Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்! 

'வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்' என்ற அதிரடி அறிவிப்புடன் சென்னையைச் சார்ந்த புதிய கடன் உதவி நிறுவனமான ஓப்பன்டேப் (OpenTap) தனது வணிகத்தைத் தொடங்கியுள்ளது. 

கடன், உடனடிக் கடன், 2000 ரூபாய்,

'ரூ.6,000 லிருந்து ரூ.20,000 வரை சம்பளம் வாங்குபவர்களுக்குக் கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை; வாடிக்கையாளரின் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி அப்ரூவல்; வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கடன்; வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாக' சென்னையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓப்பன்டேப் (OpenTap) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில் நடராஜன் கூறுகிறார். 

நல்ல வேலை, நல்ல சம்பளம்!

"நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு, படித்து முடிக்கும் போது நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று 10 வருடங்கள் கழித்து அங்கு செட்டில் ஆன பிறகுதான் எனக்கு இந்தியாவிற்கு மீண்டும் வந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமே வந்தது. நிறுவனம் தொடங்கும் போது நிதி சார்ந்த நிறுவனம் என மனதில் தோன்றவில்லை. ஆனால், சர்வதேச அளவில் அலசி ஆராயும்போது நிதி சார்ந்த துறைக்குப் பலத்த வரவேற்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இதுமட்டுமின்றி சமூகத்துக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம். இதற்காக மக்களுக்குச் சேவை என்று சொல்ல விரும்பவில்லை. எனினும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு நிறுவனம் தொடங்க திட்டமிட்டோம்.

ஓப்பன்டேப்! 

என்னுடைய வேலையிலிருந்து வெளியேறிய பிறகு புதியதாக ஒரு நிறுவனம் தொடங்கலாம் என நினைத்தேன். அதற்காக பல ஐடியாக்கள் யோசித்துக் கொண்டு இருந்தோம். நிதி மற்றும் நிதி சாராத பல ஐடியாக்களை எல்லாம் சோதித்து பார்த்து, அது எவ்வாறு செல்கிறது என்பதைப் பார்த்த பிறகுதான் கடன் வழங்கும் நிறுவனம் தொடங்கலாம் என்ற எண்ணம் உருவானது. கடன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றுதான். ஆனால், ஓப்பன்டேப் நிறுவனத்தை வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்தியாவில் பல வங்கிகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. எனினும் முக்கியமான வித்தியாசமே யாரும் தனிநபர்களை அணுகுவதைப்போலத் தெரியவில்லை. ஏனெனில் இப்போது நாங்கள் நாடு முழுவதையும் ரீச் ஆகவில்லை; ஆனால், யாரும் 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதாகத் தெரியவில்லை. ஆகையால் இதற்குக் குறைவாக சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களைத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதிக அக்கறையுடன் அவர்களை அணுகத் திட்டமிட்டுள்ளோம். 

குறைந்த சம்பளம், அதிக வாடிக்கையாளர்கள்! 

இந்தியாவில் வங்கிகளின் கட்டமைப்பு வெவ்வேறு விதத்தில் இருக்கிறது. வங்கிகளின் வாராக் கடனை எடுத்துப் பார்த்தோமேயானால் ஒவ்வொன்றும் விதவிதமாக இருக்கும். அவர்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் கடன் வழங்கும் அளவு வேறு விதமாக இருக்கும். முக்கியமாக இந்தியாவில் வங்கிகளின் கட்டமைப்பே வேறு. சட்டதிட்டம், அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதில் பல கோட்பாடுகள் உள்ளன. ஆகையால் இதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது குறிப்பிட்ட சில மக்களை மட்டுமே அவர்களால் சென்றடைய முடியும். 

இதனால் எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இப்போது 17 கோடி ரூபாய் கடன் புத்தகத்துடன் கடன் வழங்குவதற்கு மத்திய வருவாய் பிரிவினரை இலக்கு வைத்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டத் திட்டமிட்டுள்ளோம். இதுவே இந்தியாவில் மிகக் குறைவான இலக்கு. இதைவிட இந்தியாவில் அதிகளவிலான வாய்ப்பு கொட்டி கிடைக்கிறது. இப்போது எங்களைப் போன்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதை வங்கிகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. வங்கிகளால் குறைந்த சம்பளம் வாங்கும் வாடிக்கையாளருக்குச் சேவை வழங்க அவர்களிடம் போதிய கட்டமைப்பு இல்லை. ஆகையால் எங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. 

உடனடியாக கடன்!

இப்போதைக்குச் சில்லறை மற்றும் மாத சம்பளம் வாடிக்கையாளர்கள்தான் எங்களுடைய இலக்கு. குறிப்பாக மிகக் குறைந்த ரூ.6,000 மற்றும் ரூ.7,000 சம்பளம் முதல் நடுத்தர சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களே எங்களுடைய இலக்கு. வாடிக்கையாளர் கடனுக்கு விண்ணப்பித்த உடன், வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன் அல்லது அவருடைய வங்கி கணக்கில் உடனடியாக பணத்தை டெபாசிட் செய்துவிடுவோம். வாடிக்கையாளரின் திருப்பி செலுத்தும் திறனைப் பொறுத்து கடன் வழங்கி வருகிறோம். இப்போதைக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதை ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்க உள்ளோம். உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்ய எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார் செந்தில் நடராஜன்.

வீட்டுக்கடன், கார் கடன், தனி நபர் கடன் என பல்வேறு வகையான கடன் வசதிகளை பெற வங்கிகள் இருந்தாலும், நம்முடைய அவசரத் தேவைக்கு யாரும் கடன் வழங்க முன்வருவதே இல்லை. அதுவும் குறைந்த மாத சம்பளம் வாங்கும் சாமனியனுக்கு சொல்லவே தேவையில்லை. ஆனால், இவர்களையே ஒரு இலக்காகக் கொண்டு, வேலையிலிருந்தும் இன்னும் வங்கி உதவி பெற இயலாதவர்களாக உள்ள ஒரு பெரும்பாலான மக்களுக்கு உடனடியாக கடனுதவி வழங்கத் தயாராகவுள்ளது ஓப்பன்டேப். இப்போது சென்னை, பெங்களூர் மற்றும் நாசிக்கில் இயங்கி வருகிறது. விரைவில் திருச்சி, கோவை, புனே, அகமதாபாத், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவுக்குத் தனது வணிகத்தை விரிவுபடுத்த உள்ளது ஓப்பன்டேப். 

சோ.கார்த்திகேயன் 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement