மு.க.ஸ்டாலின் சொன்ன 'சின்னம்மா' கதைகள்!

திமுக


திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்-லதா தம்பதியரின் மகள் ஸ்ரீஜனனியின் திருமணம், திருச்சியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இத்திருமணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள்.

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் தற்போது பரவி வருகின்றன. அதை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வரைப் பார்த்த மாநிலம் என்ற தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதைப் படித்துவிட்டு, பலரும் சிரிக்கிறார்கள். சிலர் வேதனைப்படுகிறார்கள். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சில குட்டிக் கதைகளும் பரவி வருகிறது. அந்த கதை இது தான்..

ஒருவர் பேருந்தில் பயணம் செய்கிறார். அவர் அமர்ந்து இருக்கும் இருக்கை பெண்களுக்குரியது என்று கூறி நடத்துநர் எழுப்பி விடுகிறார். மற்றொரு பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்கிறார். அதுவும் பெண்களுக்குரிய இருக்கை என்று நடத்துநர் எழுப்பி விடுகிறார். இப்படி 3 முறை அவரை எழுப்பி விட்டுள்ளனர். 

மேலும் ஒரு கதையில், மனைவி ஒருவர் வீட்டு வேலைக்காரியை நீக்கி விடுகிறார். இது குறித்து கணவன் கேட்டபோது, 'ஒரு வேளை நான் இறந்து விட்டால் பசங்க வேலைக்காரியைச் சின்னம்மா என்று கூப்பிடுவார்களோ? என்று பயமாக உள்ளது' என்கிறார்.

ஒரு ஊரில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றில் தண்ணீர் வரும் போது அங்குள்ள மாமரத்தை பயன்படுத்தித்தான் கரையைக் கடப்பார்கள். 5,6 வருடமாக வறட்சியாக இருந்ததால், அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால், மரத்தைப் பயன்படுத்தும் சூழல் இல்லாமல் போனது. இந்நிலையில் திடீரென்ற, அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாமரம் காணாமல் போய் விட்டது. அந்த மரம், ஆற்றோடு அடித்துக்கொண்டு போய்விட்டது. அந்த சமயத்தில் கரையைக் கடக்க முயன்றவர்கள், அங்கு இருந்த சின்னமாமரம் 'சின்னம்மா மரம் அல்ல' ஒன்றை பயன்படுத்தி கரையைக் கடக்க முயற்சி செய்தனர். அதன் மீது ஏறி அமர்ந்து சென்றபோது தான் தெரிந்தது.. அது, மாமரம் அல்ல, முதலையின் முதுகு என்று. அதில் சென்றவர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறினார்கள். அவர்களுக்கு அப்போதுதான், தாம் எங்கு எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்பது புரிந்தது. அவர்களுக்கு பின்னாலேயே வெள்ளத்தில் சிலர், சின்ன படகில் பாதுகாப்பாக வந்தனர். அவர்கள் முதலை மீது ஏறி செல்வோரை பார்த்து, 'நாங்கள் அங்கு வந்தோம் என்றால் காப்பாற்றி விடுகிறோம். அதுவரைக்கும் அங்கேயே நீங்கள் இருங்கள்' என்று ஆலோசனை சொன்னார்கள். பாவம், அவர்களாலும் வேறு என்ன செய்ய முடியும்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் தமிழகத்தின் நிலை இருக்கிறது. இதில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. இதனை நான் கிண்டலாகவும் பேசவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொதுமக்களின் குரலாகவே நான், இதைப் பதிவு செய்கிறேன். இது, பொதுமக்களின் எதிர்ப்புகளையே வெளிக்காட்டுகிறது.

இந்த மேடையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால், நான் இது பற்றி மேலும் பேச விரும்பவில்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன். புரிகிறவர்களுக்குப் புரியும்" என்று சூசமாகவும் சின்னச் சின்ன கதைகள் சொல்லி, சசிகலாவை குறிப்பிட்டு அவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

- சி.ய.ஆனந்தகுமார், ரா.வளன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!