வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (11/02/2017)

கடைசி தொடர்பு:16:46 (11/02/2017)

அணிமாறும் தலைவர்கள்... பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர். இல்லை... இல்லை... ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் முதல்வராக அறிவிக்கப்பட்ட பெயர். அன்று, ஜெயலலிதா அறிவித்ததால்தானோ, என்னவோ தெரியவில்லை, இன்று அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் பலரும் பன்னீர்செல்வம் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். காரணம், தற்போது அந்தக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பூசல்.

குடும்ப அரசியல் என்று எதிர்க்கட்சியால் சொல்லப்பட்டு வந்த தி.மு.க கூட இப்போது அதைச் செய்யவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு... அந்தக் கட்சியில் குடும்ப அரசியல் நுழைந்து விட்டது. இதன் விளைவுதான் அந்தக் கட்சி, இன்று இரண்டாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 

பேச்சிமுத்துவாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வாய் திறந்து பேசாதவரை... அ.தி.மு.க-வில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவரை, மன்னார்குடி தரப்பு என்று பேச வைத்ததோ... அன்றே அந்தக் கட்சியில் சலசலப்பு ஆரம்பமாகி விட்டது. குறிப்பாக, 'மன்னார்குடி வகையறாவில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் தீவிரமாக விசுவாசம் காட்டக்கூடியவர்' என்று புகழப்பட்ட பன்னீர்செல்வம், அந்த இருவரால்தான் அரசியலில் பல முன்னணிப் பொறுப்புகளுக்கு (மாவட்டச் செயலாளர், அமைச்சர், முதல்வர்) வந்தார். 

பன்னீர்செல்வம்

‘‘2001-ம் ஆண்டு ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது, தனது நேரடி உறவினர்களில் ஒருவரை முதல்வராக்கினால், தேவையில்லாத விமர்சனங்கள் எழும் என நினைத்துத்தான் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கச் சொல்லியிருக்கிறார் சசிகலா’’ என்று அன்றே அ.தி.மு.க வட்டாரத்தில் காரணமும் சொல்லப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு... 2014-ம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டபோதும், பன்னீர் செல்வமே, இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவருடைய மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதல்வராக்கப்பட்டார். ‘‘ஆட்சிக் கட்டிலில் ஓ.பி.எஸ் தொடர்ந்தபோதிலும், சசிகலாவால் இன்னமும் அப்படியே ஆட்டிவைக்கப்படுகிறார்’’ என்றும் விமர்சனக் குரல்கள் எழத் தொடங்கின. இதை வைத்து,'பழைய பன்னீர்செல்வ'மாகவே அவர் நமக்கு இருப்பார்... அதனால் நிறைய காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த மன்னார்குடி வகையறாவுக்கு... அந்த ஆசையில் மண் விழத்தான் செய்தது. 

இதற்கிடையே, 'பன்னீர்செல்வம் என்றால் மிக்ஸர்' என்று சமூக வலைதளங்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அவர், 'வர்தா' புயல், ஜல்லிக்கட்டு விவகாரம், கிருஷ்ணா நீர் போன்ற மக்கள் பிரச்னைகளில் நேரடியாக தானே களத்தில் இறங்கி சிக்ஸர் அடிக்க ஆரம்பித்தார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவைவிட... மக்களின் ஆதரவு, அவருக்குப் பெருக ஆரம்பித்தது. இந்த நிலை இப்படியே நீடித்தால், நம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று நினைத்த மன்னார்குடி தரப்பு, பன்னீருக்கு செக் வைக்க ஆரம்பித்தது... அதற்காக அவரை அவமானப்படுத்தவும் செய்தது... தொடர்ந்து மிரட்டலும் விடுத்தது. இந்த நிலையில், உண்மை விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய மனதில் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகாண...சென்னை மெரினாவில் அடைக்கலமாகியிருக்கும் ஜெயலலிதாவின் சமாதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி சென்று திடீரென தியானம் மேற்கொண்டார்.

சுமார் நாற்பது நிமிடங்கள் நீடித்த இந்தத் தியானத்தில்... ஜெயலலிதாவின் ஆன்மா வந்து அவரிடம் பதிலளித்த திருப்தியில் தியானத்தைக் கலைத்ததுடன், தனது மௌனத்தையும் கலைத்தார்.  அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், சசிகலா தரப்பின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். மெளனம் ஒன்றையே தன் சக்திவாய்ந்த ஆயுதமாக வைத்திருந்த பன்னீர்செல்வத்துக்கு, அந்தப் பேட்டிதான், தமிழக அரசியலை மாற்ற இருக்கிறது என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, சசிகலா அளித்த பதிலும் அன்றைய நள்ளிரவிலேயே தமிழக மக்களை பரபரப்பில் ஆழ்த்தியது.  'பன்னீர்செல்வம் கட்சிப் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்' என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பதிலுக்குப் பதில் இருவரும் தங்கள் வாதங்களை எடுத்துவைக்க... தேன்கூடாய் இருந்த அ.தி.மு.க., தன் தேனீக்களை இழக்க ஆரம்பித்தது. 

பேட்டி கொடுக்கும் பன்னீர்செல்வம்

இதன்காரணமாக, பன்னீர்செல்வம் அறப்போராட்டத்தைக் கையிலெடுக்க... மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு சில நபர்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகரும், இயக்குநருமான விசு, ''அரசாங்கத்தை அவங்க கையில ஒப்படைச்சா அங்கேயும் யார் யாரோ வருவாங்க... என்னன்னம்மோ பண்ணுவாங்க. ஆகவே, பன்னீர்செல்வத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க'' என்று ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதேபோல், இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், ''மக்கள் பிரச்னைகளில் பன்னீர்செல்வம், மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்குப் பிடித்துள்ளன. சசிகலா மீண்டும் பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார். அவருக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை'' என்று சசிகலா தரப்புக்குத் தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

இப்படித் திரைப்படத் துறையினரின் ஆதரவு ஒருபுறம் இருக்க... அந்தக் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் பி.ஹெச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மதுசூதனன்  ஆகியோர் அவரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதுதவிர, கவுண்டம்பாளையம், ஊத்தங்கரை, சோழவந்தான், வாசுதேவநல்லூர், ஶ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்களும் பன்னீர்செல்வத்துடன் கைகோத்துள்ளனர். 

இப்படி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு பயந்த மன்னை குரூப், மற்ற எம்.எல்.ஏ-க்களை இரண்டு பேருந்துகளில் ஏற்றிச் சென்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைத்துள்ளது. அங்கே, அவர்களுக்குச் சகல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சசிகலா, முதல்வராகப் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அவர்கள் பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அங்கே சிறை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிலும் பலர் பன்னீர்செல்வத்துக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இக்கட்டான சூழலில் சசிகலாவும், பன்னீர்செல்வமும் சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தனித்தனியாகச் சந்தித்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க கட்சியின் விதிகளில் இடமில்லை என்றும் தெரிவித்து கவர்னரிடம் மனு அளித்தார். எம்.எல்.ஏக்கள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் புகார் மனுவையும் அப்போது அளித்தார், இதைத்தொடர்ந்து, கவர்னரைச் சந்தித்த சசிகலா, தன்னை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னரிடம் அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதற்கு அவர், ''உரிய ஆலோசனைக்குப் பிறகு, இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்று கூறியதோடு... அதுதொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிவைத்தார்.

தமிழக பொறுப்பு ஆளுநரிடம் மனு அளிக்கும் பன்னீர்செல்வம்...

இந்த நிலையில் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டுள்ள பல எம்.எல்.ஏ-க்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும், சிலரைக் காணவில்லை என்றும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. ''இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மன்னை குரூப்பிடம் அடிமையாக இருக்க முடியாது. அவர்கள் செய்த சதிச் செயல்களில் நாமும் பங்குகொள்ளக் கூடாது. மீண்டும் தொகுதிப் பக்கம் போகவேண்டும் என்றால் பன்னீர்செல்வத்துடன் மட்டுமே கைகோக்க வேண்டும்'' என்று சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களில் சிலர் தமக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்களாம். 

‘ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும்’ என்று ‘ஜூனியர் விகடன்’ நடத்திய சர்வேயில், முதலிடத்தில் ஜெ-வின் அண்ணன் மகளான தீபாவும், இரண்டாவது இடத்தில் பன்னீர்செல்வமும் இடம்பிடித்திருந்தனர். ஜெ-வின் 33 வருட கால உடன்பிறவாத் தோழி என்று அழைக்கப்படும் சசிகலா, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, பிற இணையதளங்கள் நடத்திய சர்வேயிலும் பன்னீர்செல்வத்துக்கே மக்கள் ஆதரவு இருக்கிறது. 

மக்களிடம் குறைகேட்கும் பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், ''இப்போது அ.தி.மு.க-வில் குடும்ப அரசியல் நுழைந்து விட்டது. ஆட்சியையும், கட்சியையும் மன்னார்குடி தரப்பு ஒருசேர வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆகவே, விஷயம் தெரிந்தவர்களை இங்கே வைத்திருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியாது எனபதையறிந்து அவர்களை எல்லாம் அவமானப்படுத்தி வெளியேற்ற நினைத்தனர். அதற்குள்ளேயே பன்னீர்செல்வம் முந்திக்கொண்டார். அவர்களுடைய சதிச் செயல்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச காலங்களில் வெளியே வரும். ஆட்சியையும், கட்சியையும் நிர்வகிக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜெயலலிதா சேர்த்துவைத்துவிட்டுப் போன சொத்தையும், ஆட்சியையும் பங்குபோடக் குறியாய் இருக்கிறார்கள்.

அதற்காக எம்.எல்.ஏ-க்களை மிரட்டிச் சிறை வைத்துள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு பதவி மீது விருப்பமில்லை. அவர், 'சசிகலா முதல்வராகக் கூடாது' என்றுதான் நினைக்கிறார். கட்சியும், ஆட்சியும் சசிகலாவிடம் இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. மக்கள், அனைவரும் அவரை வெறுக்கிறார்கள். அதனால்தான் அவர், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களை வைத்து தாம் ஆட்சியில் அமர காய் நகர்த்தி வருகிறார். பணத்துக்காகவும், பதவிக்காகவும் அவர்கள் அந்தக் குரூப்பைத் தேடி ஓடுகிறார்கள். இவர்களுடன் இன்று செல்லும் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ-க்களும் நாளை அந்தத் தொகுதி மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவர். இப்போதும் எங்களுக்குப் பிரச்னையில்லை. நாங்கள் ஆட்சியில் அமரவும் ஆசைப்படவில்லை. இன்னும் 20 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் வந்தால், ஆட்சி தன்னாலேயே கலைக்கப்படும். மீண்டும் தேர்தல் வரும். அப்போது தெரிந்துவிடும் இவர்களின் சுயரூபம். மேலும் சில எம்.எல்.ஏக்கள் விரைவில் எங்களிடம் வர இருக்கிறார்கள்'' என்றனர், நம்பிக்கையுடன்.

'மக்கள் தீர்ப்பே... மகேசன் தீர்ப்பு' என உணர்ந்து மன்னார்குடி தரப்பு செயல்பட வேண்டும் என்பதே சாமான்ய அ.தி.மு.க. தொண்டனின் விருப்பமாக உள்ளது.

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்