முதல்வருக்கான போட்டி நடந்த நேரத்தில் அரங்கேறிய கொடூரம், கவனித்ததா தமிழகம்! | Haasini, the child was sexually abused, killed and burnt when the political drama was happening in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (10/02/2017)

கடைசி தொடர்பு:11:20 (10/02/2017)

முதல்வருக்கான போட்டி நடந்த நேரத்தில் அரங்கேறிய கொடூரம், கவனித்ததா தமிழகம்!

சசிகலா பன்னீர்செல்வம் போட்டியின்போது நிகழ்ந்த கொடூரம்.. கவனித்ததா தமிழகம்!?

ரியலூரில் அண்மையில், நந்தினி என்கிற பதினாறு வயது பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமிழகமே பரபரப்பாகப் பேசித் தீர்த்தது. அதே சமயம்தான் மெரினாவிலும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை நாம் முன்னிறுத்தி இருந்தோம். இப்போது தமிழகம் தன்னுடைய முதல்வர் யார்? அமைச்சர்கள் யார்? அரசியலில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற பரபரப்பில் சுழன்றுகொண்டிருக்கிறது. ஒரே நாளில் சமூகவளைதளப் பக்கங்கள் 'பன்னீர்செல்வம் vs சசிகலா’ செய்திகள் மயமாகின. இதற்கிடையேதான் போரூர் பகுதியைச் சேர்ந்த ஹாசினி என்கிற ஏழு வயது பெண்குழந்தை காணாமல் போன சம்பவமும் நிகழ்ந்தது.

பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க சட்டபேரவைத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் எந்நிமிடமும் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதே நேரத்தில்தான் ஏழு வயது ஹாசினி காணாமல் போயிருக்கிறார். ஆனால் தமிழகமே காணாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் இருந்த மக்களுக்கு சிறு குழந்தை ஹாசினி காணாமல் போனதும் அதன் பிறகு எரிக்கப்பட்ட நிலையில் அனகாப்புத்தூர் அருகே அவளது உடல் கண்டெடுக்கப்பட்டதும் முக்கியமாக இருந்திருக்கவில்லை.

பலாத்காரம்

ஹாசினியின் அப்பா பாபு, தனியார் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். அம்மா ஸ்ரீதேவி, பள்ளி ஆசிரியை. ஹாசினிக்கு எல்.கே.ஜி படிக்கும் ஒரு குட்டித் தம்பியும் இருக்கிறான். ஹாசினி காணாமல்போன அன்று மாலை, தனது அப்பார்ட்மெண்ட் சிறுவர்களுடன் அவள் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளேயே விளையாடிக் கொண்டிருக்கிறாளே நாம் கடைக்குச் சென்று வருவோம் என்று தங்களுடைய மகனை மட்டும் அழைத்துக் கொண்டு பெற்றோர் ஷாப்பிங் சென்றுள்ளனர். கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய நிலையில் மகளைக் காணாததை அடுத்து அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு பத்து மணிக்கு கண்ட்ரோல் ரூமுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை விசாரணையும் குற்றவாளி சிக்கியதும்!

பத்து மணிக்குப் பிறகு விசாரணைக்கு வந்த போலீஸார், இது கடத்தல் கேஸாக இருக்கலாம் என்று தங்கள் ரிக்கார்ட்டில் இருக்கும் கடத்தல்காரர்கள் பட்டியலில் பழைய குற்றவாளிகளைத் தேடினர். ஆனால் குழந்தையைக் கடத்தியுள்ளோம் என்று கூறி கடத்தல் கும்பலிடம் இருந்து  மறுநாளும் எவ்வித தொலைபேசி அழைப்பும் வராத நிலையில்தான் போலீஸ் கொஞ்சம் துரிதமாகி சந்தேகப்படும் நபர்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அப்பார்ட்மென்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளின்படி குழந்தை அந்தப் பகுதியைவிட்டு எங்குமே வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது. அதனால் அப்பார்ட்மென்டில் இருப்பவர்களின் மீது தனது கவனத்தைத் திருப்பியது போலீஸ். பெற்றொரின் சந்தேகப்பட்டியலில் இருந்தது அந்தப் பகுதியில் இஸ்திரி கடையில் வேலை பார்க்கும் பெண், பால்காரர், செய்தித்தாள் போடுபவர் போன்றவர்கள். அப்பார்ட்மென்டில் இருப்பவர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவரையுமே போலீஸார் விசாரித்தனர்.

தஷ்வந்த்

விசாரிக்கப்பட்டவர்கள் பட்டியலில் பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்தும் அடக்கம். அப்பா, அம்மா வெளியே சென்றபோது விளையாடிவிட்டு வந்த குழந்தை, தஷ்வந்த் வீட்டில் இருக்கும் நாயைப் பார்க்கதான் அவர்கள் வீட்டு வாசலில் நின்றுள்ளது. சி.சி.டி.வி கேமரா பதிவின்படி. சுமார் 6:15 மணியளவில் தஷ்வந்த் வீட்டுக்கு நாயைப் பார்க்கச் சென்ற குழந்தை அதன் பிறகு வெளியே வரவே இல்லை. அவர் ஒரு பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறுவதும் பின்னர் அதே பெட்டியுடன் பத்து மணியளவில் வீட்டுக்குத் திரும்பியது மட்டும் பதிவாகியுள்ளது.

தஷ்வந்த்க்கு வயது 22, டி.எம்.இ முடித்துவிட்டு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்.இத்தனைக்கும் போலீசாருக்கு முதலில் தகவல் தெரிவித்துவிட்டு, அவர்கள் விசாரணையில் முழுக்க முழுக்க உடனிருந்தது தஷ்வந்த்தான். ஆனால் அவர் விசாரிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்தபோது, பெற்றோர் மற்றும் தம்பியுடன் ஒரு நிகழ்வுக்குச் சென்றுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், அவர் எந்த நிகழ்வுக்கும் செல்லவில்லை என்பதற்கான ஆவணம் போலீசார் வசம் முன்னரே இருந்துள்ளது.

ஒருவர் பொய் சொல்லுகிறார் என்று தெரிந்ததும் அவர்கள் சொல்லும் கதையைக் கேட்பதில் நிச்சயம் ஒரு சுவாரசியம் இருக்கும். அதைதான் போலீஸும் செய்துகொண்டிருந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தான் மாட்டிக் கொள்வோம் என்று உணர்ந்த தஷ்வந்த், ஹாசினியை தான் வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றதாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாய்க்குட்டியுடன் விளையாடச் சென்ற ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் தஷ்வந்த். அவள் குரலெடுத்துக் கதறவும் அக்கம்பக்கத்தில் யார் காதிலாவது விழுந்துவிடப் போகிறது என்று தலையணையை வைத்து முகத்தை மூடியுள்ளார். அதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி இறந்திருக்கிறாள். சிறுமி இறந்ததை மறைக்க அவளைப் பெட்டியில் போட்டு மூடி எடுத்துக் கொண்டு போய் அனகாப்புத்தூர் பகுதியில் ஒரு மறைவான இடத்தில் வைத்து எரித்துள்ளார்.போலீஸார் அவன் எரித்த இடத்தைச் சென்று பார்த்த போது அது இறந்த சிறுமியின் உடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு  அடையாளம் தெரியாமல் கருகி இருந்திருக்கிறது.

குற்றத்தை விசாரிக்கும் அம்பத்தூர் சரக துணை கமிஷனர் சுதாகர் கூறுகையில்,"தஷ்வந்த், தான் செய்தது குற்றம் என்று உணர்ந்ததாகவே தெரியவில்லை. சிறுமியை எரித்த இடத்துக்கு எவ்வித உணர்வுமின்றி எங்களை அழைத்துச் சென்று காண்பித்தார்.  சிறுமியை துன்புறுத்தும் நோக்கில் குற்றம் இழைத்தது மற்றும் கொலைக்குற்ற வழக்கு ஆகிய பிரிவுகளில்தான் வழக்கு பதிவு செய்துள்ளோம். நிச்சயம் குற்றவாளிக்கான தண்டனை கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

”தன் குற்றத்திற்கு சிறிதும் வருந்தவில்லை!”

குற்றவாளியை அவர் வீடு இருந்த பகுதியிலிருந்து கைது செய்து அழைத்துச் சென்றபோது அந்த பகுதி மக்கள் அனைவருமே அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளனர், ஹாசினியின் வீட்டின் அருகில் வசிக்கும்  'மனிதி' அமைப்பைச் சேர்ந்த சபி என்பவர் கூறுகையில்,”குழந்தையைக் கொடுமை செய்து பின்னர் கொன்று அதன் பின் அவளை எரித்து மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொண்ட ஒரு குற்றாவாளியைத் தாக்கியதில் தவறில்லை. தனது குழந்தை இறந்ததற்காக அழக்கூட முடியாத நிலையில் பித்துப் பிடித்தது போல ஹாசினியின் பெற்றோர் இருக்கிறார்கள். யார் யாரையோ சந்தேகப்பட நேர்ந்து இறுதியில் பக்கத்து வீட்டில் இருப்பவனே இப்படியொரு குற்றம் செய்திருப்பது அவர்களை மிகவும் பாதித்துள்ளது. யாரையும் எளிதில் நம்பமுடியாத ஒரு மன உளைச்சலில் இரண்டு நாட்களாக இருக்கிறார்கள். குற்றவாளிக்கான உட்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதுதான் அந்தப் பெற்றொருக்கும் ஹாசினிக்கும் தீர்வாக இருக்கும்” என்றார்.   

குற்றவாளிகள் எப்படி இருப்பார்கள்?

வீட்டில் பிள்ளைகள் சாப்பிட மறுத்தால் அல்லது அடம் பிடித்தால் ‘அங்கே பாரு பூச்சாண்டி!கருப்பா! கண்ணு செவப்பா!” என்று பெற்றோர்கள் சாலையில் போகும் யாரையேனும் காட்டிச் சாப்பிட வைக்க முற்படுவதுண்டு. தஷ்வந்த் போன்று அதுவும் பகட்டான பணியாகக் கருதப்படும் மென்பொருள் நிறுவன வேலையில் இருப்பவர்களை யாரும் பூச்சாண்டிகள் என எளிதில் ஊகித்துவிட முடியாது. ஆனால் குற்றவாளிகள் உருவ அமைப்பில் உருவாவதில்லை. வெள்ளைத் தோலாக இருந்தாலும் கருந்தோலாக இருந்தாலும் குற்றவாளிகளை உருவாக்குவது வன்மமான மனநிலைதான். 

இதற்காக யார் பேச வேண்டும்?

பாலியல் வன்கொடுமையும் கொலையும் இந்தச் சமூகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் நம் வீட்டருகிலேயே நம்மிடம் பேசிப் பழகும் ஒருவர் நம் குழந்தைக்கே எமனாவதுதான் ஏற்றுக் கொள்ளமுடியாதது. ஆனால் முன்பின் தெரியாதவரைவிட நன்கு அறிந்தவர்தான் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். 94.8% சதவிகிதக் சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். இந்தியாவில் மட்டும் நாளொன்றுக்கு 6 பாலியல் வன்புணர்வுச் சம்பவமும், குறைந்தது 15 பாலியல் தொல்லை சம்பவமும் நிகழ்வதாக கணக்கீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த கணக்கீடுகளைப் புறந்தள்ளுவோம். குற்றங்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் கணக்கீடுகளுக்கும் தொடர்பு துளியளவுதான். மாதர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், என தொடர்ந்து பாலியல் சம்பவங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இது எதிர்காலத்துக்கான திட்ட வரையறைகள். தற்போது கண்முன்னே நிகழ்த்தப்படும் இம்மாதிரியான குற்றங்களுக்கு நிச்சயம் உட்சபட்ச தண்டனை கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் உயிர்பலிகளை எப்படித் தடுக்கப் போகிறோம். 

நிர்பயா! ஜிஷா! நந்தினி! ஹாசினி! அடுத்து யார்? தானாகக்கூட இருக்கலாம் என்கிற மனநிலையில்தான் சக உயிர்களான பெண்களும் குழந்தைகளும் தனது வாழ்நாட்களைக் கடத்துகின்றனர் என்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது!

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close