வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (01/02/2017)

கடைசி தொடர்பு:13:21 (01/02/2017)

ஜெயலலிதாவைப் போல  தீபாவுக்கு புதிய பட்டம்!

தீபா


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, 'மக்கள் தலைவி' என்ற அடைமொழியுடன் அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சலசலப்பு இன்னும் குறையவில்லை. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலாவின் தலைமையில் செயல்பட விரும்பாத அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெய. தீபாவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதிலுமிருந்து அ.தி.மு.க.வினர் தீபாவின் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 
 தீபாவுக்கு ஆதரவாகச் செயல்படும் அ.தி.மு.க.வினர் குறித்த தகவல் சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி, அரசியலில் களமிறங்க உள்ளதாக தீபா அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நேரத்தில், ஜெயலலிதாவைப் போல தீபாவையும் அடைமொழியுடன் அவரது ஆதரவாளர்கள் அழைத்துவருகின்றனர். 

தீபா

இதுகுறித்து தீபாவின் ஆதரவாளர்கள் கூறுகையில், "தி.மு.க.விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சியை நடத்தினார். அவரை புரட்சித் தலைவி என்று கட்சியினர் அழைத்தனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஜெய.தீபாவை கட்சியின் தலைமையை ஏற்க வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கையை ஏற்ற தீபா, ஜெயலலிதாவின் வழியில் செயல்பட முடிவு செய்துவிட்டார்.  தற்போது, தீபாவுக்கு அ.தி.மு.க.வில் மட்டுமல்லாமல் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால்தான் அவரை மக்கள் தலைவி என்று அழைக்கிறோம்"என்றனர். 

தீபா வீட்டிற்கு முன்னர் குவிந்த ஆதரவாளர்கள்

மக்கள் தலைவி ஜெய.தீபா என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப்களும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த குரூப்பில் உள்ள தீபாவின் ஆதரவாளர்கள், அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கின்றனர். அதோடு, தீபாவின் அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் வாட்ஸ்அப் மூலமே பகிர்ந்துகொள்கின்றனர். அந்த குரூப்புக்கு, மக்கள் தலைவி ஜெய தீபா என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் புகைப்படமும், இரட்டை விரல் காண்பிக்கும் தீபாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.   

 அரசியலில் அடைமொழியுடன் வலம் வருபவர்கள் அதிகம். அந்த வரிசையில் தீபாவையும் அவரது ஆதரவாளர்கள் சேர்த்துவிட்டனர். 

 - எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்