வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (06/02/2017)

கடைசி தொடர்பு:16:25 (07/02/2017)

ஜெயலலிதா என்ன பேசினார்... எம்பாமிங் முறை... மருத்துவச் செலவு... ரிச்சர்ட் பீலே பேட்டி 

ஜெயலலிதா என்ன பேசினார்; எம்பாமிங் முறை; மருத்துவச் செலவு குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட பீலே விளக்கமாக கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, அப்போலோ மருத்துவர்கள் பாலாஜி, பாபு மற்றும் அரசு மருத்துவர் சுதா சேஷய்யன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து யாரிடம் தெரிவித்தீர்கள்?

ரிச்சர்ட் பீலே: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளரிடமும் விளக்கினோம்.

ஜெயலலிதா யாரையெல்லாம் சந்தித்தார்?

ரிச்சர்ட் பீலே: யாரை சந்திப்பது குறித்து ஜெயலலிதாவே முடிவு செய்வார். யார் வந்திருக்கிறார்கள் என்பதை கடிதத்தில் எழுதி ஜெயலலிதாவிடம் காட்டினோம்.

ஜெயலலிதாவை ஆளுநர் நேரில் பார்த்தாரா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் கண்ணாடி வழியாக ஆளுநர் அவரை பார்த்தார். சிகிச்சை முறை குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது முறை ஆளுநர் வந்தபோது ஜெயலலிதாவை பார்க்கவில்லை.

ஜெயலலிதா எப்படிப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார்?

ரிச்சர்ட் பீலே: முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. உடல் பரிசோதனையில் நோய் தொற்றால் கடுமையாக ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ஜெயலலிதாவின் இதயம், நுரையீரலில் நோய்தொற்று அதிகமாக இருந்தது. மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிரக்கியோஸ்டோமி செய்தபின் சுயநினைவு திரும்பியது.

ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை?

ரிச்சர்ட் பீலே: நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி. ஜெயலலிதா இறக்கும் போது அவருக்கு இரண்டு கால்களும் இருந்தது. ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு எந்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் ஜெயலலிதா சைகை செய்தார். சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார். நோயாளிக்கு பிரச்னை என்றால் முதலில் மருத்துவர்தான் கவலைப்படுவார்.

ஜெயலலிதா கைரேகை வைத்தாரா?

ரிச்சர்ட் பீலே: கையில் வீக்கம் இருந்ததால் அவர் கைரேகை வைத்தார்.

ஜெயலலிதா அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை.

ஜெயலலிதாவிடம் பேசினீர்களா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசினேன். எனது குடும்பத்தை பற்றி ஜெயலலிதா விசாரித்தார். உணவைப் பற்றியும், எனது குழந்தைகளை பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசினேன்.

ஜெயலலிதாவால் பேச முடிந்ததா?

ரிச்சர்ட் பீலே: தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார். ஆனால், தெளிவாக அவரால் பேசமுடியவில்லை. பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை பற்றி சசிகலாவிடம் தினமும் விளக்கினோம். சசிகலாவைத் தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர். அருகில் இருந்தவர்கள் பற்றி ஜெயலலிதா அதிகம் அறியவில்லை.

 

சசிகலாவைப் பற்றி...

ரிச்சர்ட் பீலே: சிகிச்சைக்காக நான் இங்கு இருக்கும் போதெல்லாம் சசிகலாவை பலமுறை பார்த்திருக்கிறேன். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் அவர் இருந்தார்.


ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்காதது ஏன்?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லவில்லை. சிறந்த மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்னைகள் கண்டறிந்து சிகிச்சை அளித்தோம்

ஜெயலலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது?

ரிச்சர்ட் பீலே: எதிர்பாராதபோது திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர்.

ஜெ.வுக்கு எக்மோ சிகிச்சை ஏன்?

ரிச்சர்ட் பீலே: ஒரு நோயாளிக்கு இதயத் துடிப்பு முடக்கம் (கார்டியக் அரெஸ்ட்) ஏற்படும்போது, எக்மோ சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் பலன் என்பது பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு CPR கொடுக்கப்பட்ட பின்தான், எக்மோ சிகிச்சையை தேர்வு செய்தோம். இது மருத்துவ ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு. எக்மோ சிகிச்சை கொடுக்கப்போவது பற்றி அரசுக்கும் ஜெயலலிதாவின் குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறதே?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை.

ஜெயலலிதா உடல் எம்பாமிங் செய்யப்பட்டது ஏன்?

ரிச்சர்ட் பீலே: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு அவரது உடலுக்கு எம்பாமிங் செய்யப்பட்டது. 5-ம் தேதி இரவு அவருக்கு எம்பாமிங் செய்யப்பட்டது. வி.ஜ.பி.களுக்கு இந்த நடைமுறை சாதாரணம் தான்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து கடிதம் எழுதியது ஏன்?

ரிச்சர்ட் பீலே:ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையை வைத்தே ஒன்றும் செய்ய முடியாது என கடிதம் எழுதினேன்.

வைகோவை சந்தித்தீர்களா?

ரிச்சர்ட் பீலே: வைகோவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் விடைபெறும் போது, என் விசிட்டிங் கார்ட்டை வாங்கிச் சென்றார். 

ஜெயலலிதா சாப்பிட்டதாக கூறப்பட்டது. இது உண்மையா?

டாக்டர் பாலாஜி: ஜெயலலிதா டிவி பார்த்தது, தயிர் சாதம் சாப்பிட்டது உண்மை.

ஜெயலலிதா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு?

டாக்டர் பாலாஜி: ஜெயலலிதாவுக்கான சிகிச்சை செலவு ரூ.5.5 கோடி. இந்த பணத்தை ஜெயலலிதாவின் குடும்பத்தினரே செலுத்தினர். 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு விளக்கம் அளிப்பது ஏன்?

டாக்டர் பாபு: ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவியதால் தற்போது விளக்கம் அளிக்கிறோம். செய்தியாளர்கள் சந்திப்பில் எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லை. அரசாங்கமே அழைத்து கூறச்சொன்னதால் செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கிறது. 

ஜெயலலிதா எப்போது சுயநினைவுக்கு திரும்பினார்? 

டாக்டர் பாபு: ஜெயலலிதா குணமடைய வேண்டும் என மருத்துவர்கள் போராடினோம். டிரக்கியோஸ்டோமி செய்தபின் ஜெயலலிதா சுயநினைவுக்கு திரும்பினார்.  மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா எப்படி இறந்தார்?

டாக்டர் பாபு: மாரடைப்பு வருவதற்கான காரணத்தை கணிக்க இயலாது. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் இதய துடிப்பு சிறிதும் இல்லாமல் இறந்துவிட்டார். ஜெயலலிதா சிகிச்சை விவரத்தில் அனைத்தையும் கூற இயலாது. ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் ஜெயலலிதா வீடு திரும்பி இருப்பார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டதா?

டாக்டர் பாபு: ஜெயலலிதாவுக்கு சுதந்திரமாக சிகிச்சை அளித்தோம். எந்த நெருக்கடியும் இல்லை.

ஜெ. உடல் பதப்படுத்தப்பட்டது ஏன்?

அரசு டாக்டர் சுதா சேஷய்யன்: ஜெயலலிதா உடல் டிசம்பர் 5-ம் தேதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. மக்கள் அஞ்சலியின்போது உடல் கெடக்கூடாது என்பதால் பதப்படுத்தப்பட்டது. உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் எம்பாமிங் செய்யப்பட்டது.

மு.சகாயராஜ், ர.பரத்ராஜ்


டிரெண்டிங் @ விகடன்