வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (09/02/2017)

கடைசி தொடர்பு:17:55 (09/02/2017)

'நாடாளும் நகலே... இந்தியாவின் எலிசபெத்தே!' - சின்னம்மாவுக்கு தகதக அடைமொழிகள்

'நாட்டைக் காக்கவரும் பசும்பொன்னியே..., 'புரட்சித் தாரகையே...' (புரட்சித்தலைவியில பாதிய உருவு, தங்கத்தாரகையில பாதிய செருவு..) ன்னு சின்னம்மா விசுவாசிகள் ரகம்ரகமா வாழ்த்த நம்ம கையும் கிடந்து பரபரங்குது. சின்னம்மா மட்டுமல்லாமல் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் வாழ்த்தியும் பேனர் வைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. எப்படியும் இனிமே இந்தியப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிச்சு இங்கிலாந்து பல்கலைக்கழகம் வரைக்கும் எல்லோரும் சின்னம்மாவுக்கு 'டாக்டர்' பட்டம் கொடுக்கப் போறாங்க. நாமளும் அப்படியே 45 டிகிரியில் குனிஞ்சு நின்னு சின்னம்மாவுக்கு என்னென்ன பட்டம் கொடுக்கலாம்னு யோசிச்சோம். (காப்பி ரைட் பிரச்னை இல்லை...பேனரில் பயன்படுத்திக்கலாம்)

சின்னம்மா

மன்னை தந்த மகராசியே... :

'தென்னகத்து ஜான்சிராணியே...', 'வாழும் வேலு நாச்சியாரே'ன்னு இப்போலாம் காதுகுத்தும் விழாவுக்கே குழந்தைகளுக்கு பேனர் வைக்கிறாய்ங்க. அதனால, முதல்வராகப் போற சின்னம்மாவுக்கு ஊர்ப் பெருமையையும் சேர்த்து 'மன்னை தந்த மகராசியே... தென்னகத்து மேரிகோமே...' ன்னு பட்டம் கொடுக்கலாம். மேரிகோம் குத்துச்சண்டையில் எதிரில் நின்று அடித்து வீழ்த்தத் துடிப்பவர்களைத் தனது வியூகங்களால் வீழ்த்தி வெற்றி பெறுவதைப் போல, தன்னை முதல்வராக விடாமல் தடுக்க நினைக்கும் சக்திகளை அழித்தொழித்து அரியணை நோக்கி நகர்கிறார். 

நாடாளும் நகலே... :

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவைப் போலவே காலர் வெச்ச ப்ளவுஸ், ஆரஞ்சு கலர் பொட்டு, வட்டக்கொண்டை, கையில் வாட்ச், காலில் ஷாக்ஸ் என அவரைப் போலவே எல்லா எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸையும் சேர்த்து, அவரைப் போலவே கும்பிட்டு, அவரைப் போலவே போஸ் கொடுத்து, அச்சு அசல் ஜெயலலிதாவின் கலர் ஜெராக்ஸாகவே மாறியிருக்கிறார். ஜெயலலிதா சசிகலாவை விட சற்று கலராக இருப்பார் என்பதால் ரெண்டு மூணு கோட்டிங் எக்ஸ்ட்ரா பவுடரும் காலியாகிறதென உல்டா உளவுத் துறை தகவலும் தெரிவிக்கிறது. இப்படி, உச்சி முதல் பாதம் வரை நடை, உடை, பாவனைகளில் அம்மாவைப் போலவே இருப்பதால் 'அம்மாவின் அட்டர் ஜெராக்ஸே...' என்றோ 'நாடாளும் நகலே...' என்றோ அழைத்துப் பெருமை சூட்டலாம். 

இந்தியாவின் எலிசபெத்தே... :

1952 பிப்ரவரி மாதம், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, எலிசபெத் இங்கிலாந்தின் ராணியாகப் பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற அதே மாதத்தைதான் இப்போது 'சின்னம்மா' முதல்வராகப் பதவியேற்பதற்கும் தேர்ந்தெடுக்கிறார். நேற்றோடு 65 ஆண்டுகள் பதவியில் இருந்த பெருமையை அடைகிறார் ராணி எலிசபெத். இங்கிலாந்து அரச மரபுப்படி, மன்னனின் முதல் வாரிசுக்கு பட்டம் கிடைக்கும். எலிசபெத்தின் தந்தை ஜார்ஜுக்கு ஆண் வாரிசு இல்லாததால், எலிசபெத்துக்கு ராணியாகும் வாய்ப்புக் கிடைத்தது. அதே போல இங்கேயும், ஜெயலலிதா வாரிசாக யாரையும் முன்னிறுத்தாத காரணத்தால் சசிகலாவுக்கு முதல்வராகும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்தில் ஒரு எலிசபெத் ராணியாக இருந்தபடியால் இவர் இரண்டாம் எலிசபெத் ஆனார். இங்கேயும் சேம் மொமென்ட். 'அம்மா'வுக்கு அடுத்து அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்றதால் 'சின்னம்மா' ஆனார் சசிகலா. ஆக, இந்தியாவின் எலிசபெத்தே...' என்னும் பட்டம் சின்னம்மாவுக்கு அமோகப் பொருத்தமாக இருக்கும். 

டிஸ்கி : இங்கிலாந்து அரச வரலாற்றில் அதிக ஆண்டுகள் ராணியாக இருப்பவரும் எலிசபெத் தான். இன்றைக்கு உலகில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருப்பவரும் அவர்தான். இங்கேயும் அப்படி ஏதாவது நடந்துச்சுனா..? யம்மாடீ... சாரி. சின்ன யம்மாடீ..!

சசிகலா

சமூக ஊடகச் சூறாவளியே... : 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆல் ஓவர் இண்டியாவின் டாப் ஹிட் பெண்மணி சின்னம்மாதான். போட்டோஷூட் நடத்தி மாஸ் என்ட்ரி கொடுத்தது, சின்னம்மா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆனது, எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தி பன்னீருக்குப் 'பன்னீர்' அல்வா கொடுத்தது, கடைசியில் அவரையே தூக்கி அடித்து முதல்வர் பதவியேற்கப் போவதாக அரிதாரம் பூசியது எனச் சின்னம்மாவின் ஒவ்வொரு அசைவும் அன்றைய நாளின் அதகள ட்ரெண்ட். ஃபேஸ்புக் பரபரக்க, ட்விட்டர் தடதடக்க, வாட்ஸ்அப் வெடவெடக்க (அப்பாடா... ரைமிங்கு..!) இரண்டு மாதங்களுக்கும் மேலாக எங்கெங்கு காணினும் 'சின்னம்மா' படம்தான். 'பில்டப் பண்றமோ... பீலா வுட்றமோ... இந்த உலகம் நம்மளை உத்துப் பார்க்கணும்' என்னும் வைகைப்புயலின் பொன்மொழிக்கேற்ப, கலாய்ச்சாலும், கலங்கடிச்சாலும் வைரல் வரலாறு படைச்ச சின்னம்மாவுக்கு 'சமூக ஊடகச் சூறாவளியே...' பட்டம் கொடுக்குறதுல அந்தப் பட்டமே வகைதொகையில்லாமல் பெருமையடைகிறது. சின்னம்மா முதல்வராகுறதுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகுகிறதுனு கூட கிளப்பி விட்ருக்காய்ங்களாம். (யாரு..? யாரோ)

சோலை மலரொளியே... நீலக் கடலலையே... :

இதை யாருய்யா இதுக்குள்ள சேர்த்துவிட்டதுன்னு பதறாதீங்க மக்களே... 

பாரதியார் 'கண்ணம்மா'வை நினைத்துப் பாடிய வரிகள் இவை. 'சின்னம்மா சின்னம்மா அழகுப் பூஞ்சிலை...' ன்னு நம்மாளுக ஏற்கெனவே அடிச்சு நொறுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. கண்ணம்மா பாடல்களைப் பூராம் ctrl+H கொடுத்து 'சின்னம்மா'ன்னு மாத்தி வெளியீட்டு விழா நடத்துறதுக்குள்ள நாமளும் நம்ம பங்குக்குத் தமிழன்னை மேல நாலு டன் கரியள்ளிப் போடுவோம். 

சோலை மலரொளியேன்னா... இதுக்கு நாங்க எங்க போறது..? எல்லாம் புரிஞ்சுதான் பண்ற மாதிரி... போங்கப்பு!

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்