ஏழரை மணிக்கே சசிகலாவை வீழ்த்திய ஓ.பன்னீர் செல்வம்!

பன்னீர் செல்வம் 

நேற்றைய இரவை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சசிகலா மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியது; அதற்கு பதிலடியாக சசிகலா அ.தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்-ஐ நீக்கியது; அதற்கு முதல்வரின் பதிலடி எனப் பரபரப்பின் உச்சத்தில் இருந்தது தமிழ்நாடு.

நேற்று இரவு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்லவிருக்கிறார் என்ற செய்தி பரவத்தொடங்கியதுமே. இணையத்தில் தமிழக அரசியல் சூழலில் ஏதோ நடக்கப்போகிறது என்ற விவாதம் பற்றிக்கொண்டது.  அதுவரை கூகுள் ட்ரெண்டில் பன்னீர் செல்வத்தைப் பற்றிய பதிவுகள், தேடல் குறைவாகவே இருந்தன. சசிகலாவின் பெயர்தான் டாப் ட்ரெண்டில் இருந்துவந்தது.


நேற்று இரவு 7:30 மணிக்கு ட்ரெண்ட் தலைகீழாக மாறத்துவங்கியது. சசிகலாவின் க்ராஃப் கீழிறங்கி, ஓ.பி.எஸ் ட்ரெண்டிங்கில் முன்னேறினார். செய்திகளுக்கான தேடலிலும் ஓ.பி.எஸ் ட்ரெண்டாக இந்தியா முழுவதும் தமிழக அரசியல்மீது கவனத்தைத் திருப்பியது. தொடர்ந்து சசிகலாவுக்கு எதிரான அதிருப்தி அலை திரும்ப, 9:30 மணிக்கு கூகுள் ட்ரெண்டில் சசிகலாவைவிட உச்சபட்ச ட்ரெண்டிங்கில் இருந்தார் பன்னீர் செல்வம். 

ஓ.பி.எஸ் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற வார்த்தை கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டது. ஓ.பி.எஸ்-ன் அதிரடி அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை ட்விட்டரில் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்றதற்கு ஆங்க்ரி எமோஜிக்கள் பறந்தன. நேற்றைய ஓ.பி.எஸின் அறிவிப்புக்கு ஹார்ட் எமோஜிக்கள் பறந்தன. மக்கள் ஆதரவு இருப்பவர்தான் முதல்வராக வேண்டும் என்ற ஓ.பி.எஸின் கருத்துக்கு மக்களின் ரீயாக்ஷன் இது. 

அதுமட்டுமன்றி பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் ஜெயலலிதாவுக்குத் தெரிந்தது சசிகலாவுக்குத் தெரியவில்லை என்று ஓ.பி.எஸ்-ஐ பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ வைரலாகப் பரவியது. தமிழகம் மட்டுமன்றி தேசிய‌ ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தார் ஓ.பி.எஸ். #OPSForCM #OPSvsSasikala போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டில் இடம்பிடித்தன.

பன்னீர் செல்வத்துக்கு ஆன்லைனில் சசிகலாவைவிட அதிக ஆதரவு இருப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இன்றைய நிகழ்வுகள் இணையத்தில் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!