"ஏழு குறுக்கு.... இரண்டு நெடுக்கு!"- கானா பழநி குறித்து பிரபலங்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்று கானா பாடல்கள். அந்தக் கானா பாடல்களில் முக்கிய அடையாளம் 'புளியந்தோப்பு பழநி' காலமாகிவிட்டார்.

அடித்தட்டு மக்களின் கொண்டாட்டங்களிலும்,துக்கங்களிலும் மட்டுமே பாடப்பட்டு வந்த கானா பாடல்கள் 90களில் திரைப்படத்திலும் உள்ளே நுழைந்தது. கானாவின் கலைவடிவம் மக்களுக்கானதாக இருந்ததால் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்கப்பட்டது. 

கிராமங்களில் தெம்மாங்கு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசைகள் இருப்பதைப் போல, மாநகரமான சென்னையின் உழைக்கும் வர்க்கத்து மக்களின் ஓய்வு நேரத்து மருந்தாகக் கானா அமைந்தது. தாளம் இசைக்க இந்தக் கருவிதான் வேண்டும் எனக் கானாவில் எதுவுமே இல்லை. இசைக்க வாகான, ஓசை வரக்கூடிய எதுவுமே கானாவின் வாத்தியம்தான். சென்னை கானா பாடகர்களின் வரிசையை கானா பழநியின் பெயரிலிருந்துதான் ஆரம்பிக்கின்றனர். அந்தப் பட்டியல் சிந்தை புண்ணியர், கானா உலகநாதன், கானா பாலா, 'மரண கானா' விஜி என நீள்கிறது. பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் அந்தப் புளியந்தோப்பு பழநி இன்று நம்முடன் இல்லை.

கானா பழநி

கானா பாடல்கள் தினந்தோறும் தன்னை புதுமைப்படுத்தியே இருக்கிறது. அதே நேரம் ஒவ்வொரு வெற்றிகரமான கலைப்பிரதியும் செய்வதைப்போல அந்த அந்தக் காலத்தின் சம்பவங்களை தனக்குள் ஆவணப்படுத்தியே வந்து கொண்டு உள்ளது. பழநியின் ஆரம்ப கால பாடல்களில் "என் ஆம்பூர் கரும்பு கட்டே" எனப் பாடுகிறார். ஆம்பூரில் இப்போது விவசாயம் நடக்கிறதா என்று கூட தெரியவில்லை. தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் இன்று மண் வளத்தை இழந்து நிற்கும் ஆம்பூரில் கரும்பு விளைச்சலான தகவலை சென்னையின் கானாவுக்குள் கொண்டு வந்தவர் பழநி. சமீபத்தில் கூட ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பற்றி ஒரு கானா பாடலைப் பாடியிருந்தார். 

''முன்னிலையில் இருக்கும் கானா பாடகர்களில் ஒருவர் சகோதரர் புளியந்தோப்பு பழநி. சென்னை உழைக்கும்  மக்களின் பாடல்களை பாடிவந்தவர். சில நாட்களுக்கு முன் கூட 'கானா பாலா' வீடு கிரகப்பிரவேசத்தின் போது சந்தித்தேன். அவரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது வீட்டுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்" என்றார் திரைப்படப் பாடலாசிரியர் கபிலன்.

எழுத்தாளர் பாக்கியம் சங்கர் குறிப்பிடுகையில்  "குப்பங்களில் திருமண வீடுகளிலும், மரண வீடுகளிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒலிக்கத்துவங்கிய குரல்கள் புளியந்தோப்பு பழநி மற்றும் சிந்தை புண்ணியர் ஆகியோரின் குரல்கள். அந்த மக்களின் சுக துக்கங்களில் பாடிக்கொண்டிருந்தவர் பழநி. மிகவும் எளிமையான மனிதர். பின்னர் மேடை போட்டு கானா பாடும் நிலை வந்தது அப்போதும் அதில் கோலோச்சியவர் பழநி. நாட்டுப்புறப்பாடல்கள் கேசட்டுகளில் வரத்தொடங்கிய அதே காலகட்டத்தில், தானே கானா பாடி கேசட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தவர் பழநி. இவை எல்லாவற்றையும் விட முதன் முதலில் முறையாகச் சங்கீதம் பயின்ற கானா பாடகர் புளியந்தோப்பு பழநி என்பது மிக முக்கியமான செய்தி" என்றார். 

"சென்னை மாநகரம் ஒருநாள் சிறப்பான நகரம் 
நாங்க கூவத்தில குளிச்சோம் - அட அடையாறில துவைச்சோம் 
பங்கிங்ஹாமில படகு விட்டோம் அது ஒரு காலம்.. 
இப்ப அத்தனையும் நாறிப்போச்சு இது ஒரு காலம்..இது நம்ம காலம்" 

என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான 'ஈ'  படத்தில்தான் 'புளியந்தோப்பு' பழநி முதன்முதலில் சினிமாவில் பாடினார். 

‛‛பழநி ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்த பின் அவருடன் வந்த டோலக்கு தபேலா வாசிப்பவர்களை பிரித்து அந்தந்த மைக் முன்னாடி நிறுத்தினர். 'இப்படி ஒரு செட்டப் இருக்கும் எனத் தெரியாது' என ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார். பின்னர் ஶ்ரீகாந்த் தேவா அவரைச் சரி செய்து பாட வைத்தார். அப்போது பாடிய அவரின் அந்தப் பாடல் அப்படியே நெகிழ வைத்துவிட்டது. 'ஏழு குறுக்கு, இரண்டு நெடுக்கு, நாலு பேரு வாகனம். அதில் நீயும் ஒரு நாள் போகனும். போயித்தானே ஆகனும்.நானும் ஒரு நாள்' என்கிற பாடல் அது. பாடை கட்டுவோருக்கு மட்டுமே தெரிந்த தொழில் நுணுக்கம் அது. ஒரு கலைஞனாக அதைக்கூட பழநி துல்லியமாகக் கவனித்து அதைப் பாடலாக்கி இருந்தார். பொதுவாகச் சினிமா வாய்ப்பை பழநி தேடியதில்லை. ஈ படத்துக்குக் கூட நானாகத் தேடிப்போய் தான் அவரைப் பாட அழைத்தேன். அவரின் மறைவு சென்னை பூர்வீக மக்களுக்கான இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்" என இயக்குநர் ஜனநாதன் தெரிவித்தார். 

கடந்த 20-ம் தேதி கூட இவரின் "ஆனா ஆவன்னா அம்பேத்கரை பாரண்ணா" உள்ளிட்ட புதிய கானா பாடல்கள் வெளியாகின.

- வரவனை செந்தில் 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!