’’இதனால்தான் சசிகலாவை நாங்கள் சந்தேகிக்கிறோம்....?!’’ ஆனந்தராஜ் #OPSVsSasikala

ஆனந்தராஜ்

சினிமாவில் வில்லனாக உச்சத்தில் இருந்த பல நடிகர்களில் ஆனந்தராஜும் ஒருவர். அவர், பின்னாளில் ஜெயலலிதா ஆட்சியின்போது அ.தி.மு.க-வில் இணைந்தார். அந்தக் கட்சியின் கழகப் பேச்சாளராக இருந்த ஆனந்தராஜ், பல மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்துவந்தார். அவர் எப்போதும், “நான் அ.தி.மு.க-வுக்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும் நல்ல விசுவாசி” என்றுதான் சொல்வார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்... சசிகலா, பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட இருந்த சமயத்தில், அவரை, பொறுமை காக்கும்படி முதன்முதலாக வேண்டுகோள் விடுத்தவரும் நடிகர் ஆனந்தராஜே. அதன்பின் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆனந்தராஜ் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். இதனால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இப்போது, சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 5-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், ஆனந்தராஜ். அப்போது அவர், “மீண்டும் தமிழகத்தை ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. முதலமைச்சர் பதவியில் மாற்றம் செய்ய எதற்காக இத்தனை அவசரம், யாருக்கு இந்த அவசரம் என்பதை தமிழக மக்கள் யோசிக்க வேண்டும். தமிழக முதலமைச்சராக யார் இருக்க வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமாக இருக்க வேண்டும். அவர்கள்தான் அம்மாவைத் தேர்ந்தெடுத்தனர். அவருக்குப் பின்னால் ஓ.பி.எஸ் பதவியில் அமர்ந்ததை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இப்போது பதவி மாற இருப்பதை மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டால்... அதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? பல இடங்களில் அ.தி.மு.க ஒரு குடும்பக் கட்சி இல்லை என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால், இப்போது நடப்பதைப் பார்த்து, நான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க கட்சித் தலைமை, இந்தச் சூழ்நிலையைச் சரியாகக் கையாள வேண்டி இருக்கிறது” என்றார்.

இந்தநிலையில், கடந்த 7-ம் தேதி இரவு முதல்வர் பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து 40 நிமிடங்கள் தியானம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்யவைத்தனர்” என்று கூறினார். இதற்கு சசிகலா, ''தி.மு.க-தான், பன்னீர்செல்வம் பின்னால் இருந்து இயக்குகிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இவ்வாறான சூழ்நிலையில் அன்று தமிழகம் முழுவதும் அரசியலில் பெரும் பதற்றம் உருவானது. இதனால் தமிழகத்துக்கு முதலமைச்சராக யார் வருவார்கள் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

ஆரம்பத்திலிருந்தே சசிகலா பொதுச் செயலாலர் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த நடிகர் ஆனந்தராஜிடம் இப்போது நிலவிவரும் அரசியல் தொடர்பாகப் பேசினோம். 

ஆனந்தராஜ்

''முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''அவர், மெரினாவில் பேசியது மக்கள் தனக்குக் கொடுத்த ஆதரவை இழக்கக் கூடாது என்பதற்காகத்தான் இருக்கும். ஆனால், அவர் ராஜினாமா செய்வதற்கு முன்... மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவர் மட்டுமல்ல, எந்தத் தலைவராக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் மட்டும் சேர்ந்து எடுக்கும் முடிவல்ல இது. தொகுதியில் எந்த ஒரு விழா நடந்தாலும் முன்னின்று நடத்தும் எம்.எல்.ஏ-க்கள், மக்கள் கருத்துகளையும் மனதில் வைத்துச் செயல்பட்டிருக்க வேண்டும்.”

''பி.ஜே.பி பின்னணி இருப்பதால் பன்னீர்செல்வம் இப்படி நடந்துகொள்கிறார் என்று நினைக்கிறீர்களா?''

''எல்லாமே கற்பனையாகத்தான் இருக்கிறது. சசிகலா பேசியபோது... 'தி.மு.க-தான் ஓ.பி.எஸ்ஸை பின்னால் இருந்து இயக்குகிறது' என்று சொல்கிறார். நான் கேட்கிறேன், 'அம்மா... அப்போலோவில் இருந்தபோது ராஜாத்தி அம்மாவோடு சசிகலா பேசியதை என்ன சொல்வது?' அவருக்குத் தேவைப்பட்டால், தி.மு.க-வோடு பேசலாம். ஆனால், ஓ.பி.எஸ் ஸ்டாலினைப் பார்த்து சிரித்தால் துரோகமா?''

''சசிகலாவுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்திருந்தாரா?''

''அவர், சசிகலாவுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. அவரையும், அவர் குடும்ப உறுப்பினர்களையும் அரசியலுக்குள் அனுமதிக்க எப்போதும் நினைத்தது இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு அம்மா மரணத்தில் சந்தேகம் இருக்கும்போது... அவரை முதல்வராக ஓட்டு போட்டு ஏற்றுக்கொள்வார்களா என்று அவர் சிந்திக்க வேண்டும். அவரின் அவசரம்தான்  மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.''

''கட்சி நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பணத்துக்காகவா... பதவிக்காகவா?''

இரண்டுக்கும்தான். அவரவருக்கு எது தேவையோ அதற்காக உடன் இருக்கிறார்கள். தமிழகத்துக்கு நல்ல முதல்வர் வர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. விரைவில், அதன்படியே நடக்கும்.''

- நந்தினி சுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!