வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:16 (09/02/2017)

சென்னை நட்சத்திர ஹோட்டலில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்! ஊட்டி செல்லத்திட்டம்?

சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தற்பாேது தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊட்டி, பெங்களூரு, புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் அளித்த பேட்டியில், "சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத்தயார். எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கினார்.

இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று கூட்டினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "நம்மை பிரித்தாளும் சக்தி யாருக்கும் இல்லை. அ.தி.மு.க என்னும் மாபெரும் சக்தியை யாராலும் தடுக்க முடியாது. அ.தி.மு.க. ஒரே குடும்பமாக ஒற்றுமையாக செயல்படுகிறது. யார் பின்பும் செல்லாமல், அனைத்து உறுப்பினர்களும் இறுதிவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

இதனிடையே, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மூன்று பேருந்துகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 131 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமானநிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

''சென்னையில் இருக்கக்கூடாது. ஆளுநர் தமிழகம் வரும் வரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்'' என்று எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாம். இதனால் அங்கிருந்து புதுச்சேரி, ஊட்டி, பெங்களூரு அழைத்துச் செல்லத்திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பேருந்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

படங்கள்: ப.சரவணக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க