சசிகலா போட்டியிடும் தொகுதி இதுதான்!  உளவுத்துறை குறிப்பு #VikatanExclusive

ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து சசிகலாவும் போட்டியிட உள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று உளவுப்பிரிவு போலீஸாரும் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். முதல்வர் பொறுப்பை ஏற்கவுள்ள சசிகலா, பதவி ஏற்ற 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இதனால் எந்த தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று மாநில உளவுப்பிரிவு போலீஸார் களஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர். 

 

இரண்டு தரப்பும் கொடுத்த ரிப்போர்ட்டும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கொடுத்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதி. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதே காரணம் என்றும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சசிகலாவுக்கும் இந்த தொகுதியே சிறந்தது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். உளவுப்பிரிவு போலீஸாரும் சசிகலாவுக்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் சொல்லி உள்ளனர். இதனால் சசிகலா, முதல்வரானபிறகு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கார்டனில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 


  இந்த தகவல் சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டதும் அவரும் அதை ஆமோதித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.தங்கதமிழ்ச்செல்வன்  விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். அந்த தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்த தகவல் தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் தெரிவிக்கப்பட்டதும் சின்னம்மாவுக்காக நான் ராஜினாமா செய்வதை என்னுடைய பாக்கியம் என்று அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
இதற்கிடையில் தென்மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவுக்காக தாங்களும் ராஜினாமா செய்யத் தயார் என்று கார்டனுக்குத் தகவலைச் சொல்லி உள்ளனர். அதற்கு இப்போதைக்கு முதல்வர் பதவி ஏற்பது தொடர்பான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதனால் யாரும் அவசரப்பட வேண்டாம் என்று கார்டனிலிருந்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதவியை துறக்கத் துடிக்க காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. 

- எஸ்.மகேஷ் 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!