தனியாக நின்று போராடுவேன்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்..!

மெரினாவில் உள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ சமாதி முன் மண்டியிட்டு அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் மௌன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ. பன்னீர் செல்வம் அதிரடியாக பல தகவல்களைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், என் மனசாட்சி என்னை உறுத்தியதால், நான் இங்கு வந்து சேர்ந்தேன்.

அதன் விளைவாகவே நான் உங்கள் முன்னாள் நிற்கிறேன். அம்மா உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, என்னிடம் வந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்றார். மாற்று ஏற்பாடு தொடர்பாக அம்மா பேசும்போது, அதிமுக பொதுச்செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்றும், முதலமைச்சராக என்னைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். நான் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தேன். அதன் பிறகு வேறு வழியின்றி பதவி ஏற்றுக்கொண்டேன்.

நான் முதலமைச்சர் ஆன பிறகு, அடுத்து சில நாட்களில் கழகத்தின் பொதுச்செயலாளராக சின்னமாவை ஆக்க வேண்டும் என்று திவாகரன் வற்புறுத்துவதாக, விஜய பாஸ்கர் என்னிடம் வந்து கூறினார். அவரைத் தொடர்ந்து, மற்ற மூத்த அமைச்சர்களும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுக்குழுவைக்கூட்டி, சின்னம்மாவைப் பொதுச்செயலாளராக நியமித்தோம். 

பின்னர் ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தேன். நான் செய்த பணிகள் சிலருக்கு எரிச்சலூட்டியது. எனது அமைச்சரவையில் உள்ள உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் எனக்கு எதிராகப் பேசினார்கள். அதுபற்றி சசிகலவிடம் கேட்டபோது, அவர்களைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து இதேபோன்று பலமுறை அவமானப்படுத்தினார்கள். அவர்களே முதல்வராகத் தேர்ந்துவிட்டு, பின் ஏன் என்னை அவமானப்படுத்த வேண்டும். அதேபோல எம்.எல்.ஏக்கள் கூட்டப்பட்டதே எனக்குத் தெரியாது. ராஜினாமா செய்யச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். கட்டாயத்தின் பேரிலேயே ராஜினாமா செய்தேன். தனியாக நான் நின்று போராடுவேன்” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

படங்கள்:தே.அசோக்குமார்

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!