வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (03/02/2017)

கடைசி தொடர்பு:15:39 (03/02/2017)

ஓவியர் அண்ணாவின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா? #RareDrawings

கண்ணியம் மிக்க, முன்மாதிரி அரசியல் தலைவர்; சிலேடையும் அடுக்குமொழியும் கரைபுரண்டோடும் பேச்சாளர்; கொண்ட கொள்கை வழுவாமல் வாழ்ந்த போராளி; உணர்ச்சி ததும்ப எழுதும் எழுத்தாளர் என பேரறிஞர் அண்ணாவுக்கு பல அடையாளங்கள் உண்டு. இதையெல்லாம் கடந்து அவருக்குள் ஓர் ஓவியக்கலைஞனும் வாழ்ந்தான் என்பது பலர் அறியாதது. 

அண்ணா, ஓவியம், பேரறிஞர் அண்ணா

1963... இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தை கனன்று எரியச் செய்திருந்த நேரம். திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு வழிகளில் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியாக சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் மாநாடு கூடியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஆட்சிமொழி பற்றிய 17-வது பிரிவின் நகலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அங்கே அறிவித்தார் அண்ணா. போராட்டத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அவரோடு அன்பழகன், மதியழகன், கே.பி.சுந்தரம், பொன்னுவேல், வெங்கா, பார்த்தசாரதி உள்ளிட்ட இயக்கத் தோழர்களும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

அண்ணாவைப் பொறுத்தவரை சிறைச்சாலை புதிதல்ல. வெளியில் எந்த அளவுக்கு உத்வேகமாக இயங்குவாரோ, அதே அளவுக்கு சிறைக்குள்ளும் இயங்குவார். நாடகம், கேலி, கிண்டல், விளையாட்டு என்று சிறையே களைகட்டும். 

“சிறையில் இருக்கும் யாரும் மன வருத்தம் அடையக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் எப்போதும் ஏதாவது கேலி செய்து சிரிப்பூட்டிக் கொண்டே இருப்பார். சிறையில் நாங்களே சமைத்துக் கொள்வோம். எங்களுக்கு சமையல் மாஸ்டரும் அவர்தான்.  நூல் நூற்றுக்கொண்டே, "வெங்காய ஸ்பெஷல்" சாம்பார் வைக்க பக்குவம் சொல்லத் தொடங்கி விடுவார். சிறையில் எனக்கு கண் வலி. வலி என்றால் சாதாரண வலியல்ல. துடித்துப் போய் விட்டேன். மருத்துவமனைக்குக் கிளம்பும்போது, ’வெளியே போகிறாயே... எனக்குக் காராபூந்தி வாங்கி வா’ என்றார் அண்ணா. எனக்கு கண்வலி மறந்து போய்விட்டது. அவர் கேட்ட காராபூந்தி ஞாபகம் தான். சிகிச்சை முடிந்து வரும் வழியில், காராபூந்தி வாங்க உடன் வந்த காவலர் சம்மதிக்கவில்லை. சிறைக்கு வந்ததும் அண்ணா சிரி சிரியென்று சிரித்து விட்டார். ’கண்ணில் இருந்து உன் சிந்தனை மாறவேண்டும் என்பதற்காகத் தான் காராபூந்தி கேட்டேன். நீ வாங்கி வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும்’ என்றார். 

சிறையிலேயே நாடகம் எழுதி எங்களை நடிக்க வைப்பார். தீராத தோல் வலி, வெளியில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் என எல்லா துயரங்களையும் தனக்குள் அடக்கிக்கொண்டு, பிறர் துன்பப்படக்கூடாது என்பதிலேயே அவர் குறியாக இருப்பார்..." என்று எழுதுகிறார் அண்ணாவோடு சிறையில் இருந்த "தையற்கலை" இதழின் ஆசிரியர் கே.பி.சுந்தரம். 

அண்ணா வரைந்த ஓவியம், பேரறிஞர் அண்ணா, அறிஞர் அண்ணா

கே.பி.சுந்தரம் நன்றாக ஓவியம் வரைவார். சிறையில் பொழுதுபோக்குவதற்காக அவர் வரையும் போது அண்ணா ஆர்வத்தோடு பார்ப்பார். அவருக்கு ஓவியம் மிகவும் பிடிக்கும். அதன் காரணமாகவே, அனைத்து மாநாடுகளிலும் ஓவிய கண்காட்சிகள் ஏற்பாடு செய்ய வைப்பார். சிறையில் சுந்தரம் ஓவியம் வரைவதைப் பார்த்து அவருக்கும் வரையும் ஆசை வந்து விட்டது. ஒரு காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து வரையத் தொடங்கி விட்டார். ஒரு ராணுவ வீரனின் ஓவியத்தையும், ஒரு மலைக்காட்சியையும் வரைந்தார். பிறகு வண்ணப் பென்சில்களை வாங்கி சிரத்தையாக தீட்ட ஆரம்பித்து விட்டார்.  அவரின் ஈடுபாட்டையும் வரையும் போது அவருடைய முகபாவத்தையும் வரைந்த ஓவியங்களையும் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். 

ஒருவர் சொன்னார், "ராணுவ வீரரின் தொப்பி சரியாக இல்லை" என்று. அண்ணா விட்டுக் கொடுக்கவில்லை. "அதெப்படி சரியாக இருக்கும்... இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவனப்பா" என்று சொல்ல எல்லோரும் சிரிப்பு மறந்து அனுதாபப்படத் தொடங்கி விட்டார்கள். 

அண்ணா வரைந்த ஓவியம், மலைக்காட்சி, அறிஞர் அண்ணா

அண்ணா வரைந்த மலைக்காட்சியில் யானையை விட புலி பெரிதாக இருந்தது. "இதென்ன புதுவகை புலியாக இருக்கிறதே" என்று சுந்தரம் சொல்ல சிறை எங்கும் சிரிப்பு சத்தம். விடவில்லை அண்ணா. "நீங்கள் பதினாறு அடி வேங்கையைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா... அதுதான் இது" என்று சொல்ல சிறை மறந்து எல்லோரும் சிரித்தார்கள். 

16.11.1963 அன்று கைதாகி சிறைக்குப் போன அண்ணாவும் தோழர்களும் 23.05.1964 அன்று விடுதலை ஆனார்கள். சிறைக்குள் இருந்தபடியே காஞ்சி இதழில் எழுதிய, "கைதி எண் 6342" என்ற சிறைக் குறிப்புகளில் தான் வரைந்த ஓவியங்கள் பற்றி சுவாரஸ்யமான குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

21.04.1964 அன்றைய குறிப்பில் எழுதியவை;
"ஓவியங்கள் தீட்டுவதில் நானும் முனைந்து விட்டேன். ஒரு ராணுவத் தலைவன், மலைப்பகுதி எனும் இரண்டு ஓவியங்கள் தயாரித்திருக்கிறேன். "ராணுவத் தலைவனுடைய தொப்பி சரியாக இல்லையே" என்றார்கள் நண்பர்கள். “அதெப்படி சரியாக இருக்க முடியும். இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவன்; சரண் அடைவதற்காக செல்லும் வேளை; எந்தத் தொப்பி கிடைத்ததோ அதை எடுத்துப் போட்டுக் கொண்டு போகிறான்" என்று காரணம் கூறினேன். "ஐயோ பாவம்" என்று அனுதாபம் தெரிவித்தார்கள். ராணுவத் தலைவனுக்கா..? ஓவியம் போடத் தெரியாத எனக்கா? என்று நான் கேட்கவில்லை. கேட்பானேன்..!"   

26.04.1964 அன்றைய குறிப்பில்; 
“காட்டுக்காட்சி ஒன்றை வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஓரளவுக்கு தயாராகி விட்டிருக்கிறது. அடர்ந்த காடு-மலைகள்- ஒருபுறம் வேங்கை; மறுபுறம் யானை. யானையை விட வேங்கை பெரிய அளவாக இருப்பதாக தம்பி சுந்தரம் கேலி பேசினார். "தம்பி, உனக்குப் பதினாறு அடி வேங்கையைப் பற்றித் தெரியாது. அது. இது..." என்று சமாளித்துக் கொண்டேன்." 

அண்ணா வரைந்த அந்த ஓவியங்கள் 19.01.1969 ஆனந்த விகடன் இதழில் இடம் பெற்றிருந்தன. மேலே இருப்பவை அந்த ஓவியங்கள் தான்!

அண்ணாவின் கடைசி கடிதம் இதுதான்

-வெ.நீலகண்டன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்