வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (02/02/2017)

கடைசி தொடர்பு:18:31 (02/02/2017)

மாணவர்கள் எதிர்காலத்தில்... பன்னீர்செல்வத்துக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

நீட் தேர்வு


"ருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய அளவில் தகுதித் தேர்வான “நீட்” நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்” என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு “நீட் தேர்வை” ரத்து செய்தது. அந்தத் தீர்ப்பில், "அகில இந்திய அளவில் இப்படியொரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை; ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான பாடத்திட்டம் இருக்கிறது. தனித்தனி பயிற்றுமுறை உள்ளது. ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும், “அகில இந்திய அளவில் தேர்வு” என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நுழைவுத் தேர்வுஎழுதுவதற்கு நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற பயிற்சி வசதிகள் மற்றும் மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை. ஆகவே, நகர்ப்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் சரி சமமாக போட்டியிட்டு நுழைவுத் தேர்வை எழுத முடியாது. நகர்ப்புறத்திற்கு மருத்துவர்கள் தேவை என்பதைப் போல் கிராமப்புறங்களுக்கும் மருத்துவர்கள் தேவை. ஏனென்றால் கிராமப்புற சுகாதாரம் மிக முக்கியம்.

கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயின்றால்தான் கிராம மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எளிதில் கிடைப்பார்கள். “நீட் தேர்வால கிராமப்புறத்தில் இருந்து டாக்டர்கள் உருவாகும் நிலை தடுக்கப்படும்" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். எனவே, கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய “நீட் தேர்வு” உத்தரவு செல்லாது என்று அப்போது நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் இருந்தபோதே நீட் தேர்வை மத்திய அரசு மீண்டும் கொண்டு வந்தது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு இந்த தேர்வு அமலுக்கு வந்துவிட்டது. தமிழகத்திற்கு மட்டும் சென்ற ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், வரும் 2017-2018-ம் கல்வி ஆண்டில் இருந்து நீட் தேர்வு கண்டிப்பாக எழுதி ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.

கி.வீரமணி- ஒ.பி.எஸ்

ஆனாலும், தமிழக அரசு, ‘நீட் தேர்வு’ எழுதுவதில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று மாநில அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. என்றாலும், அதற்கான சட்டபூர்வ நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காமல் இருந்தது. அதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ’நீட் தேர்வு’ அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகி உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க ‘நீட் தேர்வு’ எழுத விண்ணப்பித்து விட்டு அதற்கான ஆயத்தங்களில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜனவரி 30-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ’தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களும், பொறியாளர்களாக மருத்துவர்களாக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தி.மு.க தலைவர் கருணாநிதி ‘தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை கடந்த 2007-ம் ஆண்டு ரத்து செய்தார். ஆனால், தற்போது கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீட் தேர்வுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் கொண்டு வந்ததைப் போன்று, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வி விஷயத்திலும் “நீட் தேர்வு தேவையில்லை” என்று வலியுறுத்தும் சட்டமுன்வடிவு ஒன்றை இந்த சட்டமன்ற கூட்ட தொடரிலேயே கொண்டு வர வேண்டும். அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, தமிழக சட்டசபையில் சட்ட முன்வடிவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன்இதுகுறித்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "அகில இந்திய அளவிலான நீட் தேர்வின் அடிப்படையில்தான் இனிமேல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பு, தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மத்தியில் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நீட் தேர்வு ரத்து என்றும், 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையிலும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதே போல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., மற்றும் எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவிகித இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்புவதில் இருந்தும் தமிழகத்துக்கு விலக்கு பெறக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மசோதாவில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாடப்பிரிவு இடங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் மருத்துவர்கள் சேர்க்கைக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்களித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது. 'இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) சட்டம் 2016' என்று அழைக்கப்படும் அந்த சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் சட்டத்துக்கு திருத்தம் செய்தோ அல்லது அதற்கு முரணாகவோ மாநில அரசு சட்டம் இயற்றினால் அது செல்லுபடியாகாது. எனவே, நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று இப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ரத்தாவது உறுதி என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு தமிழக அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற்றதா? அல்லது தலைமை வழக்கறிஞர் தமிழக அரசைத் தவறாக வழி நடத்துகிறாரா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு அக்கறை காட்டாமல், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் குரல் கொடுக்காமல் இப்படி சட்டங்களை நிறைவேற்றுவது மாநில விஜயபாஸ்கர்அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காக மட்டுமே பயன்படும். இதை நம்பி தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகாமல் இருந்து விட்டால் அவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கூறுகிற மாநிலங்களுக்கு விலக்களிக்கும் விதமாக, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

ஆனால், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்காக, முதல்வர் பன்னீர்செல்வத்தை கோட்டையில் சந்தித்து பாராட்டியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், "ஜல்லிகட்டு போலவே நீட் தேர்வு சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வு பற்றி மாணவர்கள் பயப்பட வேண்டாம். புரட்சித்தலைவி அம்மா, 'நீட் தேர்வு வேண்டாம்' என்றார். அதுபோலவே, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாணவர்கள் மீது அக்கறையோடு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக இந்தச் சட்டம் அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக ஒப்புதல் கிடைத்து விடும். இந்தச் சட்டம் கண்டிப்பாக தமிழக மருத்துவப் படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார்.

-எஸ்.முத்துகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்