வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (31/01/2017)

கடைசி தொடர்பு:17:13 (31/01/2017)

தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு! கூபாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்ப்பது ஏன் என விலங்குகள் நல வாரியத்திற்கு கேள்வி எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சட்ட முன்வரைவு, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வரைவுக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார்.

இதனிடையே, கூபா சார்பாக ஆஜராக காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனுசிங்வி முடிவுசெய்திருந்தார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. அப்போது, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் 2014-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றும் விதத்தில் புதிய சட்டம் உள்ளது என்று கூறினர்.

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வன்முறையைத் தடுக்கத் தவறியது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அப்போது, தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூபா விலங்குகள் நல வாரியம் வாதிட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்ப்பது ஏன் என விலங்குகள் நல வாரியத்திற்கு கேள்வி எழுப்பியதோடு, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்த மத்திய, தமிழக அரசு வழக்கறிஞர்கள், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் இரண்டு நாளில் அரசிதழில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுக்கள் தொடர்பாக ஆறு வாரத்தில் பதில் அளிக்க மத்திய, தமிழக அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க