ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது ஏன்? ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் காரணம் இது தான் ! #OPSVsSasikala | 'Reason behind extends support to O Panneerselvam' O.P.S. Support MLA's explains

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (09/02/2017)

கடைசி தொடர்பு:14:21 (09/02/2017)

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது ஏன்? ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் காரணம் இது தான் ! #OPSVsSasikala

ஓ.பி.எஸ். vs சசிகலா

முதல்வர் யார் என்பதில் சசிகலாவுக்கு, ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே ஏற்பட்ட அதிகார மோதலில், அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, கட்சி இரண்டாக உடைந்திருக்கிறது. 'எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பார்கள். பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்' என ஓ.பன்னீர்செல்வமும், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை என்னை ஆதரிக்கிறார்கள். முதல்வராக பொறுப்பேற்பது உறுதி' என சசிகலாவும் சொல்லி வருகிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலா தரப்பால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன், ஶ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தவிர கட்சி நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், நேரம் வரும்போது ஆதரவை தெரிவிப்பார்கள் என்றும் சொல்கின்றனர்.

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

மொத்தமுள்ள 135 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதுவரை 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்னும் 15 பேர் ஆதரவு தெரிவித்தால் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் உருவாகலாம் என்பதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களிடம், அவரை ஆதரிக்க என்ன காரணம் என்பது தொடர்பாக பேசினோம். அவர்கள் சொன்னவை இங்கே.

சோழவந்தான் - மாணிக்கம்

" நான் முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களை ஆதரிக்க பல காரணங்களைச் சொல்லலாம். மனசாட்சியுள்ள அ,தி.மு.க.காரன் அவரைத்தான் ஆதரிக்க முடியும். அ.தி.மு.கவுக்கு சோதனையான காலகட்டத்திலெல்லாம் அம்மாவால் முதல்வர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர். எப்போதும் எந்த பதவிக்கு ஆசைப்படாமல் கொடுத்த பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். முதல்வர் பதவியை திரும்பவும் அம்மாவிடம் ஒப்படைத்தவர். அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் அதை வைத்து துஷ்பிரயோகம் செய்யாதவர். கீழ்மட்ட  தொண்டர்களையும் மதிப்பவர். அதனால்தான் அம்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்பு கட்சியினர் அனைவரும் முழு மனதோடு அவரைத்தான் முதல்வராக தேர்வு செய்தார்கள்.

அவர் பொறுப்புக்கு வந்த பின் தமிழகத்தின் மூன்று முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைத்தார். வர்தா புயல் நிவாரணப்பணிகளை சிறப்பாக செய்தது, குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆந்திரா முதல்வரை சந்தித்து சாதித்தது. மாணவர் போராட்டத்தால் பற்றி எரிந்த ஜல்லிக்கட்டு பிரச்னையை ஒருவாரத்தில் சட்டம் இயற்றி முடித்து வைத்தது, அதுமட்டுமில்லை, தமிழக சட்டமன்ற வரலாற்றில் கவர்னர் உரையின்போதே ஜல்லிக்கட்டு மசோதாவை தாக்கல் செய்தது போன்ற நல்ல விஷயங்களைச் செய்தார்.

மக்கள் பிரச்னைகளை உடனே தீர்த்து வைத்தார். எல்லோர் ஆலோசனைகளையும் காது கொடுத்து கேட்பவர், அராஜகம் செய்யத்தெரியாதவர், இப்படி அர்ப்பணிப்போடு ஆக்டிவாக செயல்படு்கிறவரின் முதல்வர் பதவியை பிடுங்க நினைப்பது என்ன நியாயம்.? அவர் எவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்பது அவர் பேட்டியின் மூலம் உலக மக்களுக்கு தெரிந்துவிட்டது. இப்போது அ.தி.மு.க.வினர் மட்டுமில்லாமல் மாற்று கட்சியினரும், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர். பல எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகிறார்கள், இன்னும் பலர் இங்கு வருவார்கள். அண்ணன் ஓ.பி.எஸ்.அவர்கள் முதல்வராக தொடர்வார்" என்றார் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம்

வாசுதேவநல்லூர் - மனோகரன்வாசுதேவநல்லூர் - மனோகரன்

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், "கட்சிக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவரான சசிகலா கட்சித் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதே எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும், அம்மா மறைவுக்குப் பின்னர் கட்சியில் எந்த பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாதே என்பதற்காக அமைதி காத்தேன்.

ஆனால், தற்போது அவருக்கு முதல்வராக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளது. அதற்காக, அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவரான முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றும் முயற்சி நடக்கிறது.

சுயநலத்துக்காக ஒரு சில தனிநபர்கள், கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து எனது ஆதரவைத் தெரிவித்தேன். என்னைப் போலவே மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் குமுறலில் இருக்கிறார்கள். அவர்களும் சீக்கிரம் முதல்வர் பன்னீர்செல்வத்தின் பக்கமாக வந்து அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள்," என்றார்.


கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, "அம்மா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்க கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டிவேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு பதவியேற்பு நடந்தது. தொடர்ந்து அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதலில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார். நாங்கள் எல்லோரும் தான் தேர்வு செய்தோம். இப்போது முதல்வராக வேண்டும் என சொல்வது சரியல்ல. 2 நாட்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார்கள். அதில் சட்டமன்ற குழுத்தலைவராக சசிகலாவை தேர்வு செய்வதாக அறிவித்து, எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் பெற்றார்கள். நானும்  கடிதம் கொடுத்தேன்.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் பல பிரச்னைகள் பேசப்படுகிறது. பிரச்னைகளை திறம்பட சமாளித்து வருகிறார். இந்த நேரத்தில் அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்கி அவமானப்படுத்துவது சரியானது அல்ல. அவரது பேட்டி என்னை நெருடலுக்குள்ளாக்கியது. தொகுதி மக்கள் எங்களை பதவிக்காக அலைகிறீர்கள் என திட்டினர். இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சை கேட்டு, நான் தெளிவானேன். அ.தி.மு.க. இருக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் இருக்க வேண்டும். அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டிக்கொண்டிருக்க வேண்டும். நான் 1972-ம் ஆண்டில் இருந்து கட்சியில் இருந்து வருகிறேன். புரட்சித்தலைவர், அம்மாவின் விசுவாசியாக இருந்து வருகிறேன். அதே விசுவாசத்தோடு இருக்கவே விரும்புகிறேன்," என்றார்.

ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்

ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், “எனக்கு சசிகலா முதலமைச்சர் ஆகுறது சுத்தமா பிடிக்கலைங்க. மக்கள் ஓ.பி.எஸ்ஸைத்தான் விரும்புறாங்க.  அவர் ரொம்ப எளிமையாக இருக்கிறார். முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு தனித்த அதிகாரபீடத்தில் உட்காராமல் அவரும் ஒரு எம்.எல்.ஏ போலவேதான் நடந்துகொள்கிறார்.  அது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மக்களும் அதைத்தான் லைக் பண்றாங்க. அவர் சிறப்பாகத்தானே செயல்பட்டுகிட்டு இருந்தார் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இப்போது  என்ன வந்தது.? பொதுச்செயலாளர் பதவி வேண்டுமென்று கேட்டார்கள் பத்தோடு பதினொன்னா நின்று ஆதரவு தெரிவிச்சிட்டு வந்தேன். இப்போ  முதலமைச்சரும் நான்தான்னு சொன்னா என்ன நியாயம்.  கட்டாயப்படுத்தினால் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்.?  எல்லா பதவியும் உங்களுக்கேவா.?

அமைச்சராக இருந்த போதுகூட  அம்மாவுக்கு விசுவாசமாக இருந்து   அடிமட்டத் தொண்டன் போல  கட்சிக்காக செயலாற்றியவர் ஓ.பி.எஸ்.  அவரை ஏன் வெளியேற்ற வேண்டும். அவர் முதல்வராக  இருந்ததில் என்ன கேடு நடந்துவிட்டது. அம்மா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.கவுக்கு நல்ல பெயர்தானே வாங்கிகொடுத்துள்ளார்.  இங்கே யார் பச்சை துரோகி.? பொதுச்செயலாளர்  பதவிகூட எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தால் மக்கள்  சசிகலாவின் பெருந்தன்மையை எண்ணி தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இப்போது அவருடைய நோக்கம் மக்களுக்கு புரிந்துவிட்டது.  நான் எம்.எல்.ஏ..க்கள் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மூலம் என்னை போனில் அழைத்தார்கள் ஆனால், எந்த பதிலும் சொல்லவில்லை. நான் ஏதோ விடுப்பு எடுத்து கடிதம் கொடுத்ததுபோல செய்திகள் வருகிறது. நான் இதுவரை எந்த கடிதமும்  கட்சித்தலைமைக்கு கொடுக்கவில்லை. நான் ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்கிறேன். அவர் ஆட்சி நடத்தினால்தான்  நாட்டுக்கும் நல்லது எம்.எல்.ஏக்களுக்கும் நல்லது. சட்டமன்றத்தில் உண்மையான பெரும்பான்மை தெரியும்"  என்றார்.

- ச.ஜெ.ரவி, ஆன்டனிராஜ், சல்மான், புண்ணியமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close