ஓடும் பஸ்ஸிலிருந்து ஏன் குதித்தேன்? சசிகலா எதிர்ப்பைச் சொல்லும் சண்முகநாதன் எம்.எல்.ஏ. #OPSVsSasikala

சிறை வைக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பஸ்ஸில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது சசிகலா தரப்பினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் சண்முகநாதனின் ஆதரவு கதை வித்தியாசமானது. சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தவுடன் சொகுசுப் பேருந்தில் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், அங்கிருந்து வெளியேறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர் எப்படி வெளியேறினார் என்பது குறித்து அவரிடம் பேசினோம். 

 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு வந்ததும் அதில் பங்கேற்றேன். கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று பேசினார்கள். 

நீங்கள் எப்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தீர்கள்?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அம்மா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் சசிகலாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. கார்டனிலிருந்து விரட்டப்பட்ட அவர், முதல்வராவேன் என்று ஆணவத்தோடு பேசுவதை விரும்பவில்லை. இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தேன். 

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் நீங்கள் மட்டும் எப்படித் தப்பினீர்கள்?

கூட்டம் முடிந்ததும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலிருந்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு பஸ் வந்தது. அப்போது அங்கிருந்து வெளியேறினேன். இதன் பிறகு சொகுசு பஸ் எங்கு சென்றது என எனக்குத் தெரியாது. 

உங்களை யாரும் தடுக்கவில்லையா?

என்னை யாரும் தடுக்க முடியாது. நான் வித்தியாசமானவன். 

உங்கள் மனநிலையில்தான் மற்ற எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்களா?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மனநிலை தெரியவில்லை. சுதந்திரமாக எம்.எல்.ஏ.க்களை செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் என்னுடைய மனநிலைக்கு அவர்களும் வந்துவிடுவார்கள். எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியில் விட வேண்டும். 

 நீங்கள் எதற்கு சசிகலாவை எதிர்க்கிறீர்கள்?

'முதல்வர் பதவியை அடைந்தே தீருவேன்' என்று வெறியில் சசிகலா உள்ளார். அதனால்தான் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தேன்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

அந்த விவரம் தெரியவில்லை. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. நானும் கையெழுத்திட்டுள்ளேன். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மாவின் உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகள் ஆதரிப்பார்கள். 

 - எஸ்.மகேஷ் 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!