ஓ.பன்னீர்செல்வத்தை மாற்றியது ஏன்? முத்தரசன் கேள்வி

முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்த நிலையில், அவரை மாற்றியதற்கான காரணத்தை அதிமுக தலைமை விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தில் தற்போது கடும் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, காவிரி, முல்லைப் பெரியாறு, பவானி ஆறு போன்ற பல்வேறு முக்கிய பிரச்னைகளும் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. முக்கியமாக, முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்த நிலையில், அவரை மாற்றியதற்கான காரணத்தை அதிமுக தலைமை மக்களுக்கு விளக்க வேண்டும். இவற்றுடன், முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலா எவ்வாறு செயல்படுவார் என ஆறு மாதத்துக்குள் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால், தற்போதைய அதிமுக அரசானது, ஜெயலலிதா எதிர்த்த அனைத்துத் திட்டங்களையும் ஆதரித்து வருகிறது" என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

- சி.ய.ஆனந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!