ரூபாய் நோட்டு விவகாரத்தில் சிக்கிய சென்னை இன்ஸ்பெக்டர்!


ரூபாய் நோட்டு விவகாரத்தில் சென்னை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற காலஅவகாசமும் கொடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அதை மாற்றினர். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், புரோக்கர்கள் உதவியுடன் சில வங்கி அதிகாரிகள் மூலம் கறுப்புப் பணம் மாற்றப்பட்டதாக ஆர்.பி.ஐ.க்கு தகவல்கள் சென்றன.  அதை நிரூபிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றிய விவகாரத்தில் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.  தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை அண்ணாநகரில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்ததாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதில் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினோம். விசாரணை முடிவில் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வந்தார்.  அவர், வழக்குகளை விசாரிக்கும் ஸ்டைலே தனி ரகம் என்பது போலீஸ் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். துறைரீதியான விசாரணை அவரிடம் நடந்து வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் சொல்வதற்கும் ஒருகாரணம் இருக்கிறது. ஜெயசந்திரன் மீதுள்ள குற்றச்சாட்டில் இன்னும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தை மூடிமறைக்கவே போலீஸார் முயற்சித்தனர்.  சென்னை போலீஸ் ஐ.பி.எஸ் உயரதிகாரிகளுக்கு மட்டுமே இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும். குறிப்பாக பத்திரிகைகளுக்கு தெரியக்கூடாது என்ற அந்த உயரதிகாரிகளின் உத்தரவை அப்படியே அவருக்கு கீழ் உள்ள சில அதிகாரிகளும் பின்பற்றி வருகின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்திலேயே இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த விசாரணை குழுவில் உள்ள நேர்மையான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, இன்ஸ்பெக்டர் விவகாரத்தை வெளியில் சொல்லி விட்டார்.

ஜெயசந்திரன் விவகாரம் வெளியில் தெரிந்ததும் ஐ.பி.எஸ்.விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கடும் தலைவலி ஏற்படுத்தி உள்ளது. இதனால் எந்தத் தகவலும் சொல்லாமல் நேற்று வரை மூடிமறைத்த அவர்கள் ஜெயசந்திரனிடம் விசாரணை நடந்து வருவதை மட்டும் சொல்லத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் விசாரணை முடிந்து ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  ஜெயசந்திரனை காப்பாற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் முயற்சித்து வருகிறார். இதனால் ஜெயசந்திரன் மீது புகார் கொடுத்தவரின் பெயரைக் கூட சொல்ல போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர்" என்றனர்.  

- எஸ்.மகேஷ் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!