வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (09/02/2017)

கடைசி தொடர்பு:15:09 (10/02/2017)

“நான் சசிகலாவை ஆதரிக்கிறேன்...!” தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.

சிவசங்கர்

.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் களேபரங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டனர். அவைத்தலைவர் மதுசூதனன் ரிவர்ஸ் எடுத்து முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது முகநூலில் ’ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா..” என்று பதிவை அங்கதமாக செய்துள்ளார். அது வருமாறு:

’’சின்னம்மா அவர்களின் அளப்பறிய திறமை காரணமாகத் தான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
ராஜாஜி, காமராஜர், அண்ணா அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு 'இன்ச்' அளவுக்கு நெருங்கி நிற்கிறார் என்றால் அது அவரது உழைப்பு மற்றும் திறமை. படிப்படியாகத் தான் முன்னேறி இருக்கிறார். இதை எல்லோரும் மறைக்கிறார்கள்.

கணவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று சும்மா இருந்துவிடாமல், வெளிநாடு சென்று வீடியோ தொழில் குறித்து கற்றறிந்தார். அப்போது யாருமே அதற்காக மெனக்கடாத காலம். இந்தத் தொழில் பிற்காலத்தில் சிறக்கும் என உணர்ந்தது தான் அவரது திறன். அந்த அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஜெயலலிதா இந்த உயரத்தை அடைந்திடுவார் என கணித்து அவர் நட்பை தேடிப் பிடித்தார். இது அவரது 'கணிப்பை' உறுதி செய்கிறது.

கணவரின் அரசுப் பணியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் தான் ஜெயலலிதாவை நெருங்கினார், ஒரு நிகழ்ச்சிக்காக. அத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஜெயலலிதாவை அணுகி அவருக்கு உதவிகள் புரிந்தார். அதன்மூலம் ஜெ'வின் அறிவிக்கப்படாத உதவியாளர் இடத்தைப் பிடித்தார். இது அவரது 'பழகும் பண்பை' வெளிப்படுத்துகிறது.1991-ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த உடன், தன்னை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க வைத்தார். தனது அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவின் 'வளர்ப்பு மகனாக' ஆக்கினார். அவர் திருமணத்தில் இருவரும் ஒட்டியாணம் அணிந்து நடந்தக் காட்சி தான் இன்றைக்கும் அவரது முத்திரை. இது அவரது 'லாபியிங் பவரை' காட்டுகிறது.

1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கின்போது, ஜெயலலிதா வாயால் சசிகலா குரூப்பை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்க வைத்து, பிறகு கூடி கும்மியடித்தது வரலாறு. அப்புறமும் உடன்பிறவா சகோதரியாய் பயணித்தார். ஜெயலலிதாவாலும் தவிர்க்க இயலவில்லை. அதுதான் சசியின் 'ஈர்ப்புத் திறன்'. அது கடைசி வரை வேலை செய்தது, சசியின் 'ஆளுமையை' நிலைநாட்டியது.
2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சிக்காலம் போல் சிக்கலில் மாட்டாமல், இந்த முறை வெளிநாடுகளில் முதலீட்டை துவங்கினார். ஒரு தீவு கையகப் படுத்தப்பட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராய் அரசியலில் அறிமுகப்படுத்தினார். பிசிறடித்து, 'அக்கா ஜெ' கோபத்துக்கு ஆளானால், அடுத்தவரை இழுத்து வந்தார். டி.டி.வி.தினகரனில் துவங்கி டாக்டர் வெங்கடேஷ் வரை இழுத்து வந்தார். இது அவரது 'குடும்ப பாசத்தை' உறுதிப் படுத்துகிறது.

சசிகலா

2006 -ம் ஆண்டு தி.மு.க ஆட்சி வந்தபிறகு சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சசி தான் எனக் காரணம் காட்டி , 'சசியை' போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சசியும் வெளியேறினார். இரண்டே மாதங்கள் தான், சசி ஜெ-வை சமாதானப்படுத்தி கார்டன் நுழைந்தார். மெல்ல, மெல்ல அதிகாரத்தில் தன் கரம் நுழைத்து ஓங்கச் செய்தார் சசி. இது அவரது 'சூழ்ச்சித் திறனை' வெளிக் கொணர்ந்துள்ளது.2011-ம் ஆண்டு தேர்தல் குறித்து அவர்களுக்கே குழப்பம். ஆனால் ஆட்சி அமைந்தது. அப்போது தான், ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவல்துறையில் 'தன்னர்'களை உயர் இடத்தில் கொண்டு வந்து அமர்த்தினார். கொஞ்சம், கொஞ்சமாக ஆக்டோபஸாய் கரம் விரித்தார். தமிழ்நாட்டை வளைத்துப் பிடித்தார். இது தான் இவரது 'மேலாண்மை'யை காட்டுகிறது.

2016-ல் உடல்நலம் குறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி பனியாற்றினார். வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை அதிகாரத்தோடு செலுத்தினார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என சொல்லியே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலகிற்கே காட்டாமல் வைத்திருந்தது இவரது 'ரகசியக் காப்புத் திறனை' எடுத்துக் காட்டுகிறது.

இப்படி சசிகலாவின் " 'கணிப்புத் திறன்', 'பழகும் பண்பு', 'லாபியிங் பவர்', 'ஆளுமை', 'குடும்பப் பாசம்', 'சூழ்ச்சித் திறன்', 'மேலாண்மை', 'ரகசியக் காப்புத் திறன்' "ஆகியவை வெளிப்பட்டுள்ளது. இனி இப்படியொருவர் கிடைக்கப் போவதில்லை. இவர் மாத்திரம் வந்தால், இந்தத் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி, இந்தியாவை உயர் வழிக்கு கொண்டு செல்வது எளிது.
இவர் பிரதமரானால், இந்தியா 'ஏக இந்தியா' ஆக முழு நடவடிக்கைகள் துவங்கும். எதிர்கட்சிகள் முடக்கப்படும். காவிரி, பாலாறு, பெரியாறு மொத்தமாக முடிக்கப்படும். அயல்நாடுகள் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்படும்.

# ஆதலால், ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா ஃபார் பி.எம். !

சசிகலா

இதுபற்றி எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், ‘ஊரில் எல்லாருமே சசிகலாவை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கட்சி எல்லைகளைத் தாண்டி கடும் எதிர்ப்புகள் உருவாகி அது கோபமாக கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று  யோசித்ததன் வெளிப்பாடுதான் இது. வேறு என்னத்த செய்ய...?” என்று சொல்லி சிரித்தார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்