விவசாயத்தை சீரழித்த சீமைக் கருவேல மரங்கள்... வேடிக்கை பார்த்த கலெக்டருக்கு நீதிமன்றம் 'குட்டு'!

கருவேல மரங்கள்

ட்சியாளர்கள் தலையிலும் அதிகாரிகள் தலையிலும் நீதிமன்றங்கள் குட்டி குட்டித்தான் வேலை வாங்கும் அவலம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது போக்குவரத்தினை பாதிக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என்றாலும் சரி. நிலத்தடி நீரை உறிஞ்சி வாழ்வாதாரத்தை சிதைக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றாலும் சரி. சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலையும் தாங்களாக முன்வந்து தடுப்பது இல்லை என சத்திய பிரமாணம் செய்திருக்கிறார்களோ என்னவோ. இந்த அலட்சியத்தின் காரணமாக தொடர்ந்து குட்டு வாங்கி கொண்டிருக்கிறார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே நடந்த விசாரணையின் போது உயர் நீதிமன்ற கிளையின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், அதுகுறித்த அறிக்கையினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று (ஜனவரி 31) தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள்  ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்திரவிடப்பட்டிருந்தது.

மதுரை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் இந்த வழக்கு  நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வைகோ ஆஜரானர்.  அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற  மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.
இதனை தொடர்ந்து அரசு தரப்பில் 13 மாவட்டங்களிலும் 60% சீமைக்கருவேல மரங்கள் அகற்ற பட்டிருப்பதாகவும், தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் சிக்கல் உள்ளதால் நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தாங்களாகவே அகற்ற வேண்டும் எனவும், தவறினால் மாவட்ட நிர்வாகமே அவற்றை அகற்றிவிட்டு  அதற்கான செலவு தொகையினை இருமடங்காக நில உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர்களை ஆணையாளர்களாக நியமித்தும் உத்தரவிட்டனர்.

"சீமைக்கருவேல மரங்களை அகற்ற நிதி இல்லை என காரணம் கூறாமல் அதற்கான நிதியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் பொது நிதியில் இருந்து பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்," என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருவேல மரங்கள்

நீதிமன்றம் இவ்வளவு கடுமைகாட்ட கூடிய சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ஏனோ அலட்சியமாகவே இருந்து வருகிறது. கடந்த வாரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியை பார்வையிட மத்திய குழு வந்திருந்தது. மத்திய நீர்வளத்துறை இயக்குனர் அழகேசன் தலைமையில் வந்திருந்த இந்த குழுவினர் ராமநாதபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக விளங்க கூடிய பெரியகண்மாய் நீரின்றி வறண்டு கிடந்ததுடன் கண்மாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதையும் கண்டனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் விளக்கம் கேட்ட அழகேசன் ‘‘முக்கியத்துவம் வாய்ந்த கண்மாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சும் சக்தி கொண்ட அபாயகரமானவை இந்த சீமைக்கருவேல மரங்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்படி கண்மாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருந்தால் எப்படி நீர் தேங்கும். கருவேல மரங்கள் வளரும் உயரத்தை விட இரு மடங்கு ஆழத்தில் அதன் வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இவற்றை அகற்ற பல்வேறு இடையூறுகள் வரும். வனத்துறை, பொதுப்பணி துறை, வருவாய்த்துறை என ஒவ்வொரு துறையும் முட்டுக்கட்டை போடும். இதனால் எந்த வேலையும் நடக்காது’’ என பொங்கி எழுந்தார்.

ராமநாதபுரம் கலெக்டர் இதற்கு பதிலளித்த ஆட்சியர் நடராஜன் ‘‘கருவேல மரங்களை வேருடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது வரை 10 கூட்டங்கள் நடத்தியுள்ளேன்’’ என்றார். இதனை ஏற்று கொள்ளாத அழகேசன் ‘‘ கூட்டம் நடத்தி என்ன பயன். எதுவும் நடக்கவில்லையே’’ என மீண்டும் கொதித்தார்.  ஒரு வழியாக வறட்சி குழு அங்கிருந்து செல்ல மாவட்ட அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

வறட்சியை பார்வையிட வந்த குழு சென்ற பின் மாவட்ட நிர்வாகம் தங்கள் வழக்கமான பணிகளான அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துவது, அமைச்சருடன் சைக்கிள் கொடுக்கும் விழாவுக்கு செல்வது என பிசியாக இருந்த நிலையில் தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மீது தனது சாட்டையை சுழற்றியுள்ளது. இதன்  பின்னராவது மாவட்டத்தில் செழித்து வளர்ந்து மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற முன்வருவார்களா என்பது தெரியவில்லை.

இது குறித்து அறிய மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் பேசினோம். அவர் ‘‘சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான அறிக்கையினை நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டோம். அதன்படியே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் தொடர்ந்து அகற்றி வருகிறோம். எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. விசாரித்து சொல்கிறேன்’’ என்றார்

நீதிமன்றம் கேட்ட ஒரு அறிக்கையை கூட அளிக்க முடியவில்லை என்றால் பரந்து விரிந்துள்ள மாவட்டத்தில் பரவி கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை இவர்கள் எப்படி 10 நாளில் அழிப்பார்கள்?

- இரா.மோகன், சே.சின்னதுரை.

படங்கள்: உ.பாண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!