வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (05/02/2017)

கடைசி தொடர்பு:20:10 (05/02/2017)

#சிடி டூ சி.எம்

டிசம்பர் 5-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த செய்தி வெளியானது. தற்போது பிப்ரவரி 5-ம் தேதி  சசிகலா, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் தோழி என்ற ஒரு அடையாளத்துடன் மட்டுமே இருந்த சசிகலா, இந்த இரண்டு மாதங்களில் சின்னம்மா, அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்றக் கட்சி தலைவர், விரைவில் முதல்வர் என பல அடையாளங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை குறித்த குட்டி ரீ-வைண்ட்.

Sasikala with Jayalalithaa


1956 -  விவேகானந்தன்-கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.

1973 - அரசு துணை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜனை திருமணம் செய்தார்.

1980- ஜெயலலிதா அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்து வளர்ந்து கொண்டிருந்த நேரம். அப்போது ஜெ.,வுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்தது. பின், அவரது பிரசார சுற்றுப் பயணங்களை படம் பிடிக்கும் வாய்ப்பை  ‘வினோத் வீடியோ விஷன்’ மூலம் நடராஜன்-சசிகலா பயன்படுத்திக் கொண்டனர். ஜெயலலிதாவின் பிரசார கேசட்டுகளை கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் அடிக்கடி நுழைந்தார் சசிகலா. அப்போதே ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு சென்றார். அவருக்கு துணையாக யாரை அனுப்புவது? என்று பேச்சு எழுந்தபோது, சசிகலா பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. சசிகலா என்றதும் ஜெயலலிதாவும் க்ரீன் சிக்னல் காட்டினார்.

1984- தேர்தல் நேரம். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு கூட்டம் அள்ளியது. இதனால், பாதுகாப்பை பலப்படுத்த மன்னார்குடியில் இருந்து சசிகலாவின் தம்பி திவாகரன் வரவழைக்கப்படுகிறார். பின் ஜெ., கூட்டங்களுக்கு திவாகரனும் செல்ல துவங்கினார். இதையடுத்து தனி உதவிக்கு சசிகலா, பாதுகாப்புக்கு திவாகரன், அரசியல் ஆலோசனைக்கு நடராஜன் என கார்டனை, மன்னார்குடி ஆக்கிரமிக்க துவங்கியது

கார்டனில் மட்டுமல்ல, ஜெயலலிதா டெல்லியில் ராஜ்யசபாவுக்கு சென்றாலும் சசிகலா உடன் சென்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்ப, அவருக்கு ஆறுதல் கூறினார்கள் சசிகலா மற்றும் நடராஜன். 

1989- திவாகரனின் நடவடிக்கைகள் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் திவாகரன் வெளியேற்றப்படுகிறார்.  அதற்கு பிறகு, நடராஜன் உடனும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஆனால், சசிகலா தொடர்ந்து ஜெயலலிதா அருகிலேயே இருந்து வந்தார்.

1991- ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரான பிறகு, கார்டன் வீட்டுக்குள்ளேயே குடிபுகுந்தார் சசிகலா. சட்டசபைக்கு சென்றாலும், கார்டன் சென்றாலும் ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்தார் சசிகலா. ஒரு கட்டத்தில் 'உடன் பிறவா சகோதரி சசிகலா' என ஜெயலலிதா அறிக்கை விட்டார். பின்னர், மன்னார்குடி குடும்பம் ஆதிக்கம் செலுத்த துவங்கியது.


1996- சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.  ஃபெரா வழக்கில் சசிகலா கைதானார். அதே ஆண்டு, சசிகலாவை நீக்கினார் ஜெயலலிதா. இதையடுத்து 1997-ம் ஆண்டு மீண்டும் சசிகலாவை சேர்த்துக்  கொண்டார்.

Sasikala with Jayalalithaa

2001- ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யும் அளவுக்கு வளர்ந்தார் சசிகலா. மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தது.

2011- சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு நீக்கினார் ஜெயலலிதா. சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகலா மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார்.

2014- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் கைதாகினர். 

2016- செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்படுகிறார். ஜெயலலிதா உடல்நலன் குறித்து அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன. அப்போலோவும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் சசிகலாவின் உத்தரவுகளை பின்பற்றுகிறார்கள். 

டிசம்பர் 5-ம் தேதி இரவு ஜெயலலிதா மரணமடைந்தார். 

டிசம்பர் 6-ம் தேதி ஜெயலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதல் கூறினார். சசிகலா கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும், ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ர.ர -க்கள் கோஷங்களை எழுப்பினர்.

Sasikala

டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

டிசம்பர் 31- அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றார்.

2017- இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதல்வர் ஓ.பி.எஸ் முன்மொழிய அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


30 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்ததால் கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் சசிகலாதான் கவனிக்க வேண்டும் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால், ஜெயலலிதாவிற்கு துணையாக இருந்தார் என்பதற்காகவே, சசிகலாவை மக்கள் ஏற்பார்களா?  

-இரா.குருபிரசாத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க