வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (10/02/2017)

கடைசி தொடர்பு:17:14 (10/02/2017)

ஆளுநரிடம் என்ன பேசினார் சசிகலா...?

கவர்னர் - ஆளுநர் - வித்யாசாகர் ராவ்

கோட்டை வாசலில் அவிழ்த்து விடப்போகும் 'அரசு' என்னும் காளையை யார் பிடிப்பது என்கிற 'மல்லுக்கட்டு' போட்டியால் ஒட்டுமொத்த தமிழகமும் தறிகெட்டுக் கிடக்கிறது. ஓர் இரவில் இதுவரை இல்லாத புது மனிதராக மாறி நிற்கிறார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். 128 சட்டமன்ற உறுப்பினர்களும் என் பக்கம்தான்'  என்கிறார் சசிகலா. இருவரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முடியாமல் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ். இனி தமிழகத்தில் என்ன நடக்கும்? மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? இதுவே தமிழகம் முழுவதும உள்ள மக்கள் அனைவரிடமும் உள்ள கேள்வி.

சசிகலா - ஆளுநர் சந்திப்பு!

மும்பையில் இருந்து வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தமிழகம் வந்த ஆளுநரை கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் முதலில் சந்தித்த முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், "ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். சசிகலா சட்டமன்ற அ.தி.மு.க தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை ஏற்கக் கூடாது. ஏனென்றால், அதில், பல முறைகேடுகள் நடந்துள்ளன. அவரை வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும். சசிகலாவுக்கு இருக்கும் மெஜாரிட்டி என்பது முறைகேடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

கவர்னரிடம் ஓ.பி.எஸ், சில கோப்புகளையும் கொடுத்து இருக்கிறார்.  ராஜினாமா செய்தததை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்பதற்கான கடிதம், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது, சென்னை போலீஸ் கமிஷனர் எஸ். ஜார்ஜ் மாற்றம் தொடர்பான உத்தரவு, அ.தி.மு.க எல்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டுள்ளதாக 4 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த புகாரின் நகல், சசிகலா பொதுச்செயலாளர் ஆனதில் விதிமுறை மீறப்பட்டதற்கான ஆதாரமாக அ.தி.மு.க உட்கட்சி விதிமுறைகள், என்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கேட்கும் கடிதம் ஆகியவற்றை பன்னீர் செல்வம் ஆளுநரிடம் அளித்துள்ளார்.

சசிகலா

இதன் பிறகு, சசிகலாவைச் சந்தித்த ஆளுநர், அவரிடம் நடத்திய உரையாடல், மிகுந்த காரசாரமாக இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கருத்துக் கூறிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "ஆளுநர்  அறைக்குள் சசிகலா நுழையும்போதே மிகுந்த இறுக்கத்துடன்தான் முகத்தை வைத்திருந்தார். முதல் 2 நிமிடம் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. பின்னர் மெல்லிய குரலில் சசிகலா பேச ஆரம்பிக்க, அதை டி.டி.வி தினகரன் மொழிப்பெயர்த்து ஆளுநரிடம் கூறியுள்ளார். 'ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எனக்கு உள்ளது. அதனால், ரகசிய வாக்கெடுப்பு  நடத்தி ஆட்சியமைக்க அனுமதியளிக்க வேண்டும்' என்று சசிகலா கோரினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர், 'என் அனுமதி இல்லாமல் பதவியேற்பு விழா ஏற்பாடுகளை செய்தீர்கள். முதலமைச்சரை   மிரட்டி நீங்கள் கடிதம் வாங்கியதாக புகார் கூறியிருக்கிறார். உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்கள் எங்கே? அவர்கள்  தொகுதி மக்களைப் பார்க்காமல் ஓ.எம்.ஆர் சாலையில் இருக்க  வேண்டிய அவசியம் என்ன? அப்படியே அவர்கள் ஆலோசனை நடத்த வேண்டும் என்றால் சட்டமன்ற விடுதியில் நடத்தலாமே. 129 எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வருகின்றன. அவர்கள் சுதந்திரமாக உங்களை ஆதரிக்கிறார்கள் என்றால், அவர்கள் தொகுதியிலோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலோ தங்கி இருக்கலாமே. ஏன், இரண்டு நாட்கள் எங்கோ ஒரு விடுதியில் சென்று இருக்க வேண்டும்' என கோபமாகக் கேட்க, எந்தப்பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்காந்து இருந்தார் சசிகலா. இதையடுத்து 5 நிமிடம்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 'யாரையும் அடைச்சு வைக்கல. நீங்கள் கேட்டுக் கொண்டால், இப்பவே ஆளுநர் மாளிகைக்கு கூட்டிட்டு  வருகிறோம்' என்று சொன்னதும், 'ஆளுநர் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி வந்து பலத்தைக் காட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீங்கள் உங்கள் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபியுங்கள். மற்ற விஷயங்களை நான் ஆலோசித்து விட்டுச் சொல்கிறேன். இப்போ நீங்க கிளம்பலாம்' என்று கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார் சசிகலா" என்று தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு அறிக்கை!

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம், சசிகலா சந்திப்புக்குப் பிறகு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழக முதல்வரை மிரட்டி சசிகலா ராஜினாமா செய்ய வைத்தார் என்பதற்கான குற்றச்சாட்டில்  அடிப்படை முகாந்திரம் உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கான விடுதியில் இல்லாமல் அனைவரும்  தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர்கள் கடத்தப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். இந்த அறிக்கையை வைத்து மத்திய  அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "தமிழகம் தற்போதுள்ள சூழலில் காபந்து அரசாக  (care taker government) உள்ளது. அப்படி காபந்து அரசாக .முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள். எம்.எல்.ஏ-க்கள் பதவி இழந்து விடுவார்கள். இது மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அரசாக இருக்கும். பட்ஜெட் உள்ளிட்ட எந்த நடைமுறைகளும் இருக்காது. முதலமைச்சருக்கு  என்று இந்த அரசாங்கத்தில் சில அதிகாரங்கள் உண்டு, காபந்து அரசின் முதல்வராக அவர் சில உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். ஆனால், அவரால் அமைச்சரவையை மாற்றியமைக்க முடியாது. அதேவேளையில் அமைச்சர்களும் தங்கள் விருப்பத்துக்குச்  செயல்பட முடியாது. ஒரு சின்ன டிரான்ஸ்பர் அல்லது டெண்டர் கூட கொடுக்க முடியாது. ஒவ்வொரு துறைக்கும் தற்போது உள்ள செயலாளர்கள் போக தனியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். அந்த அதிகாரியே துறையின் பணிகளைக்  கவனிப்பார். இப்படியொரு அரசை ஆறு மாதம் வரை நடத்த  முடியும். இதேபோன்று போயஸ்கார்டன் வீட்டைவிட்டு சசிகலாவை  வெளியேற்றும் வேலையும் முனைப்பாக உள்ளது. இதற்காக மத்திய ரிசர்வ் போலீஸைக் கொண்டு இந்த நடவடிக்கையை இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும்" என்று சொல்லி முடித்தார். 

-பிரம்மா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்