் போராட முன் வந்துவிட்டால், 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழல் ஏற்படும். எனவே, இந்த திசையை நோக்கி இவர்களை நெறிப்படுத்தவும், இந்தத் திசையில் இவர்கள் பயணிப்பதற்குத் துணைநிற்கவும்தான் நான் மீண்டும் இந்த அரசியல் களத்தில் வேகமாக ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்திருக்கிறேன். இளைஞர்களா இவர்கள், என் போர்ப் படை தளபதிகள்! இவர்களுக்காகவே மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.

காந்திய மக்கள் இயக்கம், பிப்ரவரி 12-ம் தேதி கோவையில் பொதுக்குழுவைக் கூட்டுகிறது. இதில், இளைஞர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச்செல்வது என்று ஆலோசனை நடத்த உள்ளோம். அன்று மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், 'இன்றைய தமிழக அரசு எங்கே போகிறது' என்பதை, ஒரு அறிவார்ந்த ஆய்வுரையாக நிகழ்த்த உள்ளேன். முக்கியமாக, இந்த இளைஞர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டும் என்ற தாகமும், இதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சுயநலமும் அறவே எங்களுக்குக் கிடையாது. இளைஞர்களும் பொதுமக்களும் இப்போது உருவாக்கி இருக்கக்கூடிய இந்தப் போராட்ட உணர்வு கொஞ்சமும் மங்கிவிடாமல், கூர்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் தாகம்!"

தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்தவர், நேர்மையாளர், தமிழறிஞர், சிறந்த இலக்கியவாதி, பேச்சாளர். மனிதம் மற்றும் சமுதாய அக்கறை  குறித்து இடையறாது சிந்திப்பவர். இன்றைய இளைஞர் எழுச்சிக்குப் பிறகு, மீண்டும் நம்முன் பேச வருகிறார் என்றால், தன்னெழுச்சியோடு எழுந்து நின்ற இளைய தமிழ்ச் சமுதாயம், மீண்டும் பலப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இது, ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அடித்தளமிடும் என்பதே உண்மை!

- ரா.வளன் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!