வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (10/02/2017)

கடைசி தொடர்பு:17:38 (10/02/2017)

'சிரிச்சா போச்சு' விதி எண் 118 - இது 'சின்னம்மா' ஸ்பெஷல்!

சிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதுமே தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பலை எழுந்தது. அதுவும் போதாதென, இப்போது அ.தி.மு.க-வில் 'சின்னம்மா' முதல்வராவதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றி அடுத்த ஆபரேஷனையும் ஆரம்பிச்சுட்டாய்ங்க. சசிகலா முதல்வராவதற்கு ஏதுவாக, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யவைத்தார்கள். அதற்கு அப்புறம் ஜெயலலிதா சமாதியில் நடந்த ஓ.பி.எஸ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்... அவரது தெளிவான பேட்டிகள் எல்லாம் ஓ.பி.எஸ் அகராதியில் புதிய வரலாறு! 

sasikala

அதற்குப் பிறகு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு டி.வி சேனல்களுக்கும் ஏறி இறங்கி இன்டர்வியூ கொடுத்து, நெறியாளர்களின் கேள்விகளுக்கு அசராமல் பதில் கொடுத்தார். ஓ.பி.எஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்களாக அந்தப் பக்கம் 'சின்னம்மா' கொடுத்த டமால் டுமீல் பேச்சுகள்தான் தமிழ்நாட்டு மக்களைக் கொஞ்சம் டரியலாக்கியது. நிருபர்கள் ஒரு கேள்வி கேட்க, ஒட்டுமொத்த மக்களும் மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி ஒரு பதிலைச் சொல்லி, இருக்கும் சந்துபொந்துகளில் எல்லாம் வைத்துக் கலாய்க்கப்பட்டார் 'சின்னம்மா'. 

அப்படித்தான், 'ஓ.பி.எஸ்ஸின் இந்த திடீர் முடிவு' குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'அன்னிக்கு சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அதுக்குக் காரணம் தெரியலை. தி.மு.க வும் ஓ.பன்னீர்செல்வமும் ஏதோ சதி பண்ணியிருக்காங்க...' என்கிற ரேஞ்சில் தெளித்துவிட, 'சிரிச்சதெல்லாம் ஒரு குத்தமாம்மா... சிரிக்கிறது மனிதர்கள் இயல்புதானே...' என ஓ.பி.எஸ் யதார்த்தமாகப் புன்னகைத்தார். 'சின்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...' எனச் சிரிப்பாய்ச் சிரித்தனர் தமிழக மக்கள். 

ஜெயலலிதாவுக்கு விதி 110-ன்னா சசிகலாவுக்கு விதி 118. விதி 118 பிரிவின் முக்கிய விதியே, எதிர்க்கட்சி ஆட்களைப் பார்த்து லைட்டாகூடச் சிரிக்கக் கூடாதுங்கிறது தானாம். 118 பேர் ஆதரவுக்காகத் தற்போது நிகழும் அரசியல் காமெடிகள் எல்லாம் இந்த விதியின் உட்பிரிவுதான். இன்னும் இந்தப் பிரிவுல என்னென்ன ரூல்ஸ் இருக்குனு பார்ப்போம் வாங்க... 

* போயஸ் தோட்டத்தில் இருக்கும் குடிதண்ணீர்க் குழாய்களில் தண்ணி குறைவாக வந்தால்கூட அது ஓ.பி.எஸ்ஸும் எதிர்க்கட்சியும் சேர்ந்து நடத்துற கூட்டு சதித்திட்டம்னு அறிக்கை விடணும். 

சின்னம்மா

* விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும்போதும், முடியும்போதும் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொள்வது வழக்கம். சின்னம்மாவின் 118 விதிப்படி, இனிமேல் எதிரணி வீரர்களுடன் கை குலுக்கவோ, வாழ்த்துச் சொல்லவோ கூடாது. அப்படிச் செய்தால் `மேட்ச் ஃபிக்ஸிங்' எனக் கிளப்பிவிடப்பட்டு மொத்த ஆட்டமும் ரத்து செய்யப்படும். 

* கட்சி எம்.எல்.ஏ-க்கள் தினமும் ஒவ்வொருவராக 'கோட்டா' பிரித்துக்கொண்டு 'சின்னம்மா சி.எம்-மா வாங்கம்மா..!' என சசிகலாவை முதல்வராக வலியுறுத்தி டி..வி, பத்திரிகைகளுக்குப் பேட்டி தரவேண்டும். 

* 'சின்னம்மா' இடைத்தேர்தலில் போட்டியிட வசதியாக இதுவரை தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத்தயார் என அறிவிக்காத எம்.எல்.ஏ-க்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை!

* கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ரிசார்ட்- பஸ்- வேறு ரிசார்ட் என்கிற ரூட்டைவிட்டுத்  தனது கட்டுப்பாட்டை மீறி வேறு எங்கும் செல்லக் கூடாது. மீறினால் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு வருமான வரித்துறை ரெய்டு நடத்த ஆவன செய்யப்படும். 

* இன்னொரு முக்கியமான விதி, அ.தி.மு.க கழகக் கண்மணிகள் யாரும் தாங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட் முதல் பெட்டிக்கடை வரை எந்த இடங்களிலும் பன்னீர் சோடா வியாபாரம் செய்யக் கூடாது. மீறி பன்னீர் சோடா விற்பவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கப்படுவார்கள்.

* ஓ.பி.எஸ் வீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க எம்.எல்.ஏ-க்கள் வரிசையாகச் செல்வதால் அவர் வீடு இருக்கும் பகுதியில் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காமல் தடுக்க சிக்னல் ஜாமர் அமைக்கப்படும். (நீங்க சீப்பா போட்ட ப்ளானை நாங்க சீப்பை வெச்சே முடிப்போம்ல...)

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்