வெல்லப்போவது?... 5 சி-யா?.. 4 சி-யா? பி.பி. எகிறும் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள்...! #OPSVsSasikala | Will Sasikala MLAs Fall prey for money? #OPSVsSasikala

வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (10/02/2017)

கடைசி தொடர்பு:16:47 (11/02/2017)

வெல்லப்போவது?... 5 சி-யா?.. 4 சி-யா? பி.பி. எகிறும் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள்...! #OPSVsSasikala

சசிகலா

சிகலா கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சுமார் 100 பேரை, 20 அமைச்சர்கள் பாதுகாத்து வருகிறார்கள். எம்.எல்.ஏ-க்களை ஸ்பெஷலாகக் கவனித்துக்கொள்ளும் அசைன்மென்ட்டை 'பசை' உள்ள துறைகளைத் தன்வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, அன்பழகன், விஜயபாஸ்கர், ரெயின்போ விஜயபாஸ்கர்... என்று சில அமைச்சர்களிடம் விட்டிருக்கிறார் சசிகலா. 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ரோட்டில் கூவத்தூர் கிராமத்தில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் 60 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அங்கிருந்து பத்து கி.மீ. தூரத்தில் உள்ள இன்னொரு ரிசார்ட்ஸில் 40 எம்.எல்.ஏ-க்கள்... என இரண்டு பிரிவாகப் பிரித்துத் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பிரிவுக்கு அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் போன்றவர்கள் காவல் காக்கிறார்கள். இரண்டாவது பிரிவுக்கு செல்லூர் ராஜ், கடம்பூர் ராஜ், ரெயின்போ விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ்... என அமைச்சர்கள் பட்டாளம் பாதுகாக்கிறது. இரண்டு பிரிவினருக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல், சினிமா சண்டைப் பயிற்சி... இங்கிருந்தெல்லாம் பவுன்சர்களைத் தேடிப்பிடித்து 200 பேரை அழைத்துவந்துள்ளனர். தலைக்குத் தினமும் நான்காயிரம் ரூபாய் சம்பளம். மூன்று நாட்களுக்கு பணி என்று சொல்லி எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்ஸ்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். 

எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசியபோது, ''எது கேட்டாலும் கிடைக்கிறது. ரொம்ப ஜாலியாக இருக்கிறோம்'' என்று சிரித்தபடி சொல்கிறார். எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை என்று தொகுதிகளில் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துள்ளனர். சேலம் கமிஷனர் ஆபீஸில் புகார் தந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை. மீட்டுத்தரும்படி மனுதாக்கல் ஆகிறது. இந்த நிலையில், சில எம்.எல்.ஏ-க்களை போய் ரிசார்ட்ஸ் வாசலில் நிற்கும் மீடியாக்களிடம், 'சுயவிருப்பத்தின் பேரில்தான் தங்கியிருக்கிறோம். எங்களை யாரும் கடத்தவில்லை' என்று கூறச் சொல்லி, அமைச்சர்கள் உத்தரவிட... அதன்படியே மீடியாக்களிடம் பேட்டி தந்தனர். ''ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் போனில் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதனால்தான், பாதுகாப்புக்காக ரிசார்ட்ஸில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்று கட்சியின் சீனியர் பிரமுகர் வளர்மதி மீடியாக்களிடம் பேசினார். 

கோல்டன் பே ரிசார்ட்

இது ஒருபுறமிருக்க... பணம் பேரம் எந்த லெவலில் இருக்கிறது என்று ஒ.பி.எஸ் கோஷ்டி பிரமுகரிடம் கேட்டபோது, ''சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-க்களை, அமைச்சர் எடப்பாடி வீட்டுக்கு அழைத்துப் போனபோது, அவர்களின் தற்போதைய வீட்டு முகவரி, தகவல்தொடர்பு நபர் பெயர், போன் எண்களைக் கேட்டு வாங்கினர். ''எதற்கு'' என்று கேட்டபோது, ''ஏதாவது கடித பார்சல்'' தருவதற்காக என்றார்களாம். சட்டென்று எம்.எல்.ஏ-க்களுக்குப் புரிந்துவிட்டது. அதாவது, எம்.எல்.ஏ-க்களுக்கு சில கோடிகள் தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் பணத்தைத் திரட்ட முடியவில்லை. மொத்தமாக பல கோடி ரூபாயை புது நோட்டாக திரட்டுவதற்கு படாதபாடுபடுகிறார்கள். பணம் திரட்டும்வரை, எம்.எல்.ஏ-க்களை அடிக்கடி இடம் மாற்றித் தங்கவைத்தபடி பாதுகாக்கிறார்கள். இவர்களின் திட்டப்படி, தற்போதுள்ள ரிசார்ட்களை விட்டு காலிசெய்து, பிப்ரவரி 11, 12 தேதிகளில் புதுச்சேரி கடற்கரைப் பக்கம் செல்ல இருக்கிறார்கள்'' என்றார். 

ஆனால், சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-க்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது... எங்கே கை மாறுகிறது என்றெல்லாம் உன்னிப்பாக வருமானவரித் துறையினர் கவனித்து வருகிறார்கள். பழைய நோட்டுகளுக்கு புதிய நோட்டை யார் மாற்றித் தருகிறார்கள் என்று வலைவீசி தேடிவருகிறார்கள். சென்னையின் முக்கியப் புள்ளிகளை காரில் மறைமுகமாக பின்தொடர்வது, போன் உரையாடலைக் கண்காணிப்பது என்று இறுக்கிவருகிறார்கள். இதனால், சசிகலா கோஷ்டிப் புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

பன்னீர்செல்வம்

சரி... இவர்கள் இப்படி என்றால், ஒ.பி.எஸ் கோஷ்டியினர் நிலை என்ன என்று சசிகலா கோஷ்டி பிரமுகரிடம் கேட்டபோது, ''ஒ.பி.எஸ் கோஷ்டியில் அவரைத் தவிர, ஐந்து எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இவர்கள் தரப்பில் படு குஷியாக இருக்கிறார்கள். இவர்களுக்கும் பெருந்தொகை முதல் ரவுண்டிலேயே செட்டில் செய்துவிட்டார்களாம். தென் மாவட்டங்களுக்கு, தென் கோடி தமிழகத்து பிசினஸ் பிரமுகர் ஒருவர் நிதி உதவி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கான நிதியை மணல் பிரமுகர் ஒருவரின் ஆட்கள் கவனித்துக்கொள்கின்றனர். மேற்கு மாவட்டங்களை லாட்டரி பிரமுகர் ஒருவர் கவனிக்கிறார். வடக்கு மாவட்டங்களுக்கான நிதி உதவியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் செய்கிறார். இவர்கள் கோஷ்டிக்கு தாவினால், ஒரே செட்டில்மென்ட் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். வருமானவரித் துறையினரும் கண்டும்காணாமல் இருக்கிறார்கள். வெளிமாநில வங்கிகளில் எங்கே போனால், பழைய நோட்டுக்குப் புதுநோட்டு கிடைக்கும் என்றெல்லாம் க்ளூ கொடுத்து அனுப்புகிறார்கள் மத்திய அரசின் சில அதிகாரிகள். கொடுமையாக இருக்கிறது. எங்கே போய் முடியுமோ'' என்கிறார்.

இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் வரும் என்று பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மதுசூதனன் அறிவித்துள்ளார்.

- ஆர்.பி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close