Published:Updated:

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

காமராஜர்

இன்றைக்கு நாம் படித்து, சமூகமாக மலர்ந்திருப்பதற்கு, அன்றைக்கே விதைபோட்ட அந்தத் தலைவர் கர்மவீரர் காமராஜர்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

இன்றைக்கு நாம் படித்து, சமூகமாக மலர்ந்திருப்பதற்கு, அன்றைக்கே விதைபோட்ட அந்தத் தலைவர் கர்மவீரர் காமராஜர்.

Published:Updated:
காமராஜர்

ஒவ்வொரு சிலையுமே, சில செய்திகளைப் பேசும். அந்த வகையில், தமிழ்நாட்டில் பெண், ஆண் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதுபோல இருக்கும் ஒரு தலைவரின் சிலை, தற்கால தலைமுறையைப் படிக்கவைத்த வரலாற்றைப் பேசுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு நாம் படித்து, சமூகமாக மலர்ந்திருப்பதற்கு, அன்றைக்கே விதைபோட்ட அந்தத் தலைவர் கர்மவீரர் காமராஜர்.

1903, ஜூலை 15 -ல் பிறந்து - அக் 02, 1975 -ல் நம்மைவிட்டு மறைந்த இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கும் எண்ணற்ற பங்களிப்பைச் செய்தவர் காமராஜர். அந்த வகையில் எட்டுத்திக்கும் ஒலிக்கும் போர்வாளான காமராஜரின் நினைவுதினத்தில், அவர் தொடர்பான எட்டு முக்கியத் தகவல்கள் இங்கே...

மக்களின் முதலமைச்சர் காமராஜர்!

1955-ல் கடும் புயலாலும் பெருமழையாலும் ராமநாதபுரம், கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, நிவாரணப் பணிக்காக மின்னல் வேகத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் காமராஜர். வெள்ளக்காட்டில், மார்பளவு நீரில் சாரக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்கி, ஒரு கால்வாயைக் கடந்து மறுகரைக்குச் சென்று மக்கள் பணியாற்றினார். ஒரு முதலமைச்சரே இப்படிக் களமாடுகிறாரே என அப்போது அனைவரும் மெய்சிலிர்த்து, பாராட்டினர்.

இது குறித்து `திராவிட நாடு’ இதழில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா, ``மக்களின் கண்ணீரைத் துடைக்க எமது முதலமைச்சர் விரைந்து சென்றிருக்கிறார்.

கோட்டையிலே உட்கார்ந்துகொண்டு உத்தரவுபோடும் முதலமைச்சர் அல்ல இவர். ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை என்று பேசிடும் பூசாரியும் அல்ல” என்று மனமுவந்து பாராட்டி எழுதினார். சிறந்த அரசியல் நாகரிகம் என்று இவையெல்லாவற்றையும் மூத்த அரசியல் தலைவர் ஆ.கோபண்ணா தமது ' காமராஜ் ஒரு சகாப்தம் ' என்ற புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

மேலும், முதலமைச்சர் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்ட சி.சுப்ரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவச்சலத்தையும் தமது அமைச்சரவரையில் சேர்த்துக்கொண்டது ஈகோ இல்லாத தலைவராக காமராஜரை மக்கள் மனதில் உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாகவே சமூகநீதி அடிப்படையில் பி.பரமேஸ்வரன், உழைப்பாளர் கட்சியின் சார்பாக 19 உறுப்பினர்களைப் பெற்றிருந்த எஸ்.எஸ்.ராமசாமியை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டதன் மூலம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக காமராஜர் அமைச்சரவை இருந்தது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த பி.பரமேஸ்வரனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தது மாற்றத்துக்கான தொடக்கமாகப் பார்க்கப்பட்டது.

பொதுத்துறை விரும்பி காமராஜர்!

ஒருநாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க ரூபாய் 20 லட்சம் தருவதாகவும், மீதி ரூபாய் 80 லட்சத்தை அரசு கொடுத்தால் ரூபாய் 1 கோடியில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என்கிற திட்டத்தை முன்வைத்தார். இதற்கு துறைரீதியான அமைச்சரும் ஆதரவாக இருந்தார். இதைப் பொறுமையாக கேட்டபடியே இருந்த காமராஜர், 'அதற்குப் பேசாமல் மீதி இருக்கிற ரூ 20 லட்சத்தையும் சேர்த்து ஒரு கோடி போட்டு அரசாங்கமே மருத்துவ கல்லூரி கட்டிவிடலாமே' என்றார். சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தஞ்சாவூர் ஜில்லா போர்டு ரயில்வே செஸ் வரியாகச் சேமித்த ரூபாய் 1 கோடி இருப்பதை அறிந்து, அதைப் பயன்படுத்தி தஞ்சையில் மருத்துவக் கல்லூரி அமைக்க காமராஜர் நடவடிக்கை எடுத்தார்.

காமராஜர்
காமராஜர்

அப்படித்தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி உருவானது. சேவைத்துறையான மருத்துவத்தில் தனியாரை அனுமதித்தால், அவர்கள் அதை லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாற்றிவிடுவார்கள், இது ஏழைகளுக்கு ஆபத்தாகிவிடும் என்றே அன்றைக்கு அதைத் தடுத்தார் காமராஜர். இன்றைய நிலைமையை வாசகர்கள் நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீர்நிலைகளின் நாயகர் காமராஜர்

சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் எந்த வளர்ச்சியையும் காணாத கிராமங்களில் முதன்முறையாகச் சாலைகளும், மின் இணைப்புகளும், கல்விக்கூடங்களும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையும் வந்தது என்றால், அதற்கு காமராஜரின் ஆட்சிதான் காரணம். அந்த அளவுக்கு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்திய முதலமைச்சராக இருந்தார்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

மேலும் பவானி அணை, வைகை அணை, பாபநாசம், சோலையாறு எனப் பல அணைகளைக் கட்டி, விவசாயப் புரட்சிகளுக்கு வழி அமைத்துத் தந்தார் காமராஜர்.

இட ஒதுக்கீடு நாயகர் காமராஜர்

1928 ஆண்டு முதல் ஓரளவுக்காவது நடைமுறையில் இருந்துவந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை , இந்திய விடுதலைக்குப் பிறகு ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த கம்யூனல் ஜி.ஓ செல்லாது என உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையொட்டி 1950, டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ மாநாடு' ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில்தான், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை, பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தார் காமராஜர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு, சட்டப் பாதுகாப்பு கிடைத்தது. அந்த வகையில் ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று அழைக்கப்பட்டார் காமராஜர்.

பெரியார் - காமராஜர் தோழமை

``சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். பச்சைத் தமிழரின் ஆட்சி” எனப் பாராட்டியவர் தந்தை பெரியார். தேசியம், திராவிடம் என இருவரும் வெவ்வேறு தளத்தில் பயணித்தாலும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் என்ற புள்ளியில் கைகோத்து பாடுபட்டார்கள். அவர்கள் நட்புக்கு ஓர் உதாரணம்... 1967 தேர்தலில், விருதுநகர் தொகுதியில் 1,285 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க-வின் பெ.சீனிவாசன் எனும் மாணவ வேட்பாளரிடம், காமராஜர் தோல்வியைச் சந்தித்தார்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

இதைக் கொண்டாடும் வகையில் ஒருசில தி.மு.க-வினர், 'படிக்காத காமராஜர், படித்த மாணவரிடம் தோல்வியைச் சந்தித்தார்' எனச் சுவரொட்டிகளை ஒட்டினர் .

இதற்கு உடனடியாக, 'படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றிபெற்றார் ' என பதிலடி கொடுத்தார் தந்தை பெரியார்.

படிக்காத மேதையா காமராஜர்?

காமராஜர் ஆறாம் வகுப்பு வரைதான் பள்ளியில் படித்தார் என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது வாசிப்பு சிறப்பாகவே இருந்தது.

‘எனது போராட்டம்’ என்ற தலைப்பில் ம.பொ.சி எழுதிய சுயசரிதையில், நாற்பதுகளின் தொடக்கத்தில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார். அப்போது சிறைக்கு வந்த காமராஜர், கூடவே ‘என்சைக்ளோபீடியா’ வால்யூம்களையும், வெ.ப.சுப்ரமணிய முதலியார் உரையுடன் வெளியான ‘கம்பராமாயண சாரம்’ நூலின் தொகுதிகளையும் கொண்டுவந்திருந்ததாக எழுதியிருக்கிறார்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

‘ஆனந்த விகடன்' இதழில் கல்கி எழுதிய தலையங்கங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்த்தன என்றும் கூறியிருக்கிறார் காமராஜர்.

டெல்லியில் காமராஜரின் துணிப்பெட்டியில் ஜான் குந்தரின் ‘இன்சைடு ஆப்பிரிக்கா’, ஆல்டஸ் ஹக்ஸ்லேயின் ‘எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்’, வி.ச.காண்டேகரின் ‘சிந்தனைச் செல்வம்’ புத்தகங்களையும் ‘டைம்ஸ் மேகஸின்’, ‘நியூஸ் வீக்’ இதழ்களையும் பார்த்ததாக எழுதியிருக்கிறார் சாவி.

அந்த அளவுக்கு உலக அரசியலைப் படித்தவர் காமராஜர் என இவையெல்லாவற்றையும் என்னிடம் நினைவுபடுத்தி அசைபோடுகிறார் மூத்த அரசியல் தலைவரான ஆ.கோபண்ணா.

`கிங்மேக்கர்’ காமராஜரின் கே பிளான்!

கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப் பணியாற்ற வர வேண்டும் என காமராஜர் வலியுறுத்தியதை நேரு ஏற்றுக்கொண்டார். அக் 02, 1963 -ல் இதே நாளில், தமது ராஜினாமாவை அறிவித்து, ஒன்பது ஆண்டுகளாக வகித்துவந்த முதலமைச்சர் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.

லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன் ராம் உள்ளிட்ட பலரும் மனதாரப் பதவியை ராஜினாமா செய்து, கட்சி வேலைகள் செய்தார்கள். குறிப்பாக 1960-களுக்குப் பிறகு இப்படியான கே பிளானால், லட்சக்கணக்கான இளைஞர்கள் காங்கிரஸில் இணைந்தார்கள். காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்டியது காமராஜரின் 'கே' பிளான்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

பிற்பாடு 1964-ல் ஜவகர்லால் நேரு இறந்த பிறகு, லால் பகதூர் சாஸ்திரிக்கு தலைமை அமைச்சர் பதவியை முன்மொழிந்தார் காமராஜர்.

1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது, இந்திரா காந்தியை தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவந்ததில் காமராஜரின் பங்கு முதன்மையாக இருந்தது. இப்படிப்பட்ட நுட்பமான நகர்வுகளால் `கிங்மேக்கர்’ என்றும் காமராஜர் அழைக்கப்பட்டார். பிரதமர் பதவி வாசல்வரை வந்து வரவேற்றபோது அதைப் புறக்கணித்துவிட்டு, களப்பணியாற்றியவர் காமராஜர். நெருக்கடிநிலையை எதிர்த்தார். ஏற்றிவிட்ட காமராஜருடனேயே முரண்பட்டார் இந்திரா காந்தி.

எந்த இடத்திலும் பதவிக்காகக் கொள்கையை விட்டுக்கொடுக்காத போராளியாகவே மிளிர்ந்தார் காமராஜர்

சிக்கனக்காரர் காமராஜர்

எளிமையானவர். அவர் மறைந்த பிறகு அவர் பெட்டியில் சில வேட்டி, சட்டைகள் மட்டுமே இருந்தன. காமராஜர் பெயரில் எந்த சொத்தும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே அவரின் உண்மையான சொத்து. அவர்களுக்காக உழைக்க அவரின் கட்சியே தளம்.

காமராஜர் சாப்பிடும்போது யாரையும் 'சாப்பிடுங்க' என அழைக்க மாட்டார். ஒருமுறை இதை கவனித்த பத்திரிகையாளர் சோ, 'சாப்பிடும்போது வாங்க சாப்பிடலாம் என அழைப்பதுதானே முறை ' என கேட்டேவிட்டார். இதற்கு காமராஜரோ, 'உண்மைதான். ஆனால் நான் இருப்பது, சாப்பிடுவது எல்லாம் கட்சிப் பணத்தில்தான். நான், கட்சியின் முழுநேர ஊழியன். கட்சி, எனக்கும் உதவியாளருக்கும் மட்டுமே உணவுக்குப் பணம் தருகிறது. கட்சிப் பணத்தில் உணவு உண்ணும் நான் எப்படி மற்றவர்களிடம் கேட்க முடியும்... இது கட்சிக்காரர்களுக்குத் தெரியும்' எனத் தன் பாணியில் பொறுமையாக பதில் சொன்னார்.

அண்ணாவின் பாராட்டு முதல் கிங்மேக்கரின் `கே’ பிளான் வரை... கர்மவீரர் காமராஜர் குறித்த 8 சுவாரஸ்யங்கள்

அதேபோல, அவருடைய அம்மா, சென்னைக்கு வந்தால் இரண்டு நாள்களில் ஊருக்குக் கிளம்பச் சொல்லிவிடுவார். ஏனென்றால், 'இங்கேயே அம்மா இருந்தால், அவரைப் பார்த்து நான்கு உறவுக்காரர்கள் வருவார்கள். முதலமைச்சர் உறவு என்று ஏதாவது லாபம் பார்க்கத் துடிப்பார்கள். இந்தக் குடும்ப அரசியலுக்கு வழிகொடுக்க கூடாது என்றுதான் உடனே ஊருக்கு அனுப்பிவிடுவார் காமராஜர்' என்கிறார்கள் பழைய காலத்து விடுதலைப் போராட்ட வீரர்கள்.

சிக்கனமாக இருக்கும், குடும்ப அரசியல் செய்யாத அரசியல்வாதியை தற்காலத்தில் நாம் தேடித்தான் பார்க்க வேண்டும்போல.

இப்படியாக, தாம் ஆட்சிபுரிந்த ஒன்பது ஆண்டுகளில் எண்ணற்ற வளர்ச்சிக்கு விதைபோட்டார். வாழ்ந்த 73 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்தான் காமராஜர். இந்திய விடுதலைக்கும், அதன் பிறகான இந்திய வளர்ச்சிக்கும் பாடுபட்ட காமராஜரின் சிலைகள், தமிழ்நாட்டைக் கடந்து ஏனைய மாநிலங்களில் தென்படாதது ஒரு வருத்தமே.

மற்றபடி, 'நீ வரலாறாக மாற வேண்டுமென்றால், சொந்த நலன் பார்க்காமல் மக்களுக்காகப் பாடுபட்டால் வரலாறாக மாறலாம்’ என அடிக்கடி தன் சகாக்களிடம் சொல்வாராம் கர்மவீரர் காமராஜர்.

உண்மைதான்... அப்படி வரலாறாகத்தான் இன்றும் நம்மோடு வாழ்ந்துவருகிறார் காமராஜர்!