வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:39 (09/02/2017)

'நான் ராமர் எனில் பன்னீர்செல்வம் பரதன்!' - ஜெயலலிதா சொன்ன கதை #OPSvsSasikala

கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த காலத்திலும் சரி, மாநிலத்தின் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, பணிவின் இலக்கணமாகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அந்தப் பணிவு தான், பலரைப் பின்தள்ளி கட்சியின் முன்னணித் தலைவராக அவரை முன்னிறுத்தியது. முதலமைச்சர் பொறுப்பை வழங்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையை உருவாக்கியதும் அந்தப் பணிவு தான். 

ஜெயலலிதாவிடம் பணிவாக பன்னீர்செல்வம்

இதோ இந்த வீடியோவில் ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டால், பன்னீர்செல்வம் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையைப் புரிந்து கொள்ள முடியும்..! 

 

 

"கடந்த காலத்தை நமது கழக உடன்பிறப்புகள் உற்று நோக்கினால் அவர்களுக்கு பல படிப்பினைகள் கிடைக்கும். இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு எல்லாவற்றிலும் அவசரம். உடனே ஒரு துறையில் ஈடுபட வேண்டும். உடனே கட்சியில் இணைய வேண்டும். உடனே பெரும் பொறுப்புக்கு வரவேண்டும். உடனே பெயரும் புகழும் செல்வமும் அடைந்துவிட வேண்டும். உடனே எம்.எல்.ஏ ஆகவேண்டும்  உடனே மந்திரி ஆக வேண்டும். என்னென்னவோ ஆசைகள்... 

கட்சியில் சேர்வதும், அதில் வளர்வதும் ஒரு பெரிய பொறுப்புக்கு வருவதும் ப்ரூ இன்ஸ்டன்ட் காபியை கலப்பது போன்றது அல்ல. ஓ.பி.எஸ் எப்படி வளர்ந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஓ.பி.எஸ் 1977ல் கழக உறுப்பினராக இணைந்தார். 1980ல் பெரியகுளம் நகர 18-வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதியாக இருந்தார். எண்ணிப் பாருங்கள். இன்றைக்கு என்ன நிலைமையில் இருக்கிறார். (பன்னீர்செல்வத்தை நோக்கி கைகாட்டுகிறார், அங்கே கைகளைக் கட்டி பவ்யமாக இருக்கிறார் ஓ.பி.எஸ் ) ஆனால், ஆரம்பத்தில் 1980ல் பெரியகுளம் நகர 18-வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதியாக இருந்துள்ளார். (இரண்டாவது முறையாக அழுத்திச் சொல்கிறார்)  பின்னர் 1984ல் பெரியகுளம் நகர 18-வது வார்டு கழகச் செயலாளர். 1984ல் பெரியகுளம் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர். 1993ல் பெரியகுளம் நகரக் கழகச் செயலாளர். 1996 ல் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர். 1997ல் தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர். 1998ல் பெரியகுளம் நகர கழகச் செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ல் தேனி மாவட்ட கழகச் செயலாளர். 2001ல் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அதன்பின் அவர் முதல் அமைச்சராகவும் இருந்தார்.

பின்னர் வருவாய்த்துறை அமைச்சர், பின்னர் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 2004ல் கழகத் தேர்தல் பிரிவுச் செயலாளர். 2006ல் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்பு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆனார். 2007ல் கழகப் பொருளாளர். 1996, 1999 மற்றும் 2000 ஆண்டுகளில் கழகத்திற்காக சிறை சென்றுள்ளார். 

கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, நீண்ட காலமாக கழகத்தில் இருந்திருக்கிறார்கள். மிகச் சிறிய பொறுப்புகளில், சாதாரண பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். பின்னர் அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு, இயக்கத்தின்பால் அவர்களுக்கு உள்ள விசுவாசம், தலைமையிடம் கொண்ட பற்று,  இவற்றின் காரணமாக அவர்கள் படிப்படியாக உயர்ந்துள்ளார்கள்; அமைச்சர்களாக உயர்ந்தார்கள். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஒரு காலகட்டத்தில் பன்னீர்செல்வம் அவர்கள் முதல் அமைச்சராகக் கூட ஆனார்கள்.

இன்னும் சொல்லப் போனால், நம் வரலாற்றில் இந்த ஒரே ஒரு விஷயத்தில்தான்... இந்த ஒரே ஒரு கேஸ் ஹிஸ்ட்ரிதான் உள்ளது. ஒருவருக்கு முதல் அமைச்சர் பதவியை வழங்கிவிட்டு, பின்னர் உரியவருக்கே அந்த முதல் அமைச்சர் பதவியைத் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை. இது ஒன்றுதான் அப்படி நடந்திருக்கிறது. இதற்கு இணையாக இன்னொரு சம்பவத்தை நானும் தேடித்தேடி பார்த்தேன். ராமாயணத்தில் தான் சொல்ல முடியும்.

ராமர் வனவாசம் சென்றபோது அந்த அரியாசனத்தில் அவரால் அமர முடியவில்லை. அப்போது ராஜ்யம் பரதனிடம் கொடுக்கப்பட்டது. அந்த பரதன், ராமர் அமர வேண்டிய அரியாசனத்தில் அமர மறுத்து, பின்னர் வனவாசம் முடிந்து ராமர் அயோத்திக்கு திரும்பி வந்ததும், பத்திரமாக அந்த ராஜ்யத்தையும், அரியாசனத்தையும் பரதன், ராமருக்கே ஒப்படைத்தார். இதைப் புராணத்தில்தான் படிக்க முடிகிறது. ஆனால், வரலாற்றில், அரசியல் வரலாற்றில், எந்த நாட்டின் வரலாற்றிலும், ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைத்து விட்டு, அதன்பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை. அந்தப் புதிய வரலாற்றைப் படைத்தவர் அன்புச் சகோதரர் பன்னீர் செல்வம். 

இயக்கத்தில் உண்மையாக உழைத்தால், இயக்கத்தின் மீதும் தலைமை மீதும் பற்றுகொண்டு விசுவாசமாக இருந்தால், வளர்ச்சி என்பது யாராலும் தடுக்க முடியாது, தவிர்க்க முடியாது என்று தெரிகிறது. உங்கள் எல்லோருக்கும் என் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முடிக்கிறார் ஜெயலலிதா.  

வீடியோவின் 2.04-வது நிமிடத்தில் பன்னீர்செல்வம் பற்றி ஜெயலலிதா பேசும்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் சசிகலா அதை உன்னிப்பாக கவனிப்பதைப் பார்க்க முடிகிறது. 2.56, 3.16, 3.54 -வது நிமிடங்களில் தன் தலைவி தன்னைப் பற்றிப்பேசும் போது, சங்கோஜத்தோடும் பணிவோடும் அந்த வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைக்கிறார் பன்னீர்செல்வம்.  

- தா. ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்