சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா ஆளுநர்?!  - திடுக் டெல்லி காட்சிகள் | Will Governor help sasikala to be sworn in as CM?

வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (06/02/2017)

கடைசி தொடர்பு:13:49 (06/02/2017)

சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா ஆளுநர்?!  - திடுக் டெல்லி காட்சிகள்

சசிகலா

'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'பதவியேற்பு நடக்கும் வரையில் பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார்' என அறிவித்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'கிரிமினல் வழக்கு உள்ளவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என குடியரசுத் தலைவருக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. 

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் சசிகலா. இன்னும் சில தினங்களில் முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார். 'கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புங்கள்' என தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நேரத்தில், இப்படியொரு 'திடீர்' காட்சி அரங்கேறுவதை டெல்லி பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை. "ஆட்சி அதிகாரத்தில் பன்னீர்செல்வம் பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு சில வேலைகளைச் செய்து கொடுத்தது. கருணாநிதி, ஜெயலலிதாவால் சாதிக்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு, அவசரச் சட்டம் கொண்டு வந்தார் ஓ.பி.எஸ். இதன் பின்னணியில் மத்திய சட்ட அமைச்சகம் உள்பட பல துறைகள் இறங்கி வேலை பார்த்தன. 'தமிழகத்தில் நாம் சொல்வதைக் கேட்கும் முதல்வராக பன்னீர்செல்வம் இருப்பார்' என்று நம்பியது பா.ஜ.க. இனி அவர்களைப் பொறுத்தவரையில், பன்னீர்செல்வம் நம்பகமானவர் இல்லை" என விவரித்த சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள், 

சசிகலா புஷ்பா"தேர்தல் ஆணையத்திலும் டெல்லி கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் சசிகலா புஷ்பா. அந்தக் கடிதத்தில், 'பொதுக்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என நடக்காத ஒன்றை, நடந்ததாகக் கூறியுள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள். பொதுக்குழுவில் அப்படி ஒரு தேர்வு நடக்கவில்லை. இது கிரிமினல் குற்றத்திற்குச் சமமானது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய கடிதத்திலும், 'சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளார் சசிகலா. இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரப் போகிறது. அப்படியானால், நிலையான ஆட்சியை திருமதி.சசிகலாவால் தர முடியாது. அமலாக்கத்துறையின் வழக்கையும் எதிர்கொள்ள இருக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது. ஜெயலலிதா இறந்தபிறகு, முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு வழங்கினார் ஆளுநர். தற்போது அந்த வாய்ப்பை அ.தி.மு.க தவறவிட்டுவிட்டது. சசிகலாவை தேர்வு செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகம். எனவே, தமிழகத்தில் மறு தேர்தலை நடத்துங்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டுதான், 'பதவிப் பிரமாணம் நடக்கும் வரையில் பன்னீர்செல்வம் தொடர்வார்' என அறிவித்திருக்கிறார் ஆளுநர். அடுத்து நடக்கும் காட்சிகளை கவனித்து வருகிறோம்" என்கின்றனர் விரிவாக. 

"தமிழகத்தில் நடக்கும் விவகாரங்களை பா.ஜ.க மேலிடம் கவனித்து வருகிறது. 'கோட்டையை நோக்கி காய் நகர்த்துகிறார் சசிகலா' என உறுதியான தகவல் கிடைத்த பிறகுதான், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்குக்கு வேகம் கூட்டப்பட்டது. 'இந்த வழக்குகள் வேகம் பெறுவதற்குக் காரணமே, ஆடிட்டர் குருமூர்த்திதான்' என நடராசன் தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வலுவான கூட்டணியை தமிழகத்தில் உருவாக்க நினைத்தார் பிரதமர் மோடி. அதற்கேற்ப, தமிழக அரசுக்குத் தேவையான உதவியைச் செய்து வந்தார். 'தமிழ்நாட்டில் சசிகலாவுக்கு என்ன செல்வாக்கு உள்ளது?' என மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கைகளை ஆராய்ந்த பிறகுதான், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான மனநிலையை எடுத்தார். அதே சமயம், 'உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம்' என மத்திய அரசின் கவனத்திற்கும் சில தகவல்களைக் கொண்டு சென்றது சசிகலா தரப்பு. மன்னார்குடி உறவுகளின் டெல்லி லாபியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 'பதவியில் அமர்ந்தே ஆக வேண்டும்' என கார்டன் வட்டாரத்தினர் உறுதியாக இருந்தனர். அவர்களுக்குக் குறிப்பால் சில விஷயங்களைச் சொல்லும்விதமாகத்தான் வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டன. 'அதையும் மீறி அரசியல் செய்வோம்' என மன்னார்குடி உறவுகள் களமிறங்கியுள்ளனர். இனி அடுத்து நடக்கப் போகின்ற காட்சிகளை அகில இந்திய தலைமை முடிவு செய்யும்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர். 

'மக்களின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிட்டார்' என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசையும் ' ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை' என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் நேற்று பேட்டியளித்தனர். மொத்தத்தில், 'ஜெயலலிதா ஆதரவு வாக்குகளை யார் அறுவடை செய்வது' என்பதுதான் பிரதான கட்சிகளின் விவாதமாக இருக்கிறது! 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்