அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரி வழக்கு! சசிகலா, டி.ஜி.பி பதில் அளிக்க உத்தரவு

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரிய வழக்கில் டி.ஜி.பி ராஜேந்திரன், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர், வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணாபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா, குன்னம் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆகியோரைக் காணவில்லை என்றும், விடுதியில் சிறைவைக்கப்பட்டுள்ள 131 எம்.எல்.ஏ.க்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ கீதாவின் உறவினர் பிரீத்தா, இளவரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவு உட்கொள்ளாமல் இருக்கும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு உணவு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இளவரசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமச்சந்திரனின் செல்போன், ஜாமர் கருவியால் தடை செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் செல்போன் ஜாமர் தடை செய்யக்கூடாது என்பது விதி. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விடுதியில் தங்கியிருப்பதாக அரசு வழக்கறிஞர் பொய் கூறியுள்ளார் என்று வாதிட்டார்.

அப்போது, எம்.எல்.ஏ.க்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விடுதியில் தங்கியிருப்பதாக தவறாகக் கூறிவிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எம்.எல்.ஏ.க்கள் தற்போதுள்ள இடத்தில் பாதுகாப்பாக உள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சாப்பிடாமல் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு உணவு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக டி.ஜி.பி ராஜேந்திரன், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!