வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (08/02/2017)

கடைசி தொடர்பு:11:46 (09/02/2017)

ஜெ. சிகிச்சை, மரணம்..! பன்னீர்செல்வம் நீங்கள் சொல்லியே ஆகணும்- ராமதாஸ்

ராமதாஸ்

ஜெயலலிதா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஹெச்.பாண்டியன், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், இன்று மீண்டும் முன்வைத்திருக்கிறார் என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மரணம் பற்றி பன்னீர்செல்வம் விளக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திடீர் அரசியல் மாற்றமாக அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலகக்கொடி உயர்த்தியுள்ளார். இதை அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னை என்று கூறி ஒதுக்கிவிட முடியாது. சட்டப்பேரவை உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டிருப்பதால் தமிழக நலன் சார்ந்த சிக்கலாகவே இதைப் பார்க்க வேண்டும். தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது நினைவிடத்தின் ஈரம் கூட காயாத நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை தகுதியே இல்லாத சசிகலா நயவஞ்சகமான முறையில் கைப்பற்றிக் கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் விடுபடும் முன்பே, தமிழகத்தின் முதலமைச்சராகவும் முடிசூடிக் கொள்ள திட்டமிட்ட சசிகலா, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தார். தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்பதை ஏழரைக் கோடி தமிழக மக்களும் ஏற்கவில்லை. சசிகலா தமிழக முதலமைச்சராவது தமிழகத்துக்குப் பேராபத்தாக முடியும் என்று கடந்த 5-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை வெளியிட்டிருந்தேன். தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களின் மனநிலையும் அத்தகையதாகவே இருந்தது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்களும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக்கப்பட்ட மூன்றாவது நாளில் இருந்து சசிகலா மற்றும் அவரது துதிபாடிகளால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு  வந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்தார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை யாரும் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், தமக்கும், மற்ற மூத்த அமைச்சர்களுக்கும் அவரது சகோதரர் திவாகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் மூலம் அழுத்தம் கொடுத்துதான் அப்பதவியை  சசிகலா கைப்பற்றினார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக முதல்வர் பதவியில் இருந்து தாம் விருப்பப்பட்டு விலகவில்லை என்றும், கட்டாயப்படுத்தியதால்தான், வேறு வழியின்றி அந்தப் பதவியிலிருந்து தாம் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, அ.தி.மு.க.வை சசிகலா குடும்பம் எப்படியெல்லாம் கபளீகரம் செய்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அ.தி.மு.க.வுக்காக சசிகலா எந்த வகையிலும் தியாகம் செய்து விடவில்லை. ஜெயலலிதா வீட்டில் பணிகளைக் கவனித்து வந்தவர் என்பதைத் தவிர அ.தி.மு.க.வுடன் சசிகலாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை சசிகலாவுக்கு செயற்குழு உறுப்பினர் என்பதைத் தவிர வேறு எந்த அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை. அதுமட்டுமன்றி, தமக்கும், கட்சிக்கும் துரோகம் செய்ததாகவும், சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறி, கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஜெயலலிதா நீக்கினார். 
 
5 மாத இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து சசிகலா அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அந்தக் கடிதத்தில்,‘‘ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் நான் இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, எனது உறவினர்கள் சில தவறான செயல்களில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி, அக்காவுக்கு எதிராக சதித் திட்டங்களும் தீட்டினர். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் துரோகம் செய்தவர்கள்தான். அவர்களுடன் எனக்கு ஒட்டுமில்லை. உறவுமில்லை. அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ எனக்கு துளியும் ஆசையில்லை’’ என சசிகலா கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் வகையில் கட்சி மற்றும் ஆட்சியின் உயர் பதவிகளை வளைக்க சசிகலா துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த துரோகத்தை அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் தான் தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வத்தை முழுமையாக ஆதரிக்கின்றனர்.

அதேநேரத்தில் பன்னீர்செல்வம் ஒரு விஷயத்தில் அவரது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மரணம் பற்றி ஏராளமான ஐயங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் மனநிறைவளிக்கவில்லை. அதுமட்டுமன்றி, ஜெயலலிதா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஹெச். பாண்டியன் கூறியிருக்கிறார். இப்புகாரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், பாண்டியன் இன்று மீண்டும் முன்வைத்திருக்கிறார். இதுகுறித்த தனது நிலைப்பாட்டை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும். தமிழகத்தின் முதலமைச்சராக நீடிக்கும் நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தும்படி ஆணையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மர்ம மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து நீதி விசாரணையும், வழக்குப் பதிவு செய்து குற்ற விசாரணையும் நடத்த ஆணையிட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க