Published:Updated:

800 கால்நடை உதவி மருத்துவர்கள் திடீர் பணி நீக்கம்! - என்ன காரணம்?

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த 800 கால்நடை உதவி மருத்துவர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கால்நடை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

animal husbandry
animal husbandry

தமிழகத்தில் 2018-2019 கணக்கெடுப்பின்படி 88.14 லட்சம் பசுமாடுகள், 7.51 லட்சம் எருமைகள், 47.87 லட்சம் செம்மறி ஆடுகள், 81. 43 லட்சம் ஆடுகள், 1.84 லட்சம் பன்றிகள், இது தவிர குதிரை, கழுதை இதர விலங்குகள் 14 ஆயிரம் என மொத்தம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 49 கால்நடைகள் உள்ளன.

இந்தக் கால்நடைகளைப் பாதுகாக்க தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 875 துணை கால்நடை மருத்துவமனைகள், 2601 கால்நடை மருந்தகங்கள், 144 கால்நடை மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. கால்நடை மருத்துவர்கள், உதவி கால்நடை மருத்துவர்கள், கால்நடை பணியாளர்கள் என 5000 பேர் பணியில் உள்ளனர்.

animal husbandry
animal husbandry

இதில் 2 ஆயிரத்து 953 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் உள்ள நிலையில், 1,300 உதவி மருத்துவர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். இதை ஈடுசெய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 800 உதவி கால்நடை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 11 மாத ஒப்பந்த அடிப்படையில், மாதத்துக்கு 40,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்த ஒப்பந்தம் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்த நிலையில், 800 கால்நடை மருத்துவ உதவி மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கோமாரி முதலான தடுப்பூசி முதல் கால்நடைகளுக்கான சிகிச்சைகள் பாதிப்படைந்துள்ளன. மேலும், 800 கால்நடை உதவி மருத்துவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

`எல்லாமே அவர்கள் கையில்தான் இருக்கிறது!’ - கால்நடை மருத்துவராகும் கனவோடு காத்திருக்கும் சந்திரன்

இதுகுறித்து, ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்த உதவி கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், "கடந்த 2012-ம் ஆண்டில் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் வழக்கு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் எங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தனர். துறையில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் செய்யும் அதே பணியைச் செய்யும் எங்களுக்கு, மாத ஊதியமாக 40 ஆயிரம் ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுவந்தது.

animal husbandry
animal husbandry

தற்போது, 800-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. தமிழக மக்களின் பொருளாதாரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை குறிப்பிடத்தக்க பங்கினை வழங்கிவருகிறது. தற்போது, 17-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் வேளையில், உதவி மருத்துவர்கள் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தும். எவ்வித விவரங்களையும் முறையாகத் தெரிவிக்காமல் திடீரென எங்களை நீக்கம் செய்துள்ளனர்" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கூறுகையில்,``நிரந்தரப் பணியில் இருக்கும் உதவி கால்நடை மருத்துவர்கள் செய்யும் அதே பணியை நாங்களும் செய்கிறோம். எங்களுக்கும் சம உரிமை, சம ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார்.

animal husbandry
animal husbandry

கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், "800 கால்நடை மருத்துவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரே ஒரு மருத்துவரை 10 கால்நடை மருந்தகங்களுக்கு பொறுப்பாக நியமித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கால்நடை துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ``நிரந்தரம் அல்லாத உதவி கால்நடை மருத்துவர்கள்,11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டிற்கான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 17 உதவி கால்நடை மருத்துவர்கள் பணியிலிருந்தனர். வரும் ஆண்டுக்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் வகையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் பெற்றபின், மீண்டும் இவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்" என்றனர்.