வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (03/02/2017)

கடைசி தொடர்பு:17:46 (03/02/2017)

‘உடம்பை பார்த்துக்குங்க..!’ ஸ்டாலினிடம் உருகிய ஜெயலலிதா! #VikatanExclusive

 

ராதாரவி

ந்தக்காலம் முதலே திரைக்கலைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி... பொது வாழ்க்கையானாலும் சரி எப்போது அப்படியே முடிவுகளை எடுப்பர். திராவிட பாரம்பர்யத்தில் ஊறி வளர்ந்த ராதாரவி இப்போது அப்படி ஒரு உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம் ஆர். ராதாவின் புதல்வரான அவர், தந்தையைப் போலவே தடாலடி மனிதர்தான்.

பழனியில் நடந்த நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் பேசி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். சர்ச்சைக்கு காரணம் அவர் அ.தி.மு.க வின் முன்னாள் எம்.எல்.ஏ. இன்னமும் அக்கட்சியில் தொடர்ந்து இயங்கிவருபவர். 

அவரை தொடர்புகொண்டு “ஏன் இந்த மனமாற்றம் ?”என்று கேட்டதும் பொங்கித்தீர்த்தார் மனிதர்.

“உண்மையில் அந்த நிகழ்ச்சியில் நான் திமுகவில் சேரப்போவதாக சொல்லவில்லை. சமூக வலைத்தளங்கள்தான் அப்படி செய்தி பரப்பிவிட்டன. 'ஸ்டாலின்தான் எதிர்காலத்துக்கான ஒரே தலைவர்' என்றேன். உடனே அதற்கு கண்ணும் காதும் வைத்துவிட்டார்கள். அப்படியே சொன்னாலும் என்ன தவறு. ஜெயலலிதா மறைவுக்குப்பின் இன்றைய அரசியல் சூழலில் தலைவராக சொல்லிக்கொள்ளும்படி யாராவது இருக்கிறார்களா... என் பார்வையில் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. அதற்காக சேர்வேன் என்றும் அர்த்தமில்லை” என்றவரிடம்...

ஒரு கட்சியில் இருந்துகொண்டு மாற்றுக் கட்சித் தலைவரை புகழ்வது நாகரிகமில்லைதானே?

கட்சியில்தான் இருந்தேன். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்லுவதற்கு முன்பிருந்தே கட்சியிலிருந்து விலகியே இருந்தேன். தி.மு.க வில் இருந்து வந்த எனக்கு உரிய மரியாதையை அளித்தவர் ஜெயலலிதா. ஒரு பேச்சாளராக என்னை கவுரவமாக நடத்தியதோடு எம்.எல்.ஏ வாகவும் ஆக்கி என்னை அழகு பார்த்தவர் அவர். அந்த நன்றியை ராதாரவி என்றைக்கும் மறக்கமாட்டான். அதற்காக அவருக்கு அவர் காலம் வரை நன்றியுடனே இருந்தேன். 

ஜெயலலிதா தமிழகத்தின் உறுதிமிக்க தலைவராக இருந்தவர். அவருக்குப்பின் அப்படி ஓர் தலைவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்போதுதான் ஸ்டாலினின் செயல்பாடுகள் என்னை கவர்ந்தன. தந்தை முதல்வராக இருந்தபோதும் அவர் தன்னை ஒரு சாதாரண தொண்டனாக நினைத்தே கட்சியில் துவக்கத்தில் பணியாற்றினார். இன்றும் அதே எளிமையாகவே இருக்கிறார். மிசா காலத்தில் அவர் உயிரையே இழக்கும் நிலைவந்தது. பல போராட்டங்கள் அரசியல் எதிர்ப்புகள் இவற்றைத் தாண்டி அவர் ஒரு தலைவராக உயர்ந்திருக்கிறார். 


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் தமிழகத்தில் உறுதிமிக்க ஒரு தலைவராக தேடிப்பார்த்தாலும் அவர்மட்டுமே தென்படுகிறார். ஜப்பானில் இருந்து ஒரு பெண் பேசிய வீடியோ ஒன்றில் “நமக்கு நல்ல ஜனாதிபதி இல்லை, நல்ல பிரதமர் இல்லை. நல்ல முதல்வர்  இல்லை' என்று பேசியதை பார்த்தேன். ஜப்பானில் உள்ள ஒரு பெண்ணுக்கு வரும் ஆதங்கம் உள்ளூரில் உள்ள எனக்கு வராதா.?!..
அதேசமயம் இன்று தமிழகத்தின் அரசியல் சூழல் மாறிவிட்டது. இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத கட்சி நல்லதல்ல. ஜெயலலிதாவுடனேயே என் அரசியல் பயணத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்தேன். என் விரக்தியை யாரிடமும் பேசாமல் ஒதுங்கியேதான் இருந்தேன். ஒரு நல்ல மேடை கிடைத்தபோது அதை தவிர்க்க முடியாமல் சொல்ல வேண்டியதானது. ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் உங்களின் இந்த முடிவு அவரது தலைமையை நீங்கள் விரும்பவில்லை என்பதாக எடுத்துக்கொள்ளலாமா? 
ஏற்கிறேன்... ஏற்கவில்லை என்ற விவாதத்துக்குள் போக விரும்பவில்லை நான். ஜெயலலிதாவுக்குப் பிறகு ஒரு தலைவராக என்னைக் கவர்ந்தவர்; அந்த இடத்தை இட்டு நிரப்பத் தகுதியானவர் ஸ்டாலின் மட்டும்தான் என்பது என் கருத்து. 'இது' பிடித்திருந்தால், 'அது' பிடிக்கவில்லையென்று அர்த்தமில்லை. எனக்கு யாருடனும் எந்த முரண்பாடும் இல்லை. எனக்கு தோன்றியதை பேசினேன். ஜெயலலிதாவுக்குப்பிறகு தமிழக மக்களின் பொதுவான எண்ணமும் இதுதானே.

தவிர காசு பணம், புகழுக்காக கட்சி மாற ராதாரவி அரசியலில் நேற்று முளைத்த காளான் அல்ல. ராதாரவி யார் என்பது ஊருக்கே தெரியும். அரசியலில் கடக்க வேண்டிய துாரத்தை திருப்தியாக கடந்துவிட்டேன். லாப நஷ்டங்களைப் பார்த்து அரசியல் முடிவுகளை எடுக்கவேண்டிய தேவையும் எனக்கு இல்லை. பிடித்தால் நீடிப்பேன். பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுவேன். இதுதான் ராதாரவி.

அதிமுகவில் எதிர்ப்புகளை மீறி சசிகலா தாக்குப்பிடிப்பாரா, அக்கட்சியில் இருந்தவர் என்ற முறையில் சொல்லுங்கள்?

எனக்கு இப்போதுள்ள தலைமையுடன் எந்த முரண்பாடும் கிடையாது. ஸ்டாலின் தகுதியானவர் என்பதால் சசிகலா தகுதியற்றவர் என்பதல்ல அர்த்தம். அவர்கள் பற்றி பேசும் அளவுக்கு அக்கட்சியின் பெரிய பதவிகளில் இருந்ததில்லை நான். அப்படியே இருந்திருந்தாலும் நேற்றுவரை இருந்த ஒரு கட்சியை விமர்சனம் செய்வது நாகரிகமில்லை. அவர் தலைமை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஒரு மேடைப் பேச்சாளர் நான். என் தகுதியை பார்த்து எம்.எல்.ஏ ஆக்கினார் ஜெயலலிதா. அதற்கு அவர் உள்ளவரை அவருக்கு நன்றியுடன் நடந்துகொண்டேன். அவ்வளவுதான். அவர் இறந்தபிறகு தமிழகத்தில் ஒரு உறுதியான தலைவர் இல்லையே என்று எல்லோருக்கும் வந்த கவலை எனக்கும் வந்தது. அப்போதுதான் ஸ்டாலினின் உறுதி, கண்ணியம் பக்குவம் கட்சியை வழிநடத்தும் தன்மையை பார்த்தேன். ஜெயலலிதா இல்லாத குறையை அவர்தான் தீர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். 

உண்மையில் ஜெயலலிதாவே தலைவராக அங்கீகரித்த ஒரே தலைவர் ஸ்டாலின்தான். நான் எம்.எல்.ஏ வாக இருந்தபோது ஒருமுறை சட்டமன்றத்தில் அம்மாவும் ஸ்டாலினும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என செய்தி வெளியாகியிருந்தநேரம். “உங்களைப் போன்றவர்கள் நாட்டுக்கு தேவை. எதிர்காலத்துக்கு நீங்கள் எல்லாம் தலைவராக இருக்கப்போகிறவர்கள். உடலை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று ஸ்டாலினிடம் உருக்கமாக சில நிமிடங்கள் நின்று பேசிவிட்டுப் போனதை பார்த்திருக்கிறேன். இப்படி ஜெயலலிதாவாலேயே மதிக்கப்பட்டவர் ஸ்டாலின்.  

மேலும், அதிமுக என்று சொல்லவில்லை. பொதுவாகவே இரண்டாம் கட்டத் தலைமை இல்லாம கட்சி நிக்காது. 'அம்மாவின் இறப்பில்  கற்கவேண்டிய பாடங்கள் சில' என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று இரண்டாம் கட்டத்தலைமை இல்லாத கட்சி நிற்காது என்பது. அப்படியானால் அவர்கள் கண்ணோட்டத்தில் தகுதியான கட்சி தி.மு.க தானே. தலைவரின் காலத்திலேயே அடுத்த தலைவர் அடையாளம் காட்டப்பட்டது திமுகவில் மட்டும்தானே.

எப்படியிருந்தாலும் நேற்றுவரை பதவி, பணம், புகழ் அனுபவித்துவிட்டு கட்சிக்கு நெருக்கடியான நேரத்தில் கழன்று கொண்டதாக பேசுவார்களே?

யார் பேசுவார்கள். பேசுபவர்களை என் முன்னே வந்து பேசச் சொல்லுங்கள். அதற்கான காரண காரியங்களைச் சொல்கிறேன். மேலும் நான் எதிர்கட்சியிலிருந்துகொண்டு ஆளும்கட்சியை பாராட்டவில்லை; ஆளும்கட்சிக்காரனாக இருந்தபடி எதிர்கட்சித்தலைவரை பாராட்டியிருக்கிறேன். இன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி அதிகாரம் உள்ள கட்சியிலிருந்து கொண்டு பேசுகிறேன். ஆளும்கட்சியை அனுசரித்துச் சென்றால் நான்கு காசு பார்க்கலாம் என நினைக்காமல் எதிர்கட்சித்தலைவரை பாராட்டுவதிலிருந்தே என் நேர்மையை புரிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பாரம்பர்யத்தைப் பற்றியும் தெரிந்தவர்கள் அப்படி சொல்லவும் மாட்டார்கள். 

அப்படியானால் விரைவில் திமுக மேடையில் உங்களை பார்க்கலாமா...?

திமுகவை எப்போதும் நான் ஒரு கட்சியாக பார்த்ததில்லை. அது என் தாய்வீடு. கலைஞரை இன்றைக்கும் நான் சித்தப்பா என்றே அழைப்பேன். கட்சியில் சேர்வதாக எண்ணம் இருந்தால் யாருக்கும் தெரியாமலோ இப்படி  பூடகமாக தெரிவித்து விட்டெல்லாம் சேர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கலந்துபேசியபின்தான் அதுகுறித்து முடிவெடுப்பேன்.

இன்னொன்று சொல்லட்டுமா...நான் இப்போது அந்தக்கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியவில்லை. சில மனக்குழப்பங்களால் கடந்த முறை என் உறுப்பினர் அட்டையைக் கூட நான் புதுப்பிக்கவில்லை. அதனால் என் உறுப்பினர் எண் காலாவதியாகிவிட்டிருக்கும்...என்று சொல்லி முடிக்கிறார் ராதாரவி.

- எஸ்.கிருபாகரன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்