மௌனம் கலைத்த ஓ.பன்னீர்செல்வம்.... பின்னணி என்ன?

பன்னீர் செல்வம்

டந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கட்சியின் சட்டமன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்நேரமும் சசிகலா முதல்வராகப் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நேற்று டெல்லி விரைந்து ஜனாதிபதியைச் சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வராமல் அங்கிருந்து மும்பைக்கு பயணமானார். அதனால் சசிகலா பதவியேற்கும் நாள் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்தது. 

ஜெ. நினைவிடத்தில் நிகழ்ந்தது..

இந்த நிலையில் எதிர்பாராவிதமாக இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சுமார் 9 மணிக்கு வந்த ஓ.பி.எஸ் தொடர்ந்து நாற்பது நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார். அப்போது அவரது முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது. மேலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தபடி இருந்தது. நாற்பது நிமிடங்கள் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டு ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்துவிட்டு பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசினார்.  

பன்னீர் செல்வம் மெரினா

அப்போது பேசிய அவர், தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்ததாகவும். ஜெயலலிதாவின் இறப்பை அடுத்து நிகழ்ந்தவற்றைப் பற்றியும் கூறினார். தனக்கு முதல்வராகும் எண்ணமே இல்லாத நிலையில் தான் முதல்வராக்கப் பணிக்கப்பட்டதையும், பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமிக்க வேண்டும் என்று திவாகரன் கூறியதையும், அதைத் தொடர்ந்து எழுந்த வர்தா சிக்கல், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என பல பிரச்னைகளிலும் தான் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்ட போதும் அது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை என்றும். திடீரென அவர்களே முதல்வராக வேண்டும் என்று எண்ணி தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும். ஜெ.வின் நினைவிடத்திற்கு சென்று வந்துவிட்டு ராஜினாமா கடிதம் தருவதாகக் கூறியபோது கூட கையைப் பிடித்துக் கொண்டு கட்டாயப் படுத்தி அவர்கள் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறி சில மணி நேரத்தில் தமிழக அரசியலில் மிகப் பரபரப்பான சூழல் ஒன்றை உருவாக்கினார் பன்னீர் செல்வம். தொண்டர்கள் விரும்பும் ஒருவர்தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மக்கள் விரும்பும் ஒருவர்தான் முதல்வராகவும் இருக்கவேண்டும் இதற்காக தனியொருவனாகப் போராடவும் தான் தயார் என்றும் பகிரங்க அறிவிப்பு கொடுத்துவிட்டு அவ்விடத்திலிருந்து சிரித்தபடி நகர்ந்தார். 

ஜெயலலிதா

திடீர் பேட்டி ஏன்?

சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்க வேண்டும் என வற்புறுத்தி அவரைச் சந்திக்கச் சென்ற முதன்மையான இருவருள் தம்பிதுரையுடன் ஓ.பி.எஸ்ஸும் அடக்கம்.இந்நிலையில் திவாகரன் கேட்டுக் கொண்டதால்தான் அந்தப் பதவி அவருக்குத் தரப்பட்டது. இல்லையெனில் மதுசூதனன் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்கிறார் பன்னீர் செல்வம். பிரச்னை தொடங்கியது வர்தா புயல் சமயம் தொடங்கிதான். சென்னை முழுக்க வர்தா புரட்டி எடுத்திருந்தாலும் அது மொத்தமாக அமைதியாக மையம் கொண்டிருந்தது போயஸில்தான். தற்போது சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என்கிற பேச்சுகளுக்கிடையே புயல் வலுவடையத் தொடங்கி இருக்கிறது. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தாலும் சசிகலா பின்னணியில் இயங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வர்தா, ஜல்லிக்கட்டு போராட்டம் என அடுத்தடுத்து பன்னீர் அடித்த விளாசிய பந்துகள் சிக்ஸர்களாக விழ அது ஓ.பி.எஸ்ஸுக்கான இமேஜைக் கூட்டியதே ஒழிய மன்னார்குடிக் குடும்பத்தினர் பொதுச்செயலாளர் பதவி இருந்தும் பின்னணியில் மௌனமாகவே இருந்துள்ளார்கள்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு குழு பிரதமரை சந்திக்கச் சென்ற அதே சமயம் சசிகலா கூறியதற்கு இணங்க தம்பிதுரை தலைமையில் சிலர் பிரதமரைச் சென்று சந்திக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மோடி முதன்மைப் படுத்தியது ஓ.பி.எஸ் உடனான சந்திப்பைதான். தம்பிதுரையை சந்திக்க மறுத்துவிட்டார். இது தொடங்கி பன்னீர்செல்வத்தின் கை கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வலுபெறுவது தெள்ளத் தெளிவானது. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுத்தது மக்களிடையேயும் அவரது இமேஜை பல மடங்கு உயர்த்தி இருந்தது. இதுநாள் வரை எதிர்துருவமாகவே இருந்துவந்த எதிர்கட்சித் தரப்பு கூட பன்னீரைப் பாராட்டிப் பேசியது இதற்கெல்லாம் நிச்சயம் ஒரு உச்சாணியாய் அமைந்தது.   

சசிகலா

சசிகலா கட்டாயப்படுத்தியது ஏன்?

எண்ணூர் எண்ணெய் விபத்து தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களில் பன்னீர் செல்வம் பங்கேற்றிருந்த அதே சமயத்தில்தான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்தேறியிருக்கிறது. இதையடுத்துதான் தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் ஓ.பி.எஸ் கூறிகிறார். ஆனால் சசிகலாவோ முதலில் ஓ.பி.எஸ்ஸின் நிர்பந்தத்தின் பேரில்தான் தான் சட்டமன்றத் தலைவர் பதவியையும் முதல்வர பதவியையும் ஏற்றுக் கொள்ள இருப்பதாக முரண்பட்ட தகவல் ஒன்றை தெரிவித்தார். ஓ.பி.எஸ்ஸுக்கு உருவாகிவந்த இந்த தனிமனித இமேஜ்தான் சசிகலாவிற்கும் இடையூறாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் முதல்வர் பதவியையும் கேட்டு எழுதிப் பெற்றிருக்கிறார். 

’சின்னம்மா’ எங்கே?

சசிகலா முதல்வராவதற்கு பரவலாகவே எதிர்ப்பு வலுத்துவந்த சூழலில் உடனிருந்த பன்னீர் செல்வமும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பலமுறை அவர் ’மாண்புமிகு அம்மா’ என்றாரே ஒழிய கட்சியில் பிறர் சொல்லுவது போல ஒரு இடத்திலும் ’சின்னம்மா’ என்று குறிப்பிடவில்லை. தொடர்ந்து அவர்கள் என்றே விளித்தார்.

ஜெ. மரணப்படுக்கையில் இருந்த நிமிடங்கள் தொடங்கியே பலர் சசிகலாவை சின்னம்மா என்றே அழைத்து வந்த நிலையில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலர் சசிகலாவை அப்படி அழைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் ஜெ.யின் அண்ணன் மகளான தீபாவின் பக்கம் அவர்களில் பலருடைய ஆதரவு திரும்பியது. இன்றைய பேட்டியில் ஒரு இடத்தில் கூட சின்னம்மா என்று அழைக்காமல் அவர்கள் என்றே குறிப்பிட்டது, சசிகலாவுக்கான ஆதரவு தொடர்பான ஓ.பி.எஸ்ஸின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.  

பின்னணியில் மோடியா?

கட்சியைக் காக்கத் தனிமனிதனாகக் கூடக் கடைசிவரை போராடுவேன் என்றிருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் இந்த நிலைப்பாட்டிற்காக தீபா பக்கம் சென்ற பலர் தற்போது இவர் பின்னணிக்கு வரலாம். இவர் போலவே இதுநாள் வரை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சிக்கித் தவித்தவர்களும் இவருடன் இணையலாம். ஆனால் தனிமனிதனாக நிற்பேன் என்று சொன்ன குரலின் பின்னணியில் ஏதேனும் ஒரு ஆதரவு இல்லாமல் நிச்சயம் அப்படியொரு நிலைப்பாட்டை அவர் எட்டியிருக்கமாட்டார். தம்பிதுரையை சந்திக்கத் தவிர்த்த மோடி ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்தது வேண்டுமானால் முதல்வர் என்று மரியாதைக்காக இருக்கலாம். ஆனால் ஜெ.யின் உடல் ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டிருந்த நிமிடங்களில் அவரது கால்களைத் தவிர பன்னீர் செல்வம் கரமெடுத்துக் கும்பிட்டது மோடியிடம் மட்டுமே. இதனை ஊர்ஜிதப்படுத்தவது போலவே அதிமுகவின் மதுரை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பன்னீருக்கு மத்தியில் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆளுநர் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அவரும் தமிழகம் வராமல் மும்பையைதான் தேர்ந்தெடுத்தார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து உண்டான சூழல் காலச் சுழற்சியென மீண்டும் உருவாகி இருக்கிறது. ஜெ. தனியொரு ஆட்சியாளராக உருவெடுத்தது அதன்பிறகுதான். இந்த முறை சுழற்சி யாரை அந்த தனி ஒருவராக்கும்?.

-ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!