' எம்.எல்.ஏக்கள் எங்கும் நகர வேண்டாம்!' -ஆளுநர் புறக்கணிப்பும் சசிகலா கொதிப்பும்

சசிகலா

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் சசிகலா. ' அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட மறுக்கிறார் ஆளுநர். எம்.எல்.ஏக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா முதல்வர் ஆவது உறுதி' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களும் ஓ.பி.எஸ் பக்கம் திரண்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார் சசிகலா. ' துரோகிகள் பின்னால் யாரும் சென்றுவிட வேண்டாம்' என எச்சரித்தார் சசிகலா. அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் எம்.எல்.ஏக்களை ஒப்படைத்திருக்கிறார் சசிகலா. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு உள்ளிட்டவர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தனியரசுதனியரசு எம்.எல்.ஏவிடம் பேசினோம். " நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். 131 எம்.எல்.ஏக்களும் சின்னம்மாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். 'எம்.எல்.ஏக்கள் வெளியில் சென்றுவிட வேண்டாம்' எனக் கூறியுள்ளனர். வெளியில் டீ குடிக்கப் போனாலும், காணாமல் போய்விட்டதாக வதந்தி பரப்பிவிடுவார்கள் என்பதால்தான் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். அனைவரும் தலைமைக் கழகத்தில் இருக்கிறோம். ஆளுநர் சென்னை வருவார் என்று எதிர்பார்த்தோம். அதற்கான சூழல்கள் இல்லாவிட்டால், நாளை காலை எம்பிக்கள் சந்திக்க இருக்கிறார்கள். இரண்டொருவர்தான் எதிரணிப் பக்கம் சென்றுள்ளனர். தொண்டர்கள் மத்தியிலும் எந்தவிதக் குழப்பமும் இல்லை" என்றார் நிதானமாக. 

" தமிழகத்தில் நடக்கும் சூழல்களை உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது. இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மும்பையில் இருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்தபோதும், இதே அலட்சியத்துடன்தான் செயல்பட்டார். கடந்த 5-ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அரசியமைப்புச் சட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் என்ன தவறு நேர்ந்துவிடப் போகிறது? வழக்கு நிலுவையில் இருப்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பன்னீர்செல்வத்தை முன்னிறுத்திக் கட்சியை, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் முடிவில் மத்திய அரசு உள்ளது. அதையொட்டித்தான் ஆளுநரின் செயல்பாட்டைப் பார்க்கிறோம். இதனால், கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ' தமிழகத்தில் நடப்பவை குறித்து, குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்' எனக் கூறிவிட்டார்.

மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாளை குடியரசுத் தலைவர் முன்பு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்தப்பட இருக்கிறது. தலைமைக்கு எதிராக நடக்கும் சூழல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறோம். அ.தி.மு.கவில் நடக்கும் குழப்ப சூழல்களைப் பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. 2021-ம் ஆண்டு வரையில் அ.தி.மு.கதான் ஆட்சியில் இருக்கப் போகிறது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி முதல்வராகவும் பதவியில் அமர்வார் சசிகலா. அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவித்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் நிர்வாகிகள் மத்தியில் உள்ளது" என்கிறார் கார்டன் நிர்வாகி ஒருவர். 

' எம்.எல்.ஏக்கள் என் பக்கம் வருவார்கள்' என்கிறார் ஓ.பன்னீர்செல்வம். குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கக் கிளம்புகிறார் சசிகலா. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கொடுப்பதைப் பற்றி ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ' குடியரசுத் தலைவர் என்ன செய்யப் போகிறார்?' என ஆவலோடு கவனித்து வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். 

-ஆ.விஜயானந்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!