வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (08/02/2017)

கடைசி தொடர்பு:16:10 (08/02/2017)

மோடியின் பாராமுகம் முதல் முதல்வருக்கான சதுரங்கம் வரை...!  -பன்னீர்செல்வத்தின் தைரியமும் சசிகலாவின் கொந்தளிப்பும்  #VikatanExclusive  #OPSVsSasikala 

ஓ.பன்னீர்செல்வம்

ரசியல் மேகங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பேட்டியும் சசிகலாவின் குற்றச்சாட்டுகளும் தேசிய அளவில் அனைத்து செய்திகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 'ஆளுநர் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம்' என தம்பிதுரை நம்பிக்கை தெரிவிக்க, 'இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுநர் தமிழகம் பக்கமே வர மாட்டார்' என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். 

கலங்க வைத்த கடைசி ஃபிளைட்! 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே, ' அடுத்த முதல்வர் யார்?' என்ற விவாதங்கள் நிர்வாகிகள் மத்தியில் வலம் வந்தது. ' ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்துங்கள். தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள்' என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் சமரசத்தை ஏற்றுக்கொண்டார் சசிகலா. ஆனால், கடந்த 60 நாட்களாக ஆட்சி அதிகாரத்தில் பன்னீர்செல்வம் பலம் பெற்று வருவதை சசிகலாவால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டெல்லியில் பன்னீர்செல்வத்துக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைப்பதும் மக்களவை துணை சபாநாயகர் புறக்கணிக்கப்பதையும் கொங்கு மண்டல அமைச்சர்கள் ரசிக்கவில்லை. ' உங்களைத் தாண்டி அவர் சென்றுவிட்டார். சட்டசபையில் எதிர்க்கட்சிகளோடு நட்புறவில் இருக்கிறார். உடனே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்' என வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்ப, சட்டசபைக் கூட்டத் தொடரில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ துரைமுருகன், ' ஐந்து ஆண்டுகளும் நீங்களே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்கள் பின்னால் உள்ள சக்தியை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்' எனப் பகிரங்கமாகப் பேசியதை அதிர்ச்சியோடு கவனித்தனர் அ.தி.மு.க அமைச்சர்கள்.

அதன் எதிரொலியாகவே, கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார் சசிகலா. கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார் பன்னீர்செல்வம். அங்கு சசிகலாவை சந்திப்பதற்கு முன்பு, செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஓ.பி.எஸ்ஸிடம் பேசியுள்ளனர். அங்கிருந்து அனைவரும் தலைமைக் கழகத்துக்கு வந்துள்ளனர். அ.தி.மு.கவில் நடக்கும் மாற்றத்தை அறிந்த ஸ்டாலின், 'ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை' எனச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைத் தலைவராக அறிவிக்கப்பட்டார் சசிகலா. இந்தத் தகவல் ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட, ஊட்டி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி கிளம்பிவிட்டார். 'ஆளுநர் சென்னை வருவார்' என நம்பியிருந்தனர் அ.தி.மு.க அமைச்சர்கள். '7-ம் தேதி காலையில் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்' என நம்பியிருந்த சூழலில், '6-ம் தேதி இரவு டெல்லியில் இருந்து சென்னை வரும் கடைசி பிளைட்டிலும் ஆளுநர் வரவில்லை' என்ற தகவலால் நொந்துபோனார் சசிகலா. 

கோட்டைக்குள் இன்னொரு பன்னீர்செல்வம்! 

" எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கும்போதே, சமாதிக்குச் செல்வதாகக் கூறினார் ஓ.பி.எஸ். ' கூட்டம் முடிந்ததும் உங்கள் தாய்க்கு அஞ்சலி செலுத்துங்கள்' என அமர வைத்துவிட்டார் சசிகலா. அன்றைக்கே அவர் ராஜினாமாக் கடிதம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் திட்டத்தில் இருந்தார். இந்த இரண்டு நாட்களாக நடக்கும் காட்சிகளைக் கவனித்து வந்தார். நேற்று காலையில் இருந்தே தன் ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசித்து வந்தார். ' கோட்டையில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட் ரமணன், சாந்த ஷீலா நாயர் ஆகியோரை ராஜினாமா செய்ய வைத்ததில், நடராசனுக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தின் பங்கு இருக்கிறது. அவர்தான் அதிகாரிகளை பயமுறுத்தி வருகிறார். அம்மா நியமித்த அதிகாரிகள் யாரும் இருக்கக் கூடாது என்ற முடிவில் செயல்படுகிறார்கள்' என ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்,

சசிகலா

தொடர்ந்து, ' ஆட்சி அதிகாரத்துக்குள் நடப்பவற்றை சின்னம்மா கவனத்திற்குத் தெரியப்படுத்திக்கொண்டுதான் வந்திருக்கிறேன். தொண்டர்கள் மத்தியில் அவர்கள்மீது அதிருப்தி இருக்கிறது. நடக்கும் சூழல்கள் நமக்கு சாதகமாக இல்லை. சி.எம் நாற்காலியை நோக்கி நீங்கள் நகர்ந்தால், இருக்கும் மொத்த அதிகாரமும் பறிபோய்விடும்' எனத் தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு நான் பதவியில் நீடிப்பதில் உடன்பாடு இல்லை. எனக்குப் பதவி பெரிதல்ல. அம்மாவின் புகழைக் காப்பாற்றினால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன். என்னை அவமானப்படுத்துகிறார்கள்' எனக் கலங்கியிருக்கிறார். கடந்த ஞாயிறு முதல் நடக்கும் சூழல்களை கவனித்த பா.ஜ.க மேலிடம், ஆரம்பத்தில், பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவால் கொந்தளித்தது. ' நாம் அவ்வளவு தூரம் தெரிவித்தும் ராஜினாமா செய்துவிட்டார். இன்னொரு வாய்ப்பை வழங்கக் கூடாது' எனக் கடுகடுத்துள்ளனர். இதை அறிந்த ஓ.பி.எஸ் தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி, விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

பிரஸ் மீட் பின்னணி!

" மக்கள் மத்தியில், நீங்களும் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்ற தோற்றம் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால், உளவியல்ரீதியாக மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கொண்டு வர வேண்டும் என அவரிடம் விளக்கியிருக்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர். அடுத்துச் செய்ய வேண்டிய உடனடி காரியங்கள் குறித்தும் தெரியப்படுத்தியுள்ளனர். அதன்பிறகே, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று 40 நிமிடம் தியானத்தில் இருந்தவர், ' அம்மாவின் ஆன்மா என்னை உந்தித் தள்ளியது' என அ.தி.மு.க தொண்டர்களின் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு விவரித்தார். மருத்துவமனையில் நடந்த விவகாரங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கூறியவர், ' ராஜினாமாக் கடிதம் கொடுக்குமாறு மிரட்டப்பட்டேன்' எனக் கூறியதில் இருந்தே, அவருடைய ராஜினாமா முடிவு அடிபட்டுப் போய்விட்டது. கார்டன் அரசியலின் மர்மங்களும் விளக்கப்பட்டன. ஓ.பி.எஸ் பேட்டிக்குப் பிறகு, போயஸ் கார்டனில் சசிகலாவை சந்திக்கச் சென்றனர் அமைச்சர்கள். கூடவே, எம்.எல்.ஏக்கள் பலரும் கார்டனை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இந்தப் பேட்டியால் ஏகக் கொந்தளிப்பில் இருந்தார் சசிகலா. அவர் பேட்டி கொடுத்ததைவிடவும் மைத்ரேயனும் சோழவந்தான் எம்.எல்.ஏ ஒருவரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே, கட்சிப் பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்க உத்தரவிட்டவர், அவருடைய உறுப்பினர் பதவியை நீக்க உத்தரவிடவில்லை. இன்னும் அ.தி.மு.க எம்.எல்.ஏவாகத்தான் நீடிக்கிறார் பன்னீர்செல்வம். 'பின்னணியில் தி.மு.கவின் தூண்டுதல் இருக்கிறது' எனக் கூறிய சசிகலா, பா.ஜ.க குறித்து எந்த வார்த்தையும் பேசவில்லை" என்றார் விரிவாக. 

அமிர்தானந்தமயிடம் தூது! 

" கட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஆட்சி அதிகாரம் கை நழுவிப் போகும் ஆதங்கத்தில் இருந்தார் சசிகலா. பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி மூலமாகவே பிரதமரை சந்திக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளனர் கார்டன் தூதுவர்கள். அவர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் தரப்பினர், ' தமிழ்நாட்டில் உங்களுக்கு ஆதரவான நிலையை எடுத்தால், மற்ற மாநிலங்களிலும் எங்களுக்குப் பின்னடைவு ஏற்படும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீங்கள்தான் காரணம் என உங்கள் கட்சித் தொண்டர்கள் நம்புகிறார்கள். உங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தால், தமிழ்நாட்டில் ஓட்டுக் கேட்டு எங்களால் வர முடியாது' எனக் கறாராகக் கூறிவிட்டனர். இதன்பிறகு வேறு சோர்ஸுளைத் தேடத் தொடங்கினர் கார்டன் வட்டாரத்தினர். கூடவே, சசிகலா புஷ்பாவின் மனு மீது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கார்டனை கலங்க வைத்தது. ' பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புங்கள்' என அதிர வைத்தது.

இதன்பின்னர், மாதா அமிர்தானந்தமயியை சந்திக்கும் முடிவு பற்றி சசிகலாவிடம் சொல்லப்பட்டது. ' அவர் மூலம் பிரதமரின் கவனத்திற்கு சில தகவல்களைக் கொண்டு செல்லலாம்' என மன்னார்குடி உறவுகள் கூறியுள்ளனர். இதையடுத்து, கடந்த ஞாயிறு இரவு 12.25 மணி முதல் 12.55 மணி வரையில் விருகம்பாக்கத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் அமிர்தானந்தமயிடம் பேசுவதற்காக சென்றார் சசிகலா. சிறிய போலோ காரில் சென்ற சசிகலாவுடன் விவேக் ஜெயராமன் மட்டும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு பெரிதாக திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர் அவருடைய உறவினர்கள்" என விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " இப்போதுள்ள சூழலில் அனைத்தும் தங்களுக்கு எதிராகத் திரும்புவதாக எண்ணுகிறார் சசிகலா. 'இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது பேசிவிட்டால், நிலைமை சிக்கலாகிவிடும்' என்பதை உணர்ந்துதான், தி.மு.கவின் மீது பழியைத் தூக்கிப் போட்டார். 

நறநறத்த நடராசன்! 

நடராசன்நேற்று காலை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதை, அப்போலோவில் எல் வார்டில் தங்கியிருக்கும் நடராசன் தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் கொந்தளிப்பில் பலமாகவே கத்திவிட்டார். ' ரயில் நிலையத்தில் வைத்தே பாண்டியனை மடக்கிப் பிடிக்கத் துப்பில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?' எனக் கொதித்துப் போய் பேசியிருக்கிறார். இத்தனைக்கும் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தக் கட்டு ஏற்பட்டுவிட்டதற்கான சிகிச்சையில் இருக்கிறார் நடராசன். நேற்று அவர் கொந்தளித்ததை அதிர்ச்சியோடு கவனித்துள்ளனர் அப்போலோ செவிலியர்கள். அடுத்த சில நிமிடங்களில், பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் மூலமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உத்தரவிட்டார்.

அடுத்ததாக, தீபா பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்த, எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் சுதா மூலம் சசிகலா ஆதரவை வெளிப்படுத்த வைத்தார். அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அரசியலை நகர்த்துகிறார் நடராசன். அடிக்கடி, 'ஆளுநர் எப்போது சென்னை வருவார்' என அனைத்து தரப்பினரும் ராஜ்பவனைத் தொடர்பு கொண்டனர். ' இன்று சென்னை வருவார் என்ற நம்பிக்கை உள்ளது' என தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், அவருடைய நம்பிக்கை நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. தமிழக அரசியல் சூழல்களை ஆளுநர் அலுவலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 13-ம் தேதிக்குப் பிறகே அவர் சென்னை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும் வந்துவிடும்" என்றார் விரிவாக. 

 ஆளுநர் யார் பக்கம்? 

" முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் நல்ல உறவில் இருக்கிறார் ஆளுநர். டெல்லி சென்று மோடியைச் சந்திப்பதற்கு முன்பாக, ஆளுநரைச் சந்தித்துவிட்டுத்தான் சென்றார் ஓ.பி.எஸ். அப்போதே, ' உங்களுக்கு ஆதரவாகத்தான் எந்த முடிவையும் எடுப்பேன். உங்களுடைய ராஜினாமாக் கடிதத்தை அவர்கள் கொண்டு வந்து கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நீங்கள் சென்றால், அவகாசம் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறேன்' என நம்பிக்கை கொடுத்தார். இப்போது சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் முடிவில் இருக்கிறார் பன்னீர்செல்வம். ஒரு மாத கால அவகாசம் கேட்கும் முடிவில் இருக்கிறார். அவருக்கு தி.மு.க தரப்பில் இருந்து ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கூடவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர்செல்வம் தோற்றுவிட்டால், சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போதுள்ள நெருக்கடியில் பதவியை இழந்துவிட்டு, சசிகலாவை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும் துணிச்சல் அமைச்சர்களுக்கு இல்லை.

வித்யாசாகர் ராவ்

கடந்த ஒரு மாதமாகவே, ' பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்களா?' என எம்.எல்.ஏக்கள் பலரிடமும், ஓ.பி.எஸ் தரப்பு இஸ்லாமிய நண்பர்கள் சிலர் பேசியுள்ளனர். இதற்கு சில அமைச்சர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதைப் பற்றிக கார்டன் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். சசிகலா அவசரத்துக்கு இதுவும் ஒரு காரணம். ' தி.மு.க பிளஸ் அ.தி.மு.கவின் கணிசமான எம்.எல்.ஏக்கள் துணையோடு பன்னீர் பலம் பெற்றுவிடக் கூடாது' என்பதற்காகத்தான் பதவியேற்பில் அவசரம் காட்டினார். தற்போது நிலைமை கைமீறிப் போய்விட்டது. ' 134 எம்.எல்.ஏக்கள் என் பக்கம் உள்ளனர். முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள்' என்ற சசிகலாவின் கோரிக்கையை ஆளுநர் ஏற்பாரா என்பதும் மிக முக்கியமான கேள்விகள். ஆனால், சபையில் பலத்தை நிரூபித்துக் காட்டுங்கள் என பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பளிக்கும் முடிவை ஆளுநர் எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

அடுத்த முதல்வர் யார்? 

" நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினார் சசிகலா. இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. ' சொத்துக் குவிப்பு வழக்கைக் காரணம் காட்டினால், அடுத்தபடியாக யாரை முதல்வராக்குவது? என்ற கேள்வி எழுந்தபோது, தம்பிதுரையை முன்னிலைப்படுத்தி பேச்சுக்கள் எழுந்தன. கூடவே, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்கள் பெயரும் விவாதத்தில் சொல்லப்பட்டது. தனக்கு எதிர்ப்பு வலுக்கும் சூழலில், கட்சியின் சீனியர் ஒருவரை முன்னிறுத்துவது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியைக் குறைக்கும் என நம்புகிறார் சசிகலா. கூடவே, 'ஆறு மாதத்துக்குப் பிறகு நிலைமை சுமூகத்திற்கு வந்த பிறகு, சி.எம் ஆகலாம்' என்ற முடிவில் இருக்கிறார். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஆளுநர் ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்ந்தபோதே இவ்வளவு இடர்ப்பாடுகளா என அதிர்ச்சியில் இருக்கிறார் சசிகலா. 'இந்த சூழலை எதிர்த்து அரசியல் செய்தால் மட்டுமே, கட்சியும் ஆட்சியும் நிலைக்கும்' என அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.எல்.ஏக்கள் எந்தப் பக்கமும் சென்றுவிடாதபடி தடுப்பு அரணை அமைக்கும் வேலைகள் வேகமெடுத்துள்ளன" என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

33 ஆண்டுகள் கார்டன் நிழலில் இளைப்பாறிய சசிகலாவுக்கு அரசியல் எத்தகையது என்பதைக் காட்டிவிட்டார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். அரசியல் சதுரங்கத்தில் சசிகலாவுக்கு செக் வைக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. ட்விட்டர் டிரெண்டிங்கில் மட்டுமல்ல, தொண்டர்கள் மனதிலும் முதலிடம் பிடித்துவிட்டார் ஓ.பி.எஸ். அடுத்தபடியாக, ' ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைப்பேன்' என அதிரடியைத் தொடங்கியிருக்கிறார். நடக்கும் காட்சிகளை கலவரத்தோடு கவனித்து வருகிறது கார்டன். 

-ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்